தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஒளவையார்

ஒளவையார்
87
களம் புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து,
எம்முளும் உளன் ஒரு பொருநன்; வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே.
திணை தும்பை; துறை தானை மறம்.
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

88
யாவிர் ஆயினும், 'கூழை தார் கொண்டு
யாம் பொருதும்' என்றல் ஓம்புமின் ஓங்கு திறல்
ஒளிறு இலங்கு நெடு வேல் மழவர் பெருமகன்,
கதிர் விடு நுண் பூண் அம் பகட்டு மார்பின்
5
விழவு மேம்பட்ட நல் போர்
முழவுத் தோள் என்னையைக் காணா ஊங்கே.
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

89
'இழை அணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்,
மடவரல், உண்கண், வாள் நுதல், விறலி!
பொருநரும் உளரோ, நும் அகன் தலை நாட்டு?' என,
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!
5
எறி கோல் அஞ்சா அரவின் அன்ன
சிறு வல் மள்ளரும் உளரே; அதாஅன்று,
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளி பொரு தெண் கண் கேட்பின்,
'அது போர்' என்னும் என்னையும் உளனே.
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

90
உடை வளை கடுப்ப மலர்ந்த காந்தள்
அடை மல்கு குளவியொடு கமழும் சாரல்,
மறப் புலி உடலின், மான் கணம் உளவோ?
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய
5
இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்?
அச்சொடு தாக்கிப் பார் உற்று இங்கிய
பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய,
வரி மணல் ஞெமர, கல் பக, நடக்கும்
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ?
10
எழுமரம் கடுக்கும் தாள் தோய் தடக் கை
வழு இல் வன் கை, மழவர் பெரும!
இரு நிலம் மண் கொண்டு சிலைக்கும்
பொருநரும் உளரோ, நீ களம் புகினே?
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

91
வலம் படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம் படக் கடந்த கழல் தொடித் தடக் கை,
ஆர் கலி நறவின், அதியர் கோமான்!
போர் அடு திருவின் பொலந் தார் அஞ்சி!
5
பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும! நீயே, தொல் நிலைப்
பெரு மலை விடரகத்து அரு மிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீம் கனி குறியாது,
10
ஆதல் நின் அகத்து அடக்கி,
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே!
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
அவனை அவர் நெல்லிப் பழம் பெற்றுப் பாடியது.

92
யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா;
பொருள் அறிவாரா; ஆயினும், தந்தையர்க்கு
அருள் வந்தனவால், புதல்வர்தம் மழலை;
என் வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார்
5
கடி மதில் அரண் பல கடந்த
நெடுமான் அஞ்சி! நீ அருளல்மாறே.
திணை அது; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

93
திண் பிணி முரசம் இழுமென முழங்கச்
சென்று, அமர் கடத்தல் யாவது? வந்தோர்
தார் தாங்குதலும் ஆற்றார், வெடிபட்டு,
ஓடல் மரீஇய பீடு இல் மன்னர்
5
நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇ,
காதல் மறந்து, அவர் தீது மருங்கு அறுமார்,
அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி,
'மறம் கந்தாக நல் அமர் வீழ்ந்த
10
நீள் கழல் மறவர் செல்வுழிச் செல்க!' என
வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாஅத்து
அண்ணல் யானை அடு களத்து ஒழிய,
அருஞ் சமம் ததைய நூறி, நீ,
15
பெருந் தகை! விழுப் புண் பட்ட மாறே.
திணை வாகை; துறை அரச வாகை.
அவன் பொருது புண்பட்டு நின்றோனை அவர் பாடியது.

