தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தோட் பதன் அமைத்த

தோட் பதன் அமைத்த

 

79. பாலை
தோட் பதன் அமைத்த கருங் கை ஆடவர்
கனை பொறி பிறப்ப நூறி, வினைப் படர்ந்து,
கல்லுறுத்து இயற்றிய வல் உவர்ப் படுவில்,
பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய
5
வன் புலம் துமியப் போகி, கொங்கர்
படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும்
சேதா எடுத்த செந் நிலக் குரூஉத் துகள்
அகல் இரு விசும்பின் ஊன்றித் தோன்றும்
நனந்தலை அழுவம், நம்மொடு துணைப்ப,
10
'வல்லாங்கு வருதும்' என்னாது, அல்குவர
வருந்தினை வாழி, என் நெஞ்சே! இருஞ் சிறை
வளை வாய்ப் பருந்தின் வான் கட் பேடை,
ஆடுதொறு கனையும் அவ் வாய்க் கடுந் துடிக்
கொடு வில் எயினர் கோட் சுரம் படர,
15
நெடு விளி பயிற்றும் நிரம்பா நீள் இடை,
கல் பிறங்கு அத்தம் போகி,
நில்லாப் பொருட் பிணிப் பிரிந்த நீயே.
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:16:36(இந்திய நேரம்)