பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ,
ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி,
பெரு விறல் அமரர்க்கு வென்றி தந்த
கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்
பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல,
வேந்து மேம்பட்ட பூந் தார் மாற!
கடுஞ் சினத்த கொல் களிறும்; கதழ் பரிய கலி மாவும்,
நெடுங் கொடிய நிமிர் தேரும், நெஞ்சு உடைய புகல் மறவரும்,
என
நான்குடன் மாண்டதுஆயினும், மாண்ட
அற நெறி முதற்றே, அரசின் கொற்றம்;
அதனால், 'நமர்' எனக் கோல் கோடாது,
'பிறர்' எனக் குணம் கொல்லாது,
ஞாயிற்று அன்ன வெந் திறல் ஆண்மையும்,
திங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும்,
வானத்து அன்ன வண்மையும், மூன்றும்,
நீ நீடு வாழிய நெடுந்தகை! தாழ் நீர்
வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்
நெடு வேள் நிலைஇய காமர் வியன் துறை,
வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே!
திணை பாடாண் திணை; துறை
செவியறிவுறூஉ.
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித்
துஞ்சிய நன்மாறனை மதுரை மருதன் இளநாகனார் பாடியது.
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை,
மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்;
கடல் வளர் புரி வளை புரையும் மேனி,
அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்;
மண்ணுறு திரு மணி புரையும் மேனி,
விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும்,
மணி மயில் உயரிய மாறா வென்றி,
பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என
ஞாலம் காக்கும் கால முன்பின்,
தோலா நல் இசை, நால்வருள்ளும்,
கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ் சீற்றம்;
புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை;
முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின்;
ஆங்கு ஆங்கு அவர் அவர் ஒத்தலின், யாங்கும்
அரியவும் உளவோ, நினக்கே? அதனால்,
இரவலர்க்கு அருங் கலம் அருகாது ஈயா,
யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல்
பொன் செய் புனை கலத்து ஏந்தி, நாளும்
ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து,
ஆங்கு இனிது ஒழுகுமதி! ஓங்கு வாள் மாற!
அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும்
வெங் கதிர்ச் செல்வன் போலவும், குட திசைத்
தண் கதிர் மதியம் போலவும்,
நின்று நிலைஇயர், உலகமோடு உடனே!
திணை அது; துறை பூவை நிலை.
அவனை மதுரைக் கணக்காயனார் மகனார்
நக்கீரனார் பாடியது.
வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன,
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற!
நின் ஒன்று கூறுவது உடையேன்: என் எனின்,
நீயே, பிறர் நாடு கொள்ளும்காலை, அவர் நாட்டு
இறங்கு கதிர்க் கழனி நின் இளையரும் கவர்க;
நனந் தலைப் பேர் ஊர் எரியும் நைக்க;
மின்னு நிமிர்ந்தன்ன நின் ஒளிறு இலங்கு நெடு வேல்
ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்
கடிமரம் தடிதல் ஓம்பு நின்
நெடு நல் யானைக்குக் கந்து ஆற்றாவே.
திணை வஞ்சி; துறை துணை
வஞ்சி.
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக்
காரிக்கண்ணனார் பாடியது.
ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்
ஒல்லாது இல் என மறுத்தலும், இரண்டும்,
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது
இல் என மறுத்தலும், இரண்டும், வல்லே
இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர்
புகழ் குறைபடூஉம் வாயில்அத்தை;
அனைத்து ஆகியர், இனி; இதுவே எனைத்தும்
சேய்த்துக் காணாது கண்டனம்; அதனால்,
நோய் இலராக நின் புதல்வர்; யானும்,
வெயில் என முனியேன், பனி என மடியேன்,
கல் குயின்றன்ன என் நல்கூர் வளி மறை,
நாண் அலது இல்லாக் கற்பின் வாள் நுதல்
மெல் இயல் குறு மகள் உள்ளிச்
செல்வல் அத்தை; சிறக்க, நின் நாளே!
திணை பாடாண் திணை; துறை பரிசில்
கடா நிலை.
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித்
துஞ்சிய நன்மாறன் பரிசில் நீட்டித்தானை ஆவூர் மூலங்
கிழார் பாடியது.
'அருவி தாழ்ந்த பெரு வரை போல
ஆரமொடு பொலிந்த மார்பில் தண்டா,
கடவுள் சான்ற கற்பின், சேயிழை
மடவோள் பயந்த மணி மருள் அவ் வாய்க்
கிண்கிணிப் புதல்வர் பொலிக!' என்று ஏத்தி,
திண் தேர் அண்ணல் நிற் பாராட்டி,
காதல் பெருமையின் கனவினும் அரற்றும் என்
காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப,
ஆல் அமர் கடவுள் அன்ன நின் செல்வம்,
வேல் கெழு குருசில்! கண்டேன்; ஆதலின்,
விடுத்தனென்; வாழ்க, நின் கண்ணி! தொடுத்த
தண் தமிழ் வரைப்பகம் கொண்டி ஆக,
பனித்துக் கூட்டு உண்ணும் தணிப்பு அருங் கடுந் திறல்
நின் ஓரன்ன நின் புதல்வர், என்றும்,
ஒன்னார் வாட அருங் கலம் தந்து, நும்
பொன்னுடை நெடு நகர் நிறைய வைத்த நின்
முன்னோர் போல்க, இவர் பெருங் கண்ணோட்டம்!
யாண்டும் நாளும் பெருகி, ஈண்டு திரைப்
பெருங் கடல் நீரினும், அக் கடல் மணலினும்,
நீண்டு உயர் வானத்து உறையினும், நன்றும்,
இவர் பெறும் புதல்வர்க் காண்தொறும், நீயும்,
புகன்ற செல்வமொடு புகழ் இனிது விளங்கி,
நீடு வாழிய! நெடுந்தகை! யானும்
கேள் இல் சேஎய் நாட்டின், எந்நாளும்,
துளி நசைப் புள்ளின் நின் அளி நசைக்கு இரங்கி, நின்
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித்
துஞ்சிய நன்மாறனை வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்
பாடியது.
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 23:16:50(இந்திய நேரம்)