தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

துன் அருங் கானமும்

துன் அருங் கானமும்

 

181. பாலை
துன் அருங் கானமும் துணிதல் ஆற்றாய்,
பின் நின்று பெயரச் சூழ்ந்தனைஆயின்,
என் நிலை உரைமோ நெஞ்சே! ஒன்னார்
ஓம்பு அரண் கடந்த வீங்கு பெருந் தானை
5
அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ,
முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப,
ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று
ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு
வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந் தோடு
10
விசும்பிடை தூர ஆடி, மொசிந்து உடன்,
பூ விரி அகன் துறைக் கணை விசைக் கடு நீர்க்
காவிரிப் பேர் யாற்று அயிர் கொண்டு ஈண்டி,
எக்கர் இட்ட குப்பை வெண் மணல்
வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர்
15
ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை,
நான் மறை முது நூல் முக்கட் செல்வன்,
ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய
பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர்
கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும்
20
மகர நெற்றி வான் தோய் புரிசைச்
சிகரம் தோன்றாச் சேண் உயர் நல் இல்
புகாஅர் நல் நாட்டதுவே பகாஅர்
பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால்,
பணைத் தகைத் தடைஇய காண்பு இன் மென் தோள்,
25
அணங்குசால், அரிவை இருந்த
மணம் கமழ் மறுகின் மணற் பெருங் குன்றே.
இடைச் சுரத்து ஒழியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:13:57(இந்திய நேரம்)