தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நின் வாய் செத்து

நின் வாய் செத்து

 

126. மருதம்
நின் வாய் செத்து நீ பல உள்ளி,
பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும்,
மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம்
தலை நாள் மா மலர் தண் துறைத் தயங்கக்
5
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று
அறல் வார் நெடுங் கயத்து அரு நிலை கலங்க,
மால் இருள் நடுநாட் போகி, தன் ஐயர்
காலைத் தந்த கணைக் கோட்டு வாளைக்கு,
அவ் வாங்கு உந்தி, அம் சொல், பாண்மகள்,
10
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில்
பழஞ் செந் நெல்லின் முகவை கொள்ளாள்,
கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்
பயம் கெழு வைப்பிற் பல் வேல் எவ்வி
நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான்,
15
பொன் இணர் நறு மலர்ப் புன்னை வெஃகி,
திதியனொடு பொருத அன்னி போல
விளிகுவைகொல்லோ, நீயே கிளி எனச்
சிறிய மிழற்றும் செவ் வாய், பெரிய
கயல் என அமர்த்த உண்கண், புயல் எனப்
20
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால்,
மின் நேர் மருங்குல், குறுமகள்
பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே?
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண், தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; அல்ல குறிப்பிட்டு அழிந்ததூஉம் ஆம்; தோழியைப் பின்னின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - நக்கீரர்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:22:36(இந்திய நேரம்)