தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நறவு உண் மண்டை

நறவு உண் மண்டை

 

96. மருதம்
நறவு உண் மண்டை நுடக்கலின், இறவுக் கலித்து,
பூட்டு அறு வில்லின் கூட்டுமுதல் தெறிக்கும்
பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின்
அர வாய் அன்ன அம் முள் நெடுங் கொடி
5
அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி,
அசைவரல் வாடை தூக்கலின், ஊதுஉலை
விசை வாங்கு தோலின், வீங்குபு ஞெகிழும்
கழனிஅம் படப்பைக் காஞ்சி ஊர!
'ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து
10
கொண்டனை' என்ப 'ஓர் குறுமகள்' அதுவே
செம்பொற் சிலம்பின், செறிந்த குறங்கின்,
அம் கலுழ் மாமை, அஃதை தந்தை,
அண்ணல் யானை அடு போர்ச் சோழர்,
வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை,
15
இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய,
ஒளிறு வாள் நல் அமர்க் கடந்த ஞான்றை,
களிறு கவர் கம்பலை போல,
அலர் ஆகின்றது, பலர் வாய்ப் பட்டே.
தோழி வாயில் மறுத்தது. மருதம் பாடிய இளங்கடுங்கோ
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:19:35(இந்திய நேரம்)