தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பொருந்தில் இளங்கீரனார்

பொருந்தில் இளங்கீரனார்
53
முதிர் வார் இப்பி முத்த வார் மணல்,
கதிர் விடு மணியின் கண் பொரு மாடத்து,
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும்
விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற
5
களம் கொள் யானை, கடு மான், பொறைய!
விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்;
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை
கைம்முற்றல, நின் புகழே, என்றும்;
ஒளியோர் பிறந்த இம் மலர் தலை உலகத்து
10
வாழேம் என்றலும் அரிதே 'தாழாது
செறுத்த செய்யுள் செய் செந் நாவின்,
வெறுத்த கேள்வி, விளங்கு புகழ்க் கபிலன்
இன்று உளன் ஆயின், நன்றுமன்' என்ற நின்
ஆடு கொள் வரிசைக்கு ஒப்ப,
15
பாடுவல் மன்னால், பகைவரைக் கடப்பே.
திணையும் துறையும் அவை.
சேரன் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைப் பொருந்தில் இளங்கீரனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:30:42(இந்திய நேரம்)