தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
34
'ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும்,
மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்,
பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும்,
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள' என,
5
'நிலம் புடைபெயர்வது ஆயினும், ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என,
அறம் பாடின்றே ஆயிழை கணவ!
'காலை அந்தியும், மாலை அந்தியும்,
புறவுக் கரு அன்ன புன் புல வரகின்
10
பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி,
குறு முயல் கொழுஞ் சூடு கிழித்த ஒக்கலொடு,
இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து,
கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி,
அமலைக் கொழுஞ் சோறு ஆர்ந்த பாணர்க்கு
15
அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன்,
எம் கோன், வளவன் வாழ்க!' என்று, நின்
பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின்,
படுபு அறியலனே, பல் கதிர்ச் செல்வன்;
யானோ தஞ்சம்; பெரும! இவ் உலகத்து,
20
சான்றோர் செய்த நன்று உண்டாயின்,
இமயத்து ஈண்டி, இன் குரல் பயிற்றி,
கொண்டல் மா மழை பொழிந்த
நுண் பல் துளியினும் வாழிய, பலவே!
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.

35
நளி இரு முந்நீர் ஏணி ஆக,
வளி இடை வழங்கா வானம் சூடிய
மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர்,
முரசு முழங்கு தானை மூவருள்ளும்,
5
அரசு எனப்படுவது நினதே, பெரும!
அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்,
இலங்குகதிர் வெள்ளி தென் புலம் படரினும்,
அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட,
தோடு கொள் வேலின் தோற்றம் போல,
10
ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும்
நாடு எனப்படுவது நினதே அத்தை; ஆங்க
நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தே!
நினவ கூறுவல்; எனவ கேண்மதி!
அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து
15
முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர் ஈண்டு
உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோரே;
ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ
மாக விசும்பின் நடுவு நின்றாங்கு,
கண் பொர விளங்கு நின் விண் பொரு வியன்குடை
20
வெயில் மறைக் கொண்டன்றோ? அன்றே; வருந்திய
குடி மறைப்பதுவே; கூர்வேல் வளவ!
வெளிற்றுப் பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்ப,
களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை,
வருபடை தாங்கி, பெயர் புறத்து ஆர்த்து,
25
பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை
ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே;
மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும்,
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்,
காவலர்ப் பழிக்கும், இக் கண் அகல் ஞாலம்;
30
அது நற்கு அறிந்தனைஆயின், நீயும்
நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது,
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி,
குடி புறந்தருகுவை ஆயின், நின்
அடி புறந்தருகுவர், அடங்காதோரே.
திணை அது; துறை செவியறிவுறூஉ.
அவனை வெள்ளைக்குடி நாகனார் பாடி, பழஞ் செய்க்கடன் வீடுகொண்டது.

36
அடுநை ஆயினும், விடுநை ஆயினும்,
நீ அளந்து அறிதி, நின் புரைமை வார் கோல்,
செறி அரிச் சிலம்பின், குறுந் தொடி மகளிர்
பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும்
5
தண் ஆன்பொருநை வெண் மணல் சிதைய,
கருங் கைக் கொல்லன் அரம் செய் அவ் வாய்
நெடுங் கை நவியம் பாய்தலின், நிலை அழிந்து,
வீ கமழ் நெடுஞ் சினை புலம்ப, காவுதொறும்
கடி மரம் தடியும் ஓசை தன் ஊர்
10
நெடு மதில் வரைப்பின் கடி மனை இயம்ப,
ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு, ஈங்கு, நின்
சிலைத் தார் முரசம் கறங்க,
மலைத்தனை என்பது நாணுத் தகவு உடைத்தே.
திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
அவன் கருவூர் முற்றியிருந்தானை ஆலத்தூர் கிழார் பாடியது.

