தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உரும் உரறு கருவிய

உரும் உரறு கருவிய

 

158. குறிஞ்சி
'உரும் உரறு கருவிய பெரு மழை தலைஇ,
பெயல் ஆன்று அவிந்த தூங்குஇருள் நடுநாள்,
மின்னு நிமிர்ந்தன்ன கனங்குழை இமைப்ப,
பின்னு விடு நெறியின் கிளைஇய கூந்தலள்,
5
வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி,
மிடை ஊர்பு இழிய, கண்டனென், இவள்' என
அலையல் வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைச்
சூருடைச் சிலம்பில், சுடர்ப்பூ வேய்ந்து
தாம் வேண்டு உருவின் அணங்குமார் வருமே;
10
நனவின் வாயே போலத் துஞ்சுநர்க்
கனவு ஆண்டு மருட்டலும் உண்டே; இவள்தான்
சுடர் இன்று தமியளும் பனிக்கும்; வெருவர
மன்ற மராஅத்த கூகை குழறினும்,
நெஞ்சு அழிந்து அரணம் சேரும்; அதன்தலைப்
15
புலிக் கணத்தன்ன நாய் தொடர்விட்டு,
முருகன் அன்ன சீற்றத்துக் கடுந் திறல்
எந்தையும் இல்லன் ஆக,
அஞ்சுவள் அல்லளோ, இவள் இது செயலே?
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி செவிலித்தாய்க்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்பச் சொல்லியது. - கபிலர்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 16:36:26(இந்திய நேரம்)