தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கூறுவம்கொல்லோ

கூறுவம்கொல்லோ

 

198. குறிஞ்சி
'கூறுவம்கொல்லோ? கூறலம்கொல்?' எனக்
கரந்த காமம் கைந்நிறுக்கல்லாது,
நயந்து நாம் விட்ட நல் மொழி நம்பி,
அரை நாள் யாமத்து விழு மழை கரந்து;
5
கார் விரை கமழும் கூந்தல், தூ வினை
நுண் நூல் ஆகம் பொருந்தினள், வெற்பின்
இள மழை சூழ்ந்த மட மயில் போல,
வண்டு வழிப் படர, தண் மலர் வேய்ந்து,
வில் வகுப்புற்ற நல் வாங்கு குடைச் சூல்
10
அம் சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து,
துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள், பெயர்வோள்,
ஆன்ற கற்பின் சான்ற பெரியள்,
அம் மா அரிவையோ அல்லள்; தெனாஅது
ஆஅய் நல் நாட்டு அணங்குடைச் சிலம்பில்,
15
கவிரம் பெயரிய உரு கெழு கவாஅன்,
ஏர் மலர் நிறை சுனை உறையும்
சூர்மகள்மாதோ என்னும் என் நெஞ்சே!
புணர்ந்து நீங்கிய தலைமகளது போக்கு நோக்கிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:03:56(இந்திய நேரம்)