37
நஞ்சுடை வால் எயிற்று, ஐந் தலை சுமந்த,
வேக வெந் திறல், நாகம் புக்கென,
விசும்பு தீப் பிறப்பத் திருகி, பசுங் கொடிப்
பெரு மலை விடரகத்து உரும் எறிந்தாங்கு,
5
புள் உறு புன்கண் தீர்த்த, வெள் வேல்,
சினம் கெழு தானை, செம்பியன் மருக!
கராஅம் கலித்த குண்டு கண் அகழி,
இடம் கருங் குட்டத்து உடன் தொக்கு ஓடி,
யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம்
10
கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி,
செம்பு உறழ் புரிசை, செம்மல் மூதூர்,
வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின்,
'நல்ல' என்னாது, சிதைத்தல்
வல்லையால், நெடுந்தகை! செருவத்தானே.
திணை வாகை; துறை அரசவாகை; முதல் வஞ்சியும் ஆம்.
அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

38
வரை புரையும் மழ களிற்றின் மிசை,
வான் துடைக்கும் வகைய போல,
விரவு உருவின கொடி நுடங்கும்
வியன் தானை விறல் வேந்தே!
5
நீ, உடன்று நோக்கும்வாய் எரி தவழ,
நீ, நயந்து நோக்கும்வாய் பொன் பூப்ப,
செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும்,
வெண் திங்களுள் வெயில் வேண்டினும்,
வேண்டியது விளைக்கும் ஆற்றலைஆகலின்,
10
நின் நிழல் பிறந்து, நின் நிழல் வளர்ந்த,
எம் அளவு எவனோ மற்றே? 'இன் நிலைப்
பொலம் பூங் காவின் நல் நாட்டோரும்
செய் வினை மருங்கின் எய்தல் அல்லதை,
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்
15
கடவது அன்மையின், கையறவு உடைத்து' என,
ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின்,
நின் நாடு உள்ளுவர், பரிசிலர்
ஒன்னார் தேஎத்தும், நின்னுடைத்து எனவே.
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
அவன், 'எம் உள்ளீர்? எம் நாட்டீர்?' என்றாற்கு ஆவூர் மூலங்கிழார் பாடியது.

39
புறவின் அல்லல் சொல்லிய, கறை அடி
யானை வால் மருப்பு எறிந்த வெண் கடைக்
கோல் நிறை துலாஅம் புக்கோன் மருக!
ஈதல் நின் புகழும் அன்றே; சார்தல்
5
ஒன்னார் உட்கும் துன் அருங் கடுந் திறல்
தூங்கு எயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின்,
அடுதல் நின் புகழும் அன்றே; கெடு இன்று,
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து,
அறம் நின்று நிலையிற்று ஆகலின், அதனால்
10
முறைமை நின் புகழும் அன்றே; மறம் மிக்கு
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள்,
கண் ஆர் கண்ணி, கலி மான், வளவ!
யாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய
வரை அளந்து அறியாப் பொன் படு நெடுங் கோட்டு
15
இமயம் சூட்டிய ஏம விற்பொறி,
மாண் வினை நெடுந் தேர், வானவன் தொலைய,
வாடா வஞ்சி வாட்டும் நின்
பீடு கெழு நோன் தாள் பாடுங்காலே?
திணையும் துறையும் அவை.
அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

40
நீயே, பிறர் ஓம்புறு மற மன் எயில்
ஓம்பாது கடந்து அட்டு, அவர்
முடி புனைந்த பசும் பொன் நின்
அடி பொலியக் கழல் தைஇய
5
வல்லாளனை; வய வேந்தே!
யாமே, நின், இகழ் பாடுவோர் எருத்து அடங்க,
புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற,
இன்று கண்டாங்குக் காண்குவம் என்றும்
இன்சொல் எண் பதத்தை ஆகுமதி பெரும!
10
ஒரு பிடி படியும் சீறிடம்
எழு களிறு புரக்கும் நாடு கிழவோயே!
திணை அது; துறை செவியறிவுறூஉ.
அவனை ஆவூர் முலங்கிழார் பாடியது.

41
காலனும் காலம் பார்க்கும்; பாராது,
வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய,
வேண்டு இடத்து அடூஉம் வெல் போர் வேந்தே!
திசை இரு நான்கும் உற்கம் உற்கவும்,
5
பெரு மரத்து, இலை இல் நெடுங் கோடு வற்றல் பற்றவும்,
அஞ்சுவரத் தகுந புள்ளுக் குரல் இயம்பவும்,
எயிறு நிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும்,
களிறு மேல் கொள்ளவும், காழகம் நீப்பவும்,
10
வெள்ளி நோன் படை கட்டிலொடு கவிழவும்,
கனவின் அரியன காணா, நனவில்
செருச் செய் முன்ப! நின் வரு திறன் நோக்கி,
மையல் கொண்ட ஏமம் இல் இருக்கையர்,
புதல்வர் பூங் கண் முத்தி, மனையோட்கு
15
எவ்வம் கரக்கும் பைதல் மாக்களொடு
பெருங் கலக்குற்றன்றால் தானே காற்றோடு
எரி நிகழ்ந்தன்ன செலவின்
செரு மிகு வளவ! நின் சினைஇயோர் நாடே.
திணை வஞ்சி; துறை கொற்றவள்ளை.
அவனைக் கோவூர் கிழார் பாடியது.

42
ஆனா ஈகை, அடு போர், அண்ணல்! நின்
யானையும் மலையின் தோன்றும்; பெரும! நின்
தானையும் கடல் என முழங்கும்; கூர் நுனை
வேலும் மின்னின் விளங்கும்; உலகத்து
5
அரைசு தலை பனிக்கும் ஆற்றலைஆதலின்,
புரை தீர்ந்தன்று; அது புதுவதோ அன்றே;
தண் புனல் பூசல் அல்லது, நொந்து,
'களைக, வாழி, வளவ!' என்று, நின்
முனைதரு பூசல் கனவினும் அறியாது,
10
புலி புறங்காக்கும் குருளை போல,
மெலிவு இல் செங்கோல் நீ புறங்காப்ப,
பெரு விறல் யாணர்த்து ஆகி, அரிநர்
கீழ் மடைக் கொண்ட வாளையும், உழவர்
படை மிளிர்ந்திட்ட யாமையும், அறைநர்
15
கரும்பில் கொண்ட தேனும், பெருந் துறை
நீர் தரு மகளிர் குற்ற குவளையும்,
வன் புலக் கேளிர்க்கு வரு விருந்து அயரும்
மென் புல வைப்பின் நல் நாட்டுப் பொருந!
மலையின் இழிந்து, மாக் கடல் நோக்கி,
20
நில வரை இழிதரும் பல் யாறு போல,
புலவர் எல்லாம் நின் நோக்கினரே;
நீயே, மருந்து இல் கணிச்சி வருந்த வட்டித்துக்
கூற்று வெகுண்டன்ன முன்பொடு,
மாற்று இரு வேந்தர் மண் நோக்கினையே.
திணை வாகை; துறை அரசவாகை.
அவனை இடைக்காடனார் பாடியது.

46
நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை,
இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சி,
தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்;
5
களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த
புன் தலைச் சிறாஅர்; மன்று மருண்டு நோக்கி,
விருந்தின் புன்கண் நோவுடையர்;
கேட்டனைஆயின், நீ வேட்டது செய்ம்மே!
திணையும் துறையும் அவை.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக்கு இடுவுழி, கோவூர் கிழார் பாடி, உய்யக் கொண்டது.

69
கையது, கடன் நிறை யாழே; மெய்யது,
புரவலர் இன்மையின் பசியே; அரையது,
வேற்று இழை நுழைந்த வேர் நனை சிதாஅர்
ஓம்பி உடுத்த உயவல் பாண!
5
பூட்கை இல்லோன் யாக்கை போலப்
பெரும் புல்லென்ற இரும் பேர் ஒக்கலை;
வையகம் முழுதுடன் வளைஇ, பையென
என்னை வினவுதி ஆயின், மன்னர்
அடு களிறு உயவும் கொடி கொள் பாசறை,
10
குருதிப் பரப்பின் கோட்டு மா தொலைச்சி,
புலாக் களம் செய்த கலாஅத் தானையன்
பிறங்கு நிலை மாடத்து உறந்தையோனே;
பொருநர்க்கு ஓக்கிய வேலன், ஒரு நிலைப்
பகைப் புலம் படர்தலும் உரியன்; தகைத் தார்
15
ஒள் எரி புரையும் உரு கெழு பசும் பூண்
கிள்ளி வளவற் படர்குவை ஆயின்,
நெடுங் கடை நிற்றலும் இலையே; கடும் பகல்
தேர் வீசு இருக்கை ஆர நோக்கி,
நீ அவற் கண்ட பின்றை, பூவின்
20
ஆடு வண்டு இமிராத் தாமரை
சூடாயாதல் அதனினும் இலையே.
திணையும் துறையும் அவை.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.

