தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தயங்கு திரைப் பெருங் கடல்

தயங்கு திரைப் பெருங் கடல்

 

263. பாலை
தயங்கு திரைப் பெருங் கடல், உலகு தொழத் தோன்றி,
வயங்கு கதிர் விரிந்த, உரு கெழு மண்டிலம்
கயம் கண் வறப்பப் பாஅய், நல் நிலம்
பயம் கெடத் திருகிய பைது அறு காலை,
5
வேறு பல் கவலைய வெருவரு வியன் காட்டு,
ஆறு செல் வம்பலர் வரு திறம் காண்மார்,
வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி,
நீடு நிலை யாஅத்துக் கோடு கொள் அருஞ் சுரம்
கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்கு,
10
அவள் துணிவு அறிந்தனென்ஆயின், அன்னோ!
ஒளிறு வேல் கோதை ஓம்பிக் காக்கும்
வஞ்சி அன்ன என் வள நகர் விளங்க,
இனிதினின் புணர்க்குவென் மன்னோ துனி இன்று
திரு நுதல் பொலிந்த என் பேதை
15
வரு முலை முற்றத்து ஏமுறு துயிலே!
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கருவூர்க் கண்ணம்பாளனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:11:26(இந்திய நேரம்)