தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முயல்
284. முல்லை
சிறியிலை நெல்லிக் காய் கண்டன்ன
குறு விழிக் கண்ண கூரல் அம் குறு முயல்
முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு,
குடந்தை அம் செவிய கோட் பவர் ஒடுங்கி,
5
இன் துயில் எழுந்து, துணையொடு போகி,
முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும்
புன் புலம் தழீஇய பொறைமுதல் சிறு குடி,
தினைக் கள் உண்ட தெறி கோல் மறவர்,
விசைத்த வில்லர், வேட்டம் போகி,
10
முல்லைப் படப்பைப் புல்வாய் கெண்டும்
காமர் புறவினதுவே காமம்
நம்மினும் தான் தலைமயங்கிய
அம் மா அரிவை உறைவு இன் ஊரே.
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது; தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - இடைக்காடனார்
384. முல்லை
'இருந்த வேந்தன் அருந் தொழில் முடித்தென,
புரிந்த காதலொடு பெருந் தேர் யானும்
ஏறியது அறிந்தன்று அல்லது, வந்த
ஆறு நனி அறிந்தன்றோஇலெனே; "தாஅய்,
5
முயற் பறழ் உகளும் முல்லை அம் புறவில்,
கவைக் கதிர் வரகின் சீறூர் ஆங்கண்,
மெல் இயல் அரிவை இல்வயின் நிறீஇ,
இழிமின்" என்ற நின் மொழி மருண்டிசினே;
வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ?
10
மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ?
உரைமதி வாழியோ, வலவ!' என, தன்
வரை மருள் மார்பின் அளிப்பனன் முயங்கி,
மனைக் கொண்டு புக்கனன், நெடுந் தகை;
விருந்து ஏர் பெற்றனள், திருந்திழையோளே.
வினை முற்றிய தலைமகனது வரவு கண்டு, உழையர் சொல்லியது. - ஒக்கூர் மாசாத்தியார்
394. முல்லை
களவும் புளித்தன; விளவும் பழுநின;
சிறு தலைத் துருவின் பழுப்பு உறு விளைதயிர்,
இதைப் புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு,
கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய்ப் புற்றத்து
5
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெஞ் சோறு
சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக,
இளையர் அருந்த, பின்றை, நீயும்
இடு முள் வேலி முடக் கால் பந்தர்,
புதுக் கலத்து அன்ன செவ் வாய்ச் சிற்றில்,
10
புனை இருங் கதுப்பின் நின் மனையோள் அயர,
பாலுடை அடிசில் தொடீஇய, ஒரு நாள்,
மா வண் தோன்றல்! வந்தனை சென்மோ
காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும்
மடி விடு வீளை வெரீஇ, குறு முயல்
15
மன்ற இரும் புதல் ஒளிக்கும்
புன்புல வைப்பின் எம் சிறு நல் ஊரே.
இரவுக்குறித் தலைமகளை இடத்து உய்த்து வந்து, தோழி தலைமகனை வரைவு கடாயது. - நன்பலூர்ச் சிறுமேதாவியார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 19:19:27(இந்திய நேரம்)