தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முடவு முதிர் பலவின் குடம்

முடவு முதிர் பலவின் குடம்

 

352. குறிஞ்சி
'முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்
பல் கிளைத் தலைவன் கல்லாக் கடுவன்,
பாடு இமிழ் அருவிப் பாறை மருங்கின்,
ஆடு மயில் முன்னது ஆக, கோடியர்
5
விழவு கொள் மூதூர் விறலி பின்றை
முழவன் போல அகப்படத் தழீஇ,
இன் துணைப் பயிரும் குன்ற நாடன்
குடி நன்கு உடையன்; கூடுநர்ப் பிரியலன்;
கெடு நா மொழியலன்; அன்பினன்' என, நீ
10
வல்ல கூறி, வாய்வதின் புணர்த்தோய்;
நல்லை; காண், இனி காதல் அம் தோழீஇ!
கடும் பரிப் புரவி நெடுந் தேர் அஞ்சி,
நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல்,
தொல் இசை நிறீஇய உரை சால் பாண்மகன்
15
எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும்,
புதுவது புனைந்த திறத்தினும்,
வதுவை நாளினும், இனியனால் எமக்கே.
வரைந்து எய்திய பின்றை மண மனக்கண் சென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது; வரைவு மலிந்து சொல்லிய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - அஞ்சியத்தை மகள் நாகையார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:37:55(இந்திய நேரம்)