தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கள்ளில் ஆத்திரையனார்

கள்ளில் ஆத்திரையனார்
175
எந்தை! வாழி; ஆதனுங்க! என்
நெஞ்சம் திறப்போர் நிற் காண்குவரே;
நின் யான் மறப்பின், மறக்கும் காலை,
என் உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும்,
5
என்னியான் மறப்பின், மறக்குவென் வென் வேல்
விண் பொரு நெடுங் குடைக் கொடித் தேர் மோரியர்
திண் கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த
உலக இடைகழி அறை வாய் நிலைஇய
மலர் வாய் மண்டிலத்து அன்ன, நாளும்
10
பலர் புரவு எதிர்ந்த அறத் துறை நின்னே.
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
ஆதனுங்கனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடியது.

389
'நீர் நுங்கின் கண் வலிப்ப,
கான வேம்பின் காய் திரங்க,
கயம் களியும் கோடை ஆயினும்,
ஏலா வெண்பொன் போருறு காலை,
5
எம்மும் உள்ளுமோ பிள்ளைஅம் பொருநன்!'
என்று ஈத்தனனே, இசைசால் நெடுந்தகை;
இன்று சென்று எய்தும் வழியனும் அல்லன்;
செலினே, காணா வழியனும் அல்லன்;
புன் தலை மடப் பிடி இனைய, கன்று தந்து,
10
குன்றக நல் ஊர் மன்றத்துப் பிணிக்கும்
கல் இழி அருவி வேங்கடம் கிழவோன்,
செல்வுழி எழாஅ நல் ஏர் முதியன்!
ஆதனுங்கன் போல, நீயும்
பசித்த ஒக்கல் பழங்கண் வீட,
15
வீறுசால் நன் கலம் நல்குமதி, பெரும!
ஐது அகல் அல்குல் மகளிர்
நெய்தல் கேளன்மார், நெடுங் கடையானே!
திணையும் துறையும் அவை.
ஆதனுங்கனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:11:34(இந்திய நேரம்)