தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கதிர் கையாக வாங்கி

கதிர் கையாக வாங்கி

 

164. முல்லை
கதிர் கையாக வாங்கி, ஞாயிறு
பைது அறத் தெறுதலின், பயம் கரந்து மாறி,
விடுவாய்ப்பட்ட வியன் கண் மா நிலம்
காடு கவின் எதிரக் கனை பெயல் பொழிதலின்;
5
பொறி வரி இன வண்டு ஆர்ப்ப, பல உடன்
நறு வீ முல்லையொடு தோன்றி தோன்ற.
வெறி ஏன்றன்றே வீ கமழ் கானம்.
'எவன்கொல் மற்று அவர் நிலை?' என மயங்கி,
இகு பனி உறைக்கும் கண்ணொடு இனைபு, ஆங்கு
10
இன்னாது உறைவி தொல் நலம் பெறூஉம்
இது நற் காலம்; கண்டிசின் பகைவர்
மதில் முகம் முருக்கிய தொடி சிதை மருப்பின்,
கந்து கால் ஒசிக்கும் யானை,
வெஞ் சின வேந்தன் வினை விடப்பெறினே!
பாசறைக்கண் இருந்த தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகன்தேவனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 16:56:13(இந்திய நேரம்)