தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இரும் பிழி மகாஅர்

இரும் பிழி மகாஅர்

 

122. குறிஞ்சி
இரும் பிழி மகாஅர் இவ் அழுங்கல் மூதூர்
விழவு இன்றுஆயினும் துஞ்சாது ஆகும்;
மல்லல் ஆவண மறுகு உடன் மடியின்,
வல் உரைக் கடுஞ் சொல் அன்னை துஞ்சாள்;
5
பிணி கோள் அருஞ் சிறை அன்னை துஞ்சின்,
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்;
இலங்குவேல் இளையர் துஞ்சின், வை எயிற்று
வலம் சுரித் தோகை ஞாளி மகிழும்;
அர வாய் ஞமலி மகிழாது மடியின்,
10
பகல் உரு உறழ நிலவுக் கான்று விசும்பின்
அகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே;
திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின்,
இல் எலி வல்சி வல் வாய்க் கூகை
கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்;
15
வளைக்கண் சேவல் வாளாது மடியின்,
மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும்;
எல்லாம் மடிந்தகாலை, ஒரு நாள்
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே; அதனால்,
அரி பெய் புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து,
20
ஆதி போகிய பாய்பரி நன் மா
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
கல் முதிர் புறங்காட்டு அன்ன
பல் முட்டின்றால் தோழி! நம் களவே.
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய், தலைமகன் சொற்றது; தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - பரணர்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 16:32:43(இந்திய நேரம்)