தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன்

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன்
23
'வெளிறு இல் நோன் காழ்ப் பணை நிலை முனைஇ,
களிறு படிந்து உண்டென, கலங்கிய துறையும்;
கார் நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல்,
சூர் நவை, முருகன் சுற்றத்து அன்ன, நின்
5
கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர்
கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில்
கொள் பதம் ஒழிய வீசிய புலனும்;
வடி நவில் நவியம் பாய்தலின், ஊர்தொறும்
கடி மரம் துளங்கிய காவும்; நெடு நகர்
10
வினை புனை நல் இல் வெவ் எரி நைப்ப,
கனை எரி உரறிய மருங்கும்; நோக்கி,
நண்ணார் நாண, நாள்தொறும் தலைச் சென்று,
இன்னும் இன்ன பல செய்குவன், யாவரும்
துன்னல் போகிய துணிவினோன்' என,
15
ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை
ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட
கால முன்ப! நின் கண்டனென் வருவல்
அறு மருப்பு எழில் கலை புலிப்பால் பட்டென,
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை
20
பூளை நீடிய வெருவரு பறந்தலை
வேளை வெண் பூக் கறிக்கும்
ஆள் இல் அத்தம் ஆகிய காடே.
திணையும் துறையும் அவை; துறை நல்லிசை வஞ்சியும் ஆம்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது.

24
நெல் அரியும் இருந் தொழுவர்
செஞ் ஞாயிற்று வெயில் முனையின்,
தெண் கடல் திரை மிசைப் பாயுந்து;
திண் திமில் வன் பரதவர்
5
வெப்பு உடைய மட்டு உண்டு,
தண் குரவைச் சீர் தூங்குந்து;
தூவல் கலித்த தேம் பாய் புன்னை
மெல் இணர்க் கண்ணி மிலைந்த மைந்தர்
எல் வளை மகளிர்த் தலைக் கை தரூஉந்து;
10
வண்டு பட மலர்ந்த தண் நறுங் கானல்
முண்டகக் கோதை ஒண் தொடி மகளிர்
இரும் பனையின் குரும்பை நீரும்,
பூங் கரும்பின் தீம் சாறும்,
ஓங்கு மணல் குவவுத் தாழைத்
15
தீம் நீரொடு உடன் விராஅய்,
முந் நீர் உண்டு முந்நீர்ப் பாயும்;
தாங்கா உறையுள் நல் ஊர் கெழீஇய
ஓம்பா ஈகை மா வேள் எவ்வி
புனல் அம் புதவின் மிழலையொடு கழனிக்
20
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும்,
பொன் அணி யானைத் தொல் முதிர் வேளிர்,
குப்பை நெல்லின், முத்தூறு தந்த
கொற்ற நீள் குடை, கொடித் தேர்ச் செழிய!
நின்று நிலைஇயர் நின் நாள்மீன்; நில்லாது
25
படாஅச் செலீஇயர், நின் பகைவர் மீனே
நின்னொடு, தொன்று மூத்த உயிரினும், உயிரொடு
நின்று மூத்த யாக்கை அன்ன, நின்
ஆடு குடி மூத்த விழுத் திணைச் சிறந்த
வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த,
30
இரவல் மாக்கள் ஈகை நுவல,
ஒண் தொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய
தண் கமழ் தேறல் மடுப்ப, மகிழ் சிறந்து,
ஆங்கு இனிது ஒழுகுமதி, பெரும! 'ஆங்கு அது
வல்லுநர் வாழ்ந்தோர்' என்ப தொல் இசை,
35
மலர் தலை உலகத்துத் தோன்றி,
பலர், செலச் செல்லாது, நின்று விளிந்தோரே.
திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
அவனை மாங்குடி கிழார் பாடியது.

25
மீன் திகழ் விசும்பில் பாய் இருள் அகல
ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது,
உரவுச் சினம் திருகிய உரு கெழு ஞாயிறு,
நிலவுத் திகழ் மதியமொடு, நிலம் சேர்ந்தாஅங்கு,
5
உடல் அருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை
அணங்கு அரும் பறந்தலை உணங்கப் பண்ணி,
பிணியுறு முரசம் கொண்ட காலை,
நிலை திரிபு எறிய, திண் மடை கலங்கிச்
சிதைதல் உய்ந்தன்றோ, நின் வேல் செழிய!
10
முலை பொலி ஆகம் உருப்ப நூறி,
மெய்ம் மறந்து பட்ட வரையாப் பூசல்
ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர,
அவிர் அறல் கடுக்கும் அம் மென்
குவை இருங் கூந்தல் கொய்தல் கண்டே.
திணை வாகை; துறை அரச வாகை.
அவனைக் கல்லாடனார் பாடியது.

26
நளி கடல் இருங் குட்டத்து
வளி புடைத்த கலம் போல,
களிறு சென்று களன் அகற்றவும்,
களன் அகற்றிய வியல் ஆங்கண்
5
ஒளிறு இலைய எஃகு ஏந்தி,
அரைசு பட அமர் உழக்கி,
உரை செல முரசு வௌவி,
முடித் தலை அடுப்பு ஆக,
புனல் குருதி உலைக் கொளீஇ,
10
தொடித் தோள் துடுப்பின் துழந்த வல்சியின்,
அடுகளம் வேட்ட அடு போர்ச் செழிய!
ஆன்ற கேள்வி, அடங்கிய கொள்கை,
நான் மறை முதல்வர் சுற்றம் ஆக,
மன்னர் ஏவல் செய்ய, மன்னிய
15
வேள்வி முற்றிய வாய் வாள் வேந்தே!
நோற்றோர் மன்ற நின் பகைவர், நின்னொடு
மாற்றார் என்னும் பெயர் பெற்று,
ஆற்றார் ஆயினும், ஆண்டு வாழ்வோரே.
திணையும் துறையும் அவை.
அவனை மாங்குடி கிழார் பாடியது.

76
ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும்,
புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை;
இன்றின் ஊங்கோ கேளலம் திரள் அரை
மன்ற வேம்பின் மாச் சினை ஒண் தளிர்
5
நெடுங் கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து,
செறியத் தொடுத்த தேம் பாய் கண்ணி,
ஒலியல் மாலையொடு, பொலