தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பூங் கண் வேங்கைப்

பூங் கண் வேங்கைப்

 

182. குறிஞ்சி
பூங் கண் வேங்கைப் பொன் இணர் மிலைந்து,
வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇ,
தீம் பழப் பலவின் சுளை விளை தேறல்
வீளை அம்பின் இளையரொடு மாந்தி,
5
ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட,
வேட்டம் போகிய குறவன் காட்ட
குளவித் தண் புதல் குருதியொடு துயல் வர,
முளவுமாத் தொலைச்சும் குன்ற நாட!
அரவு எறி உருமோடு ஒன்றிக் கால் வீழ்த்து
10
உரவு மழை பொழிந்த பானாட் கங்குல்,
தனியை வந்த ஆறு நினைந்து, அல்கலும்,
பனியொடு கலுழும் இவள் கண்ணே; அதனால்,
கடும் பகல் வருதல் வேண்டும் தெய்ய
அதிர் குரல் முது கலை கறி முறி முனைஇ,
15
உயர்சிமை நெடுங் கோட்டு உகள, உக்க
கமழ் இதழ் அலரி தாஅய் வேலன்
வெறி அயர் வியன் களம் கடுக்கும்
பெரு வரை நண்ணிய சாரலானே.
தோழி இரா வருவானைப் 'பகல் வா' என்றது. - கபிலர்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:31:22(இந்திய நேரம்)