94
ஊர்க் குறுமாக்கள் வெண் கோடு கழாஅலின்,
நீர்த் துறை படியும் பெருங் களிறு போல
இனியை, பெரும! எமக்கே; மற்று அதன்
துன் அருங் கடாஅம் போல
5
இன்னாய், பெரும! நின் ஒன்னாதோர்க்கே.
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

95
இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டி,
கண் திரள் நோன் காழ் திருத்தி, நெய் அணிந்து,
கடியுடை வியல் நகரவ்வே; அவ்வே,
பகைவர்க் குத்தி, கோடு, நுதி, சிதைந்து,
5
கொல் துறைக் குற்றில மாதோ என்றும்
உண்டாயின் பதம் கொடுத்து,
இல்லாயின் உடன் உண்ணும்,
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல் எம் கோமான், வைந் நுதி வேலே.
திணை பாடாண் திணை; துறை வாள் மங்கலம்.
அவன் தூதுவிட, தொண்டைமானுழைச் சென்ற ஒளவைக்கு அவன் படைக்கலக் கொட்டில் காட்ட, அவர் பாடியது.

96
அலர் பூந் தும்பை அம் பகட்டு மார்பின்,
திரண்டு நீடு தடக்கை, என்னை இளையோற்கு
இரண்டு எழுந்தனவால், பகையே: ஒன்றே,
பூப் போல் உண்கண் பசந்து, தோள் நுணுகி,
5
நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றே,
'விழவின்றுஆயினும், படு பதம் பிழையாது,
மை ஊன் மொசித்த ஒக்கலொடு, துறை நீர்க்
கைமான் கொள்ளுமோ?' என,
உறையுள் முனியும், அவன் செல்லும் ஊரே.
திணை அது; துறை இயன்மொழி.
அவன் மகன் பொகுட்டெழினியை அவர் பாடியது.

97
போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்,
உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின்,
ஊன் உற மூழ்கி, உரு இழந்தனவே;
வேலே, குறும்பு அடைந்த அரண் கடந்து, அவர்
5
நறுங் கள்ளின் நாடு நைத்தலின்,
சுரை தழீஇய இருங் காழொடு
மடை கலங்கி நிலை திரிந்தனவே;
களிறே, எழூஉத் தாங்கிய கதவம் மலைத்து, அவர்
குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின்,
10
பரூஉப் பிணிய தொடி கழிந்தனவே;
மாவே, பரந்து ஒருங்கு மலைந்த மறவர்
பொலம் பைந் தார் கெடப் பரிதலின்,
களன் உழந்து அசைஇய மறுக் குளம்பினவே;
அவன் தானும், நிலம் திரைக்கும் கடல் தானைப்
15
பொலந் தும்பைக் கழல் பாண்டில்
கணை பொருத துளைத் தோலன்னே.
ஆயிடை, உடன்றோர் உய்தல் யாவது? 'தடந் தாள்,
பிணிக் கதிர், நெல்லின் செம்மல் மூதூர்
நுமக்கு உரித்தாகல் வேண்டின், சென்று அவற்கு
20
இறுக்கல் வேண்டும், திறையே; மறுப்பின்,
ஒல்வான் அல்லன், வெல்போரான்' எனச்
சொல்லவும் தேறீராயின், மெல் இயல்,
கழல் கனி வகுத்த துணைச் சில் ஓதி,
குறுந் தொடி மகளிர் தோள் விடல்
25
இறும்பூது அன்று; அஃது அறிந்து ஆடுமினே.
திணையும் துறையும் அவை.
அதியமான் நெடுமான் அஞ்சியை அவர் பாடியது.

98
முனைத் தெவ்வர் முரண் அவியப்
பொரக் குறுகிய நுதி மருப்பின் நின்
இனக் களிறு செலக் கண்டவர்
மதில் கதவம் எழுச் செல்லவும்,
5
பிணன் அழுங்கக் களன் உழக்கிச்
செலவு அசைஇய மறுக் குளம்பின் நின்
இன நல் மாச் செலக் கண்டவர்
கவை முள்ளின் புழை அடைப்பவும்,
மார்புறச் சேர்ந்து ஒல்காத்
10
தோல் செறிப்பு இல் நின் வேல் கண்டவர்
தோல் கழியொடு பிடி செறிப்பவும்,
வாள் வாய்த்த வடுப் பரந்த நின்
மற மைந்தர் மைந்து கண்டவர்
புண் படு குருதி அம்பு ஒடுக்கவும்,
15
நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென,
உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும்
கூற்றத்து அனையை; ஆகலின், போற்றார்
இரங்க விளிவதுகொல்லோ வரம்பு அணைந்து
இறங்குகதிர் அலம்வரு கழனி,
20
பெரும் புனல் படப்பை, அவர் அகன் தலை நாடே!
திணை வாகை; துறை அரச வாகை; திணை வஞ்சியும், துறை கொற்ற வள்ளையும் ஆம்.
அவனை அவர் பாடியது.

