தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உன்னம் கொள்கையொடு

உன்னம் கொள்கையொடு

 

65. பாலை
உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும்
அன்னை சொல்லும் உய்கம்; என்னதூஉம்
ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிச்
சேரிஅம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்;
5
நாடு கண் அகற்றிய உதியஞ்சேரற்
பாடிச் சென்ற பரிசிலர் போல
உவ இனி வாழி, தோழி! அவரே,
பொம்மல் ஓதி! நம்மொடு ஒராங்குச்
செலவு அயர்ந்தனரால் இன்றே மலைதொறும்
10
மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி,
மீன் கொள் பரதவர் கொடுந் திமில் நளி சுடர்
வான் தோய் புணரிமிசைக் கண்டாங்கு,
மேவரத் தோன்றும் யாஅ உயர் நனந்தலை
உயவல் யானை வெரிநுச் சென்றன்ன
15
கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி,
காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல்
ஆறு கடிகொள்ளும் அருஞ் சுரம்; 'பணைத் தோள்,
நாறு ஐங் கூந்தல், கொம்மை வரி முலை,
நிரை இதழ் உண்கண், மகளிர்க்கு
20
அரியவால்' என அழுங்கிய செலவே!
வேறுப்பட்ட தலைமகட்குத் தலைமகன் உடன்போக்கு வலித்தமை தோழி சொல்லியது. - மாமூலனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 16:38:22(இந்திய நேரம்)