70
தேஎம் தீம் தொடைச் சீறியாழ்ப் பாண!
'கயத்து வாழ் யாமை காழ் கோத்தன்ன
நுண் கோல் தகைத்த தெண் கண் மாக் கிணை
இனிய காண்க; இவண் தணிக' எனக் கூறி;
5
வினவல் ஆனா முது வாய் இரவல!
தைஇத் திங்கள் தண் கயம் போல,
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியல் நகர்,
அடுதீ அல்லது சுடுதீ அறியாது;
இரு மருந்து விளைக்கும் நல் நாட்டுப் பொருநன்,
10
கிள்ளி வளவன் நல் இசை உள்ளி,
நாற்ற நாட்டத்து அறு கால் பறவை
சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும்
கை வள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப்
பாதிரி கமழும் ஓதி, ஒள் நுதல்,
15
இன் நகை விறலியொடு மென்மெல இயலிச்
செல்வைஆயின், செல்வை ஆகுவை;
விறகு ஒய் மாக்கள் பொன் பெற்றன்னதோர்
தலைப்பாடு அன்று, அவன் ஈகை;
நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே!
திணையும் துறையும் அவை.
அவனைக் கோவூர் கிழார் பாடியது.

226
செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும்,
உற்றன்று ஆயினும், உய்வு இன்று மாதோ;
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி,
இரந்தன்றாகல் வேண்டும் பொலந் தார்
5
மண்டு அமர் கடக்கும் தானைத்
திண் தேர் வளவற் கொண்ட கூற்றே.
திணையும் துறையும் அவை.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

227
நனி பேதையே, நயன் இல் கூற்றம்!
விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனை;
இன்னும் காண்குவை, நன் வாய் ஆகுதல்;
ஒளிறு வாள் மறவரும், களிறும், மாவும்,
5
குருதி அம் குரூஉப் புனல் பொரு களத்து ஒழிய,
நாளும் ஆனான் கடந்து அட்டு, என்றும் நின்
வாடு பசி அருத்திய வசை தீர் ஆற்றல்
நின் ஓர் அன்ன பொன் இயல் பெரும் பூண்
வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி
10
இனையோற் கொண்டனைஆயின்,
இனி யார், மற்று நின் பசி தீர்ப்போரே?
திணையும் துறையும் அவை.
அவனை ஆடுதுறை மாசாத்தனார் பாடியது.

228
கலம் செய் கோவே! கலம் செய் கோவே!
இருள் திணிந்தன்ன குரூஉத் திரள் பரூஉப் புகை
அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை,
நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே!
5
அளியை நீயே; யாங்கு ஆகுவைகொல்?
நிலவரை சூட்டிய நீள் நெடுந் தானைப்
புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை,
விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்தன்ன
சேண் விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன்
10
கொடி நுடங்கு யானை நெடுமா வளவன்
தேவர் உலகம் எய்தினன்ஆதலின்,
அன்னோற் கவிக்கும் கண் அகன் தாழி
வனைதல் வேட்டனைஆயின், எனையதூஉம்
இரு நிலம் திகிரியா, பெரு மலை
15
மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே?
திணை அது; துறை ஆனந்தப்பையுள்.
அவனை ஐயூர் முடவனார் பாடியது.

386
நெடு நீர நிறை கயத்துப்
படு மாரித் துளி போல,
நெய் துள்ளிய வறை முகக்கவும்,
சூடு கிழித்து வாடுஊன் மிசையவும்,
5
ஊன் கொண்ட வெண் மண்டை
ஆன் பயத்தான் முற்று அழிப்பவும்,
வெய்து உண்ட வியர்ப்பு அல்லது,
செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை
ஈத்தோன், எந்தை, இசை தனது ஆக;
10
வயலே, நெல்லின் வேலி நீடிய கரும்பின்
பாத்திப் பன் மலர்ப் பூத் ததும்பின;
புறவே, புல் அருந்து பல் ஆயத்தான்,
வில் இருந்த வெங் குறும்பின்று;
கடலே, கால் தந்த கலன் எண்ணுவோர்
15
கானல் புன்னைச் சினை நிலைக்குந்து;
கழியே, சிறு வெள் உப்பின் கொள்ளை சாற்றி,
பெருங் கல் நல் நாட்டு உமண் ஒலிக்குந்து;
அன்ன நல் நாட்டுப் பொருநம், யாமே;
பொராஅப் பொருநரேம்;
20
குண திசை நின்று குடமுதல் செலினும்,
குட திசை நின்று குணமுதல் செலினும்,
வட திசை நின்று தென்வயின் செலினும்,
தென் திசை நின்று குறுகாது நீடினும்,
யாண்டும் நிற்க, வெள்ளி; யாம்
25
வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழியவே!
திணையும் துறையும் அவை.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் பாடியது.

393
பதிமுதல் பழகாப் பழங்கண் வாழ்க்கைக்
குறு நெடுந் துணையொடு கூமை வீதலின்,
குடி முறை பாடி, ஒய்யென வருந்தி,
அடல் நசை மறந்த எம் குழிசி மலர்க்கும்
5
கடன் அறியாளர் பிற நாட்டு இன்மையின்,
'வள்ளன்மையின் எம் வரைவோர் யார்?' என,
உள்ளிய உள்ளமொடு உலை நசை துணையா,
.................... கவகம் எல்லாம் ஒருபால் பட்டென,
மலர் தார் அண்ணல் நின் நல் இசை உள்ளி,
10
ஈர்ங்கை மறந்த என் இரும் பேர் ஒக்கல்
கூர்ந்த எவ்வம் விட, கொழு நிணம் கிழிப்ப,
கோடைப் பருத்தி வீடு நிறை பெய்த
மூடைப் பண்டம் மிடை நிறைந்தன்ன,
வெண் நிண மூரி அருள, நாள் உற
15
ஈன்ற அரவின் நா உருக் கடுக்கும் என்
தொன்று படு சிதாஅர் துவர நீக்கி,
போது விரி பகன்றைப் புது மலர் அன்ன,
அகன்று மடி கலிங்கம் உடீஇ, செல்வமும்,
கேடு இன்று நல்குமதி, பெரும! மாசு இல்
20
மதி புரை மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி,
ஆடுமகள் அல்குல் ஒப்ப வாடி,
'கோடை ஆயினும், கோடி...............................
காவிரி புரக்கும் நல் நாட்டுப் பொருந!
வாய் வாள் வளவன்! வாழ்க! எனப்
25
பீடு கெழு நோன் தாள் பாடுகம் பலவே.
திணையும் துறையும் அவை.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை நல்லிறையனார் பாடியது.

397
வெள்ளியும் இரு விசும்பு ஏர்தரும்; புள்ளும்
உயர் சினைக் குடம்பைக் குரல் தோற்றினவே;
பொய்கையும் போது கண் விழித்தன; பைபயச்
சுடரும் சுருங்கின்று, ஒளியே; பாடு எழுந்து
5
இரங்குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப,
இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி,
எஃகு இருள் அகற்றும் ஏமப் பாசறை,
வைகறை அரவம் கேளியர்! 'பல கோள்
செய் தார் மார்ப! எழுமதி துயில்' என,
10
தெண் கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி,
நெடுங் கடைத் தோன்றியேனே; அது நயந்து,
'உள்ளி வந்த பரிசிலன் இவன்' என,
நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ் சூடு,
மணிக் கலன் நிறைந்த மணம் நாறு தேறல்,
15
பாம்பு உரித்தன்ன வான் பூங் கலிங்கமொடு,
மாரி அன்ன வண்மையின் சொரிந்து,
வேனில் அன்ன என் வெப்பு நீங்க,
அருங் கலம் நல்கியோனே; என்றும்,
செறுவில் பூத்த சேயிதழ்த் தாமரை,
20
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த
தீயொடு விளங்கும் நாடன், வாய் வாள்
வலம் படு தீவின் பொலம் பூண் வளவன்;
எறி திரைப் பெருங் கடல் இறுதிக்கண் செலினும்,
தெறு கதிர்க் கனலி தென் திசைத் தோன்றினும்,
25
'என்?' என்று அஞ்சலம், யாமே; வென் வேல்
அருஞ் சமம் கடக்கும் ஆற்றல் அவன்
திருந்து கழல் நோன் தாள் தண் நிழலேமே.
திணை அது; துறை பரிசில்விடை; கடைநிலை விடையும் ஆம்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 23:07:34(இந்திய நேரம்)