தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வாடல் உழுஞ்சில்

வாடல் உழுஞ்சில்

 

45. பாலை
வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர்
ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்ப,
கோடை நீடிய அகன் பெருங் குன்றத்து,
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு,
5
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும்
காடு இறந்தனரே, காதலர். மாமை,
அரி நுண் பசலை பாஅய், பீரத்து
எழில் மலர் புரைதல்வேண்டும். அலரே,
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
10
தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணி,
புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர்
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே. யானே,
காதலற் கெடுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து,
ஆதிமந்தி போல, பேதுற்று
15
அலந்தனென் உழல்வென்கொல்லோ பொலந்தார்,
கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல்,
வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய
உடை மதில் ஓர் அரண் போல,
அஞ்சுவரு நோயொடு, துஞ்சாதேனே!
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 16:51:17(இந்திய நேரம்)