தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கோடு உயர் பிறங்கற்

கோடு உயர் பிறங்கற்

 

393. பாலை
கோடு உயர் பிறங்கற் குன்று பல நீந்தி,
வேறு புலம் படர்ந்த வினை தரல் உள்ளத்து
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய,
முதைச் சுவற் கலித்த ஈர் இலை நெடுந் தோட்டுக்
5
கவைக் கதிர் வரகின் கால் தொகு பொங்கழி,
கவட்டு அடிப் பொருத பல் சினை உதிர்வை
அகன் கண் பாறைச் செவ்வயின் தெறீஇ,
வரி அணி பணைத் தோள் வார் செவித் தன்னையர்
பண்ணை வெண் பழத்து அரிசி ஏய்ப்ப,
10
சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ்
தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி,
உரல்முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை,
ஆங்கண் இருஞ் சுனை நீரொடு முகவா,
களி படு குழிசிக் கல் அடுப்பு ஏற்றி,
15
இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின்,
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ்ப் புன்கம்,
மதர்வை நல் ஆன் பாலொடு, பகுக்கும்
நிரை பல குழீஇய நெடுமொழிப் புல்லி
தேன் தூங்கு உயர் வரை நல் நாட்டு உம்பர்,
20
வேங்கடம் இறந்தனர்ஆயினும், ஆண்டு அவர்
நீடலர் வாழி, தோழி! தோடு கொள்
உரு கெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்ப,
தகரம் மண்ணிய தண் நறு முச்சி,
புகர் இல் குவளைப் போதொடு தெரி இதழ்
25
வேனில் அதிரல் வேய்ந்த நின்
ஏமுறு புணர்ச்சி இன் துயில் மறந்தே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:06:18(இந்திய நேரம்)