99
அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்,
அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்,
நீர் அக இருக்கை ஆழி சூட்டிய
தொல் நிலை மரபின் நின் முன்னோர் போல,
5
ஈகை அம் கழல் கால், இரும் பனம் புடையல்,
பூ ஆர் காவின், புனிற்றுப் புலால் நெடு வேல்,
எழு பொறி நாட்டத்து எழாஅத் தாயம்
வழு இன்று எய்தியும் அமையாய், செரு வேட்டு,
இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணிச்
10
சென்று, அமர் கடந்து, நின் ஆற்றல் தோற்றிய
அன்றும், பாடுநர்க்கு அரியை; இன்றும்
பரணன் பாடினன் மற்கொல் மற்று நீ
முரண் மிகு கோவலூர் நூறி, நின்
அரண் அடு திகிரி ஏந்திய தோளே!
திணையும் துறையும் அவை.
அவன் கோவலூர் எறிந்தானை அவர் பாடியது.

100
கையது வேலே; காலன புனை கழல்;
மெய்யது வியரே; மிடற்றது பசும் புண்;
வட்கர் போகிய வளர் இளம் போந்தை
உச்சிக் கொண்ட ஊசி வெண் தோட்டு,
5
வெட்சி மா மலர், வேங்கையொடு விரைஇ,
சுரி இரும் பித்தை பொலியச் சூடி,
வரிவயம் பொருத வயக் களிறு போல,
இன்னும் மாறாது சினனே; அன்னோ!
உய்ந்தனர் அல்லர், இவன் உடற்றியோரே;
10
செறுவர் நோக்கிய கண், தன்
சிறுவனை நோக்கியும், சிவப்பு ஆனாவே.
திணையும் துறையும் அவை; திணை வஞ்சியும், துறை கொற்றவள்ளையும் ஆம்.
அதியமான் தவமகன் பிறந்தவனைக் கண்டானை அவர் பாடியது.

101
ஒரு நாள் செல்லலம்; இரு நாள் செல்லலம்;
பல நாள் பயின்று, பலரொடு செல்லினும்,
தலை நாள் போன்ற விருப்பினன்மாதோ
இழை அணி யானை இயல் தேர் அஞ்சி
5
அதியமான்; பரிசில் பெறூஉம் காலம்
நீட்டினும், நீட்டாதுஆயினும், களிறு தன்
கோட்டு இடை வைத்த கவளம் போலக்
கையகத்தது; அது பொய் ஆகாதே;
அருந்த ஏமாந்த நெஞ்சம்!
10
வருந்த வேண்டா; வாழ்க, அவன் தாளே!
திணை பாடாண் திணை; துறை பரிசில் கடாநிலை.
அவனை அவர் பாடியது.

102
'எருதே இளைய; நுகம் உணராவே;
சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே;
அவல் இழியினும், மிசை ஏறினும்,
அவணது அறியுநர் யார்?' என, உமணர்
5
கீழ் மரத்து யாத்த சேம அச்சு அன்ன,
இசை விளங்கு கவி கை நெடியோய்! திங்கள்
நாள் நிறை மதியத்து அனையை; இருள்
யாவணதோ, நின் நிழல் வாழ்வோர்க்கே?
திணை அது; துறை இயன்மொழி.
அவன் மகன் பொகுட்டெழினியை அவர் பாடியது.

