தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கூழையும் குறு நெறிக் கொண்டன

கூழையும் குறு நெறிக் கொண்டன

 

315. பாலை
'கூழையும் குறு நெறிக் கொண்டன; முலையும்
சூழி மென் முகம் செப்புடன் எதிரின;
பெண் துணை சான்றனள், இவள்' எனப் பல் மாண்
கண் துணை ஆக நோக்கி, நெருநையும்,
5
அயிர்த்தன்றுமன்னே, நெஞ்சம்; பெயர்த்தும்,
அறியாமையின் செறியேன், யானே;
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன்
அருங் கடி வியல் நகர்ச் சிலம்பும் கழியாள்,
சேணுறச் சென்று, வறுஞ் சுனைக்கு ஒல்கி,
10
புறவுக் குயின்று உண்ட புன் காய் நெல்லிக்
கோடை உதிர்த்த குவி கண் பசுங் காய்,
அறு நூல் பளிங்கின் துளைக் காசு கடுப்ப,
வறு நிலத்து உதிரும் அத்தம், கதுமென,
கூர் வேல் விடலை பொய்ப்பப் போகி,
15
சேக்குவள் கொல்லோதானே தேக்கின்
அகல் இலை கவித்த புதல் போல் குரம்பை,
ஊன் புழுக்கு அயரும் முன்றில்,
கான் கெழு வாழ்நர் சிறுகுடியானே.
மகட் போக்கிய தாய் சொல்லியது. - குடவாயில் கீரத்தனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:03:35(இந்திய நேரம்)