தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இலங்கு வளை நெகிழச்

இலங்கு வளை நெகிழச்

 

127. பாலை
இலங்கு வளை நெகிழச் சாஅய், அல்கலும்,
கலங்குஅஞர் உழந்து, நாம் இவண் ஒழிய
வலம் படு முரசிற் சேரலாதன்
முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து, இமயத்து
5
முன்னோர் மருள வணங்குவில் பொறித்து,
நல் நகர் மரந்தை முற்றத்து ஒன்னார்
பணி திறை தந்த பாடுசால் நன்கலம்
பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்று வாய் நிறையக் குவைஇ, அன்று அவண்
10
நிலம் தினத் துறந்த நிதியத்து அன்ன
ஒரு நாள் ஒரு பகற் பெறினும், வழிநாள்
தங்கலர் வாழி, தோழி! செங் கோற்
கருங் கால் மராத்து வாஅல் மெல் இணர்
சுரிந்து வணர் பித்தை பொலியச் சூடி,
15
கல்லா மழவர் வில் இடம் தழீஇ,
வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும்,
பழி தீர் காதலர் சென்ற நாட்டே.
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 16:33:58(இந்திய நேரம்)