103
ஒரு தலைப் பதலை தூங்க, ஒரு தலைத்
தூம்பு அகச் சிறு முழாத் தூங்கத் தூக்கி,
'கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்?' எனச்
சுரன்முதல் இருந்த சில் வளை விறலி!
5
செல்வைஆயின், சேணோன் அல்லன்;
முனை சுட எழுந்த மங்குல் மாப் புகை
மலை சூழ் மஞ்சின், மழ களிறு அணியும்
பகைப் புலத்தோனே, பல் வேல் அஞ்சி;
பொழுது இடைப்படாஅப் புலரா மண்டை
10
மெழுகு மெல் அடையின் கொழு நிணம் பெருப்ப,
அலத்தற் காலை ஆயினும்,
புரத்தல் வல்லன்; வாழ்க, அவன் தாளே!
திணை அது; துறை விறலியாற்றுப்படை.
அதியமான் நெடுமான் அஞ்சியை அவர் பாடியது.

104
போற்றுமின், மறவீர்! சாற்றுதும், நும்மை:
ஊர்க் குறுமாக்கள் ஆடக் கலங்கும்
தாள் படு சில் நீர்க் களிறு அட்டு வீழ்க்கும்
ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்னை
5
நுண் பல் கருமம் நினையாது,
'இளையன்' என்று இகழின், பெறல் அரிது, ஆடே.
திணை வாகை; துறை அரச வாகை.
அவனை அவர் பாடியது.

140
தடவு நிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்
மடவன், மன்ற; செந் நாப் புலவீர்!
வளைக் கை விறலியர் படப்பைக் கொய்த
அடகின் கண்ணுறைஆக யாம் சில
5
அரிசி வேண்டினேமாக, தான் பிற
வரிசை அறிதலின், தன்னும் தூக்கி,
இருங் கடறு வளைஇய குன்றத்து அன்னது ஓர்
பெருங் களிறு நல்கியோனே; அன்னது ஓர்
தேற்றா ஈகையும் உளதுகொல்?
10
போற்றார் அம்ம, பெரியோர் தம் கடனே?
திணை அது; துறை பரிசில் விடை.
அவனை ஒளவையார் பாடியது.

187
நாடா கொன்றோ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;
எவ் வழி நல்லவர் ஆடவர்,
அவ் வழி நல்லை; வாழிய நிலனே!
திணையும் துறையும் அவை.
ஒளவையார் பாடியது.

206
வாயிலோயே! வாயிலோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தி, தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கைப்
5
பரிசிலர்க்கு அடையா வாயிலோயே!
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன் அறியலன்கொல்? என் அறியலன்கொல்?
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென,
வறுந் தலை உலகமும் அன்றே; அதனால்,
10
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;
மரம் கொல் தச்சன் கை வல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே
எத் திசைச் செலினும், அத் திசைச் சோறே.
திணையும் துறையும் அவை.
அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் நீட்டித்தானை ஒளவையார் பாடியது.

231
எறி புனக் குறவன் குறையல் அன்ன
கரி புற விறகின் ஈம ஒள் அழல்,
குறுகினும் குறுகுக; குறுகாது சென்று,
விசும்புற நீளினும் நீள்க பசுங் கதிர்த்
5
திங்கள் அன்ன வெண்குடை
ஒண் ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவே.
திணையும் துறையும் அவை.
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

232
இல்லாகியரோ, காலை மாலை!
அல்லாகியர், யான் வாழும் நாளே!
நடுகல் பீலி சூட்டி, நார் அரி
சிறு கலத்து உகுப்பவும் கொள்வன்கொல்லோ
5
கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய
நாடு உடன் கொடுப்பவும் கொள்ளாதோனே?
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

235
சிறிய கள் பெறினே, எமக்கு ஈயும்; மன்னே!
பெரிய கள் பெறினே,
யாம் பாட, தான் மகிழ்ந்து உண்ணும்; மன்னே!
சிறு சோற்றானும் நனி பல கலத்தன்; மன்னே!
5
பெருஞ் சோற்றானும் நனி பல கலத்தன்; மன்னே!
என்பொடு தடி படு வழி எல்லாம் எமக்கு ஈயும்; மன்னே!
அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும்; மன்னே!
நரந்தம் நாறும் தன் கையால்,
புலவு நாறும் என் தலை தைவரும்; மன்னே!
10
அருந் தலை இரும் பாணர் அகல் மண்டைத் துளை உரீஇ,
இரப்போர் கையுளும் போகி,
புரப்போர் புன்கண் பாவை சோர,
அம் சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்று வீழ்ந்தன்று, அவன்
15
அரு நிறத்து இயங்கிய வேலே!
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ?
இனி, பாடுநரும் இல்லை; பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை;
பனித் துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர்
சூடாது வைகியாங்கு, பிறர்க்கு ஒன்று
20
ஈயாது வீயும் உயிர் தவப் பலவே!
திணையும் துறையும் அவை.
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

