தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உலகு கிளர்ந்தன்ன உரு கெழு

உலகு கிளர்ந்தன்ன உரு கெழு

 

255. பாலை
உலகு கிளர்ந்தன்ன உரு கெழு வங்கம்
புலவுத் திரைப் பெருங் கடல் நீர் இடைப் போழ,
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி,
விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட,
5
கோடு உயர் திணி மணல் அகன் துறை, நீகான்
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய,
ஆள் வினைப் பிரிந்த காதலர் நாள் பல
கழியாமையே, அழி படர் அகல,
வருவர்மன்னால் தோழி! தண் பணைப்
10
பொரு புனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண்,
கருவிளை முரணிய தண் புதல் பகன்றை
பெரு வளம் மலர அல்லி தீண்டி,
பலவுக் காய்ப் புறத்த பசும் பழப் பாகல்
கூதள மூதிலைக் கொடி நிரைத் தூங்க,
15
அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை
கடி மனை மாடத்துக் கங்குல் வீச,
'திருந்துஇழை நெகிழ்ந்து பெருங் கவின் சாய,
நிரை வளை ஊருந் தோள்' என,
உரையொடு செல்லும் அன்பினர்ப் பெறினே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூரத், தோழிக்குச் சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 16:36:48(இந்திய நேரம்)