தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நுதலும் நுண் பசப்பு இவரும்

நுதலும் நுண் பசப்பு இவரும்

 

171. பாலை
'நுதலும் நுண் பசப்பு இவரும்; தோளும்
அகல் மலை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த
பணை எழில் அழிய வாடும்; நாளும்
நினைவல்மாது அவர் பண்பு' என்று ஓவாது
5
இனையல் வாழி, தோழி! புணர்வர்
இலங்கு கோல் ஆய் தொடி நெகிழ, பொருள் புரிந்து
அலந்தலை ஞெமையத்து அதர் அடைந்திருந்த
மால் வரைச் சீறூர் மருள் பல் மாக்கள்
கோள் வல் ஏற்றை ஓசை ஓர்மார்,
10
திருத்திக் கொண்ட அம்பினர், நோன் சிலை
எருத்தத்து இரீஇ, இடம் தொறும் படர்தலின்,
கீழ்ப்படு தாரம் உண்ணா, மேற் சினைப்
பழம் போற் சேற்ற தீம் புழல் உணீஇய,
கருங் கோட்டு இருப்பை ஊரும்
15
பெருங் கை எண்கின் சுரன் இறந்தோரே!
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -கல்லாடனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:24:13(இந்திய நேரம்)