269
குயில் வாய் அன்ன கூர்முகை அதிரல்
பயிலாது அல்கிய பல் காழ் மாலை
மை இரும் பித்தை பொலியச் சூட்டி,
புத்தகல் கொண்ட புலிக் கண் வெப்பர்
5
ஒன்று இரு முறை இருந்து உண்ட பின்றை,
உவலைக் கண்ணித் துடியன் வந்தென,
பிழி மகிழ் வல்சி வேண்ட, மற்று இது
கொள்ளாய் என்ப, கள்ளின் வாழ்த்தி;
கரந்தை நீடிய அறிந்து மாறு செருவில்
10
பல் ஆன் இன நிரை தழீஇய வில்லோர்,
கொடுஞ் சிறைக் குரூஉப் பருந்து ஆர்ப்ப,
தடிந்து மாறு பெயர்த்தது, இக் கருங் கை வாளே.
திணை வெட்சி; துறை உண்டாட்டு.
ஒளவையார் பாடியது.

286
வெள்ளை வெள் யாட்டுச் செச்சை போலத்
தன் ஓரன்ன இளையர் இருப்ப,
பலர் மீது நீட்டிய மண்டை என் சிறுவனைக்
கால் கழி கட்டிலில் கிடப்பி,
5
தூ வெள் அறுவை போர்ப்பித்திலதே!
திணை கரந்தை; துறை வேத்தியல்.
ஒளவையார் பாடியது.

290
இவற்கு ஈத்து உண்மதி, கள்ளே; சினப் போர்
இனக் களிற்று யானை, இயல் தேர்க் குருசில்!
நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை,
எடுத்து எறி ஞாட்பின் இமையான், தச்சன்
5
அடுத்து எறி குறட்டின், நின்று மாய்ந்தனனே;
மறப் புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்,
உறைப்புழி ஓலை போல,
மறைக்குவன் பெரும! நிற் குறித்து வரு வேலே.
திணை கரந்தை; துறை குடிநிலை உரைத்தல்.
ஒளவையார் பாடியது.

295
கடல் கிளர்ந்தன்ன கட்டூர் நாப்பண்,
வெந்து வாய் மடித்து வேல் தலைப் பெயரி,
தோடு உகைத்து எழுதரூஉ, துரந்து எறி ஞாட்பின்,
வரு படை போழ்ந்து வாய்ப் பட விலங்கி,
5
இடைப் படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய,
சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி,
வாடு முலை ஊறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே.
திணை அது; துறை உவகைக் கலுழ்ச்சி.
ஒளவையார் பாடியது.

311
களர்ப் படு கூவல் தோண்டி, நாளும்,
புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை.
தாது எரு மறுகின் மாசுண இருந்து,
பலர் குறை செய்த மலர் தார் அண்ணற்கு
5
ஒருவரும் இல்லை மாதோ, செருவத்து;
சிறப்புடைச் செங் கண் புகைய, ஓர்
தோல் கொண்டு மறைக்கும் சால்பு உடையோனே.
திணை அது; துறை பாண்பாட்டு.
ஒளவையார் பாடியது.

315
உடையன்ஆயின் உண்ணவும் வல்லன்;
கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்;
மடவர் மகிழ் துணை; நெடு மான் அஞ்சி
இல் இறைச் செரீஇய ஞெலிகோல் போல,
5
தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்றதன்
கான்று படு கனை எரி போல,
தோன்றவும் வல்லன் தான் தோன்றுங்காலே.
திணையும் துறையும் அவை.
நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

367
நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம்
தமவேஆயினும் தம்மொடு செல்லா;
வேற்றோர்ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்;
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங் கை நிறையப்
5
பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து,
பாசிழை மகளிர் பொலங் கலத்து ஏந்திய
நார் அரி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து,
இரவலர்க்கு அருங் கலம் அருகாது வீசி,
வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்;
10
வாழச் செய்த நல்வினை அல்லது
ஆழுங் காலைப் புணை பிறிது இல்லை;
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண் குடைக் கொடித் தேர் வேந்திர்!
15
யான் அறி அளவையோ இதுவே: வானத்து
வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப்
பரந்து இயங்கு மா மழை உறையினும்,
உயர்ந்து மேந் தோன்றிப் பொலிக, நும் நாளே!
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், ஒருங்கு இருந்தாரை ஒளவையார் பாடியது.

390
அறவை நெஞ்சத்து ஆயர், வளரும்
மறவை நெஞ்சத்து ஆயிவாளர்,
அரும்பு அலர் செருந்தி நெடுங் கால் மலர் கமழ்,
.............................................மன்ன முற்றத்து,
5
ஆர்வலர் குறுகின் அல்லது, காவலர்
கனவினும் குறுகாக் கடியுடை வியல் நகர்,
மலைக் கணத்து அன்ன மாடம் சிலம்ப, என்
அரிக் குரல் தடாரி இரிய ஒற்றிப்
பாடி நின்ற பல் நாள் அன்றியும்,
10
சென்ற ஞான்றைச் சென்று படர் இரவின்
வந்ததற் கொண்டு, 'நெடுங் கடை நின்ற
புன் தலைப் பொருநன் அளியன்தான்' என,
தன்னுழைக் குறுகல் வேண்டி, என் அரை
முது நீர்ப் பாசி அன்ன உடை களைந்து,
15
திரு மலர் அன்ன புது மடிக் கொளீஇ,
மகிழ் தரல் மரபின் மட்டே அன்றியும்,
அமிழ்து அன மரபின் ஊன் துவை அடிசில்
வெள்ளி வெண் கலத்து ஊட்டல் அன்றி,
முன் ஊர்ப் பொதியில் சேர்ந்த மென் நடை
20
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு அகற்ற,
அகடு நனை வேங்கை வீ கண்டன்ன
பகடு தரு செந்நெல் போரொடு நல்கி,
'கொண்டி பெறுக!' என்றோனே உண் துறை
மலை அலர் அணியும் தலை நீர் நாடன்;
25
கண்டாற் கொண்டும் அவன் திருந்து அடி வாழ்த்தி,
............................................
வான் அறியல என் பாடு பசி போக்கல்;
அண்ணல் யானை வேந்தர்
உண்மையோ, அறியல்? காண்பு அறியலரே!
திணையும் துறையும் அவை.
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

392
மதி ஏர் வெண் குடை அதியர் கோமான்,
கொடும் பூண் எழினி, நெடுங் கடை நின்று, யான்
பசலை நிலவின் பனி படு விடியல்,
பொரு களிற்று அடி வழி அன்ன, என் கை
5
ஒரு கண் மாக் கிணை ஒற்றுபு கொடாஅ,
'உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து,
நிணம் படு குருதிப் பெரும் பாட்டு ஈரத்து
அணங்குடை மரபின் இருங் களந்தோறும்,
வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி,
10
வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்
வைகல் உழவ! வாழிய பெரிது!' எனச்
சென்று யான் நின்றனெனாக, அன்றே,
ஊர் உண் கேணிப் பகட்டு இலைப் பாசி
வேர் புரை சிதாஅர் நீக்கி, நேர் கரை
15
நுண் நூல் கலிங்கம் உடீஇ, 'உண்' எனத்
தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல்
கோள்மீன் அன்ன பொலங் கலத்து அளைஇ,
ஊண் முறை ஈத்தல் அன்றியும், கோள் முறை
விருந்து இறை நல்கியோனே அந்தரத்து
20
அரும் பெறல் அமிழ்தம் அன்ன
கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே.
திணையும் துறையும் அவை.
அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினியை ஒளவையார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:06:22(இந்திய நேரம்)