தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

எழினி

எழினி
158
முரசு கடிப்பு இகுப்பவும், வால் வளை துவைப்பவும்,
அரசுடன் பொருத அண்ணல் நெடு வரை,
கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும்
பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக்
5
கொல்லி ஆண்ட வல் வில் ஓரியும்;
காரி ஊர்ந்து பேர் அமர்க் கடந்த,
மாரி ஈகை, மறப் போர் மலையனும்;
ஊராது ஏந்திய குதிரை, கூர் வேல்,
கூவிளங் கண்ணி, கொடும் பூண், எழினியும்;
10
ஈர்ந் தண் சிலம்பின் இருள் தூங்கு நளி முழை,
அருந் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை,
பெருங் கல் நாடன் பேகனும்; திருந்து மொழி
மோசி பாடிய ஆயும்; ஆர்வம் உற்று
உள்ளி வருநர் உலைவு நனி தீர,
15
தள்ளாது ஈயும் தகைசால் வண்மை,
கொள்ளார் ஓட்டிய, நள்ளியும் என ஆங்கு
எழுவர் மாய்ந்த பின்றை, 'அழிவரப்
பாடி வருநரும் பிறரும் கூடி
இரந்தோர் அற்றம் தீர்க்கு' என, விரைந்து, இவண்
20
உள்ளி வந்தனென், யானே; விசும்புறக்
கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி,
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று,
முள் புற முது கனி பெற்ற கடுவன்
துய்த் தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்,
25
அதிரா யாணர், முதிரத்துக் கிழவ!
இவண் விளங்கு சிறப்பின், இயல் தேர்க் குமண!
இசை மேந்தோன்றிய வண்மையொடு,
பகை மேம்படுக, நீ ஏந்திய வேலே!
திணை அது; துறை வாழ்த்தியல்; பரிசில் கடா நிலையும் ஆம்.
குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடியது.

230
கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும்,
வெங் கால் வம்பலர் வேண்டு புலத்து உறையவும்,
களம் மலி குப்பை காப்பு இல வைகவும்,
விலங்கு பகை கடிந்த கலங்காச் செங்கோல்,
5
வையகம் புகழ்ந்த வயங்கு வினை ஒள் வாள்,
பொய்யா எழினி பொருது களம் சேர
ஈன்றோள் நீத்த குழவி போல,
தன் அமர் சுற்றம் தலைத்தலை இனைய,
கடும் பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ்சமொடு
10
நோய் உழந்து வைகிய உலகினும், மிக நனி
நீ இழந்தனையே, அறன் இல் கூற்றம்!
வாழ்தலின் வரூஉம் வயல் வளன் அறியான்,
வீழ் குடி உழவன் வித்து உண்டாஅங்கு
ஒருவன் ஆர் உயிர் உண்ணாய் ஆயின்,
15
நேரார் பல் உயிர் பருகி,
ஆர்குவை மன்னோ, அவன் அமர் அடு களத்தே.
திணை அது; துறை கையறு நிலை.
அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியை அரிசில் கிழார் பாடியது.

392
மதி ஏர் வெண் குடை அதியர் கோமான்,
கொடும் பூண் எழினி, நெடுங் கடை நின்று, யான்
பசலை நிலவின் பனி படு விடியல்,
பொரு களிற்று அடி வழி அன்ன, என் கை
5
ஒரு கண் மாக் கிணை ஒற்றுபு கொடாஅ,
'உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து,
நிணம் படு குருதிப் பெரும் பாட்டு ஈரத்து
அணங்குடை மரபின் இருங் களந்தோறும்,
வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி,
10
வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்
வைகல் உழவ! வாழிய பெரிது!' எனச்
சென்று யான் நின்றனெனாக, அன்றே,
ஊர் உண் கேணிப் பகட்டு இலைப் பாசி
வேர் புரை சிதாஅர் நீக்கி, நேர் கரை
15
நுண் நூல் கலிங்கம் உடீஇ, 'உண்' எனத்
தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல்
கோள்மீன் அன்ன பொலங் கலத்து அளைஇ,
ஊண் முறை ஈத்தல் அன்றியும், கோள் முறை
விருந்து இறை நல்கியோனே அந்தரத்து
20
அரும் பெறல் அமிழ்தம் அன்ன
கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே.
திணையும் துறையும் அவை.
அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினியை ஒளவையார் பாடியது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:53:01(இந்திய நேரம்)