தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கூன் முள் முள்ளிக்

கூன் முள் முள்ளிக்

 

26. மருதம்
கூன் முள் முள்ளிக் குவிகுலைக் கழன்ற,
மீன் முள் அன்ன, வெண் கால் மா மலர்
பொய்தல் மகளிர் விழவு அணிக் கூட்டும்
அவ் வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனைப்
5
புலத்தல் கூடுமோ தோழி! அல்கல்
பெருங் கதவு பொருத யானை மருப்பின்
இரும்பு செய் தொடியின் ஏர ஆகி,
மாக் கண் அடைய மார்பகம் பொருந்தி
முயங்கல் விடாஅல் இவை' என மயங்கி,
10
'யான் ஓம்' என்னவும் ஒல்லார், தாம் மற்று
இவை பாராட்டிய பருவமும் உளவே; இனியே
புதல்வற் தடுத்த பாலொடு தடைஇ,
திதலை அணிந்த தேம் கொள் மென் முலை
நறுஞ் சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம்
15
வீங்க முயங்கல் யாம் வேண்டினமே;
தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே; ஆயிடைக்
கவவுக் கை நெகிழ்ந்தமை போற்றி, மதவு நடைச்
செவிலி கை என் புதல்வனை நோக்கி,
'நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர்; இஃதோ
20
செல்வற்கு ஒத்தனம், யாம்' என, மெல்ல என்
மகன்வயின் பெயர்தந்தேனே; அது கண்டு,
'யாமும் காதலம், அவற்கு' எனச் சாஅய்,
சிறு புறம் கவையினனாக, உறு பெயல்
தண் துளிக்கு ஏற்ற பல உழு செஞ் செய்
25
மண் போல் நெகிழ்ந்து, அவற் கலுழ்ந்தே
நெஞ்சு அறைபோகிய அறிவினேற்கே?
தலைமகன் தோழியை வாயில் வேண்டி, அவளால் தான் வாயில் பெறாது,ஆற்றாமையே வாயிலாகப் புக்கு, கூடிய தலைமகன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:04:06(இந்திய நேரம்)