தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மரம் தலை கரிந்து நிலம்

மரம் தலை கரிந்து நிலம்

 

169. பாலை
மரம் தலை கரிந்து நிலம் பயம் வாட,
அலங்குகதிர் வேய்ந்த அழல் திகழ் நனந்தலை,
புலி தொலைத்து உண்ட பெருங் களிற்று ஒழி ஊன்
கலி கெழு மறவர் காழ்க் கோத்து ஒழிந்ததை,
5
ஞெலி கோற் சிறு தீ மாட்டி, ஒலி திரைக்
கடல் விளை அமிழ்தின் கணம் சால் உமணர்
சுனை கொள் தீம் நீர்ச் சோற்று உலைக் கூட்டும்
சுரம் பல கடந்த நம் வயின் படர்ந்து; நனி
பசலை பாய்ந்த மேனியள், நெடிது நினைந்து,
10
செல் கதிர் மழுகிய புலம்பு கொள் மாலை
மெல் விரல் சேர்த்திய நுதலள், மல்கிக்
கயல் உமிழ் நீரின் கண் பனி வார,
பெருந் தோள் நெகிழ்ந்த செல்லலொடு
வருந்துமால், அளியள், திருந்திழைதானே!
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - தொண்டியாமூர்ச் சாத்தனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:35:32(இந்திய நேரம்)