தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பேர் உறை தலைஇய

பேர் உறை தலைஇய

 

194. முல்லை
பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை,
ஏர் இடம் படுத்த இரு மறுப் பூழிப்
புறம் மாறு பெற்ற பூவல் ஈரத்து,
ஊன் கிழித்தன்ன செஞ் சுவல் நெடுஞ் சால்,
5
வித்திய மருங்கின் விதை பல நாறி,
இரலை நல் மானினம் பரந்தவைபோல்,
கோடுடைத் தலைக்குடை சூடிய வினைஞர்,
கறங்கு பறைச் சீரின் இரங்க வாங்கி,
களை கால் கழீஇய பெரும் புன வரகின்
10
கவைக் கதிர் இரும் புறம் கதூஉ உண்ட,
குடுமி நெற்றி, நெடு மாத் தோகை
காமர் கலவம் பரப்பி, ஏமுறக்
கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த
வல் இலைக் குருந்தின் வாங்குசினை இருந்து,
15
கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும்
கார்மன் இதுவால் தோழி! 'போர் மிகக்
கொடுஞ்சி நெடுந் தேர் பூண்ட, கடும் பரி,
விரிஉளை, நல் மான் கடைஇ
வருதும்' என்று அவர் தெளித்த போழ்தே.
பருவம் கண்டு ஆற்றாமை மீதூரத், தலைமகள் சொல்லியது. -இடைக்காடனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:33:01(இந்திய நேரம்)