தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

துஞ்சுவது போல இருளி

துஞ்சுவது போல இருளி

 

139. பாலை
துஞ்சுவது போல இருளி, விண் பக
இமைப்பது போல மின்னி, உறைக்கொண்டு
ஏறுவது போலப் பாடு சிறந்து உரைஇ,
நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு,
5
ஆர் தளி பொழிந்த வார் பெயற் கடை நாள்;
ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை
வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை,
புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை,
தண் நறும் படுநீர் மாந்தி, பதவு அருந்து
10
வெண் புறக்கு உடைய திரிமருப்பு இரலை;
வார் மணல் ஒரு சிறைப் பிடவு அவிழ் கொழு நிழல்,
காமர் துணையொடு ஏமுற வதிய;
அரக்கு நிற உருவின் ஈயல் மூதாய்
பரப்பியவைபோற் பாஅய், பல உடன்
15
நீர் வார் மருங்கின் ஈரணி திகழ;
இன்னும் வாரார் ஆயின் நன்னுதல்!
யாதுகொல் மற்றுஅவர் நிலையே? காதலர்
கருவிக் கார்இடி இரீஇய
பருவம் அன்று, அவர், 'வருதும்' என்றதுவே.
பிரிவிடை மெலிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - இடைக்காடனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:13:34(இந்திய நேரம்)