தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கொக்கு
120. நெய்தல்
நெடு வேள் மார்பின் ஆரம் போல,
செவ் வாய் வானம் தீண்டி, மீன் அருந்தும்
பைங் காற் கொக்கினம் நிரை பறை உகப்ப,
எல்லை பைப்பயக் கழிப்பி, குடவயின்
5
கல் சேர்ந்தன்றே, பல் கதிர் ஞாயிறு
மதர் எழில் மழைக் கண் கலுழ, இவளே
பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல்
மாண் நலம் சிதைய ஏங்கி, ஆனாது,
அழல் தொடங்கினளே பெரும! அதனால்
10
கழிச் சுறா எறிந்த புண் தாள் அத்திரி
நெடு நீர் இருங் கழிப் பரி மெலிந்து, அசைஇ,
வல் வில் இளையரொடு எல்லிச் செல்லாது,
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ
பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை
15
அன்றில் அகவும் ஆங்கண்,
சிறு குரல் நெய்தல் எம் பெருங் கழி நாட்டே?
தோழி, பகற்குறிக்கண் தலைமகனை இடத்து உய்த்து வந்து, தலைமகனை எதிர்ப்பட்டு நின்று சொல்லியது. - நக்கீரனார்
290. நெய்தல்
குடுமிக் கொக்கின் பைங் காற் பேடை,
இருஞ் சேற்று அள்ளல் நாட் புலம் போகிய
கொழு மீன் வல்சிப் புன் தலைச் சிறாஅர்,
நுண் ஞாண் அவ் வலைச் சேவல் பட்டென,
5
அல்குறு பொழுதின் மெல்கு இரை மிசையாது,
பைதல் பிள்ளை தழீஇ, ஒய்யென,
அம் கண் பெண்ணை அன்புற நரலும்
சிறு பல் தொல் குடிப் பெரு நீர்ச் சேர்ப்பன்,
கழி சேர் புன்னை அழி பூங் கானல்,
10
தணவா நெஞ்சமொடு தமியன் வந்து, நம்
மணவா முன்னும் எவனோ தோழி!
வெண் கோட்டு யானை விறற் போர்க் குட்டுவன்
தெண் திரைப் பரப்பின் தொண்டி முன்துறை,
சுரும்பு உண மலர்ந்த பெருந் தண் நெய்தல்
15
மணி ஏர் மாண் நலம் ஒரீஇ,
பொன் நேர் வண்ணம் கொண்ட என் கண்ணே?
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்,தலைமகள் சொல்லியது. - நக்கீரர்
346.மருதம்
நகை நன்று அம்ம தானே இறை மிசை
மாரிச் சுதையின் ஈர்ம் புறத்து அன்ன
கூரல் கொக்கின் குறும் பறைச் சேவல்,
வெள்ளி வெண் தோடு அன்ன, கயல் குறித்து,
5
கள் ஆர் உவகைக் கலி மகிழ் உழவர்
காஞ்சி அம் குறுந் தறி குத்தி, தீம் சுவை
மென் கழைக் கரும்பின் நன் பல மிடைந்து,
பெருஞ் செய் நெல்லின் பாசு அவல் பொத்தி,
வருத்திக் கொண்ட வல் வாய்க் கொடுஞ் சிறை
10
மீது அழி கடு நீர் நோக்கி, பைப்பயப்
பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர!
யாம் அது பேணின்றோ இலமே நீ நின்
பண் அமை நல் யாழ்ப் பாணனொடு, விசி பிணி,
மண் ஆர், முழவின் கண் அதிர்ந்து இயம்ப,
15
மகிழ் துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி,
எம் மனை வாராயாகி, முன் நாள்,
நும் மனைச் சேர்ந்த ஞான்றை, அம் மனைக்
குறுந் தொடி மடந்தை உவந்தனள் நெடுந் தேர்,
இழை அணி யானைப் பழையன் மாறன்,
20
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண்,
வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த
கிள்ளி வளவன் நல் அமர் சாஅய்,
கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி,
ஏதில் மன்னர் ஊர் கொள,
25
கோதை மார்பன் உவகையின் பெரிதே.
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது. - நக்கீரர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 19:38:37(இந்திய நேரம்)