தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சாரல் யாஅத்து

சாரல் யாஅத்து

 

337. பாலை
'சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த
மாரி ஈர்ந் தளிர் அன்ன மேனி,
பேர் அமர் மழைக் கண், புலம்பு கொண்டு ஒழிய,
ஈங்குப் பிரிந்து உறைதல் இனிது அன்று; ஆகலின்
5
அவணது ஆக, பொருள்' என்று, உமணர்
கண நிரை அன்ன, பல் கால், குறும்பொறை,
தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலைப்
படையுடைக் கையர் வரு தொடர் நோக்கி,
'உண்ணா மருங்குல் இன்னோன் கையது
10
பொன் ஆகுதலும் உண்டு' என, கொன்னே
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்,
திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கி,
செங் கோல் அம்பினர் கைந் நொடியாப் பெயர,
கொடி விடு குருதித் தூங்கு குடர் கறீஇ,
15
வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை,
வெண் பரல் இமைக்கும் கண் பறி கவலை,
கள்ளி நீழல் கதறுபு வதிய,
மழை கண்மாறிய வெங் காட்டு ஆர் இடை,
எமியம் கழிதந்தோயே பனி இருள்
20
பெருங் கலி வானம் தலைஇய
இருங் குளிர் வாடையொடு வருந்துவள் எனவே!
முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்து வந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:07:13(இந்திய நேரம்)