தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வெள்ளெருக்கிலையார்

வெள்ளெருக்கிலையார்
233
பொய்யாகியரோ! பொய்யாகியரோ!
பா அடி யானை பரிசிலர்க்கு அருகாச்
சீர் கெழு நோன் தாள் அகுதைகண் தோன்றிய
பொன் புனை திகிரியின் பொய்யாகியரோ!
5
'இரும் பாண் ஒக்கல் தலைவன், பெரும் பூண்,
போர் அடு தானை, எவ்வி மார்பின்
எஃகுறு விழுப்புண் பல' என
வைகுறு விடியல், இயம்பிய குரலே.
திணயும் துறையும் அவை.
வேள் எவ்வியை வெள்ளெருக்கிலையார் பாடியது.

234
நோகோ யானே? தேய்கமா காலை!
பிடி அடி அன்ன சிறு வழி மெழுகி,
தன் அமர் காதலி புல் மேல் வைத்த
இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன்கொல்
5
உலகு புகத் திறந்த வாயில்
பலரோடு உண்டல் மரீஇயோனே?
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:39:45(இந்திய நேரம்)