தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நல் நெடுங் கதுப்பொடு

நல் நெடுங் கதுப்பொடு

 

283. பாலை
நல் நெடுங் கதுப்பொடு பெருந் தோள் நீவி,
நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும்,
செலவு தலைக்கொண்ட பெரு விதுப்பு உறுவி
பல் கவர் மருப்பின் முது மான் போக்கி,
5
சில் உணாத் தந்த சீறூர்ப் பெண்டிர்
திரிவயின், தெவுட்டும் சேண் புலக் குடிஞைப்
பைதல் மென் குரல் ஐது வந்து இசைத்தொறும்,
போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு
அரிய ஆகும் என்னாமை, கரி மரம்
10
கண் அகை இளங் குழை கால்முதல் கவினி,
விசும்புடன் இருண்டு, வெம்மை நீங்க,
பசுங் கண் வானம் பாய் தளி பொழிந்தென,
புல் நுகும்பு எடுத்த நல் நெடுங் கானத்து,
ஊட்டுறு பஞ்சிப் பிசிர் பரந்தன்ன
15
வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப,
இனிய ஆகுக தணிந்தே
இன்னா நீப்பின் நின்னொடு செலற்கே.
உடன்போக்கு வலித்த தோழி தலைமகற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:19:15(இந்திய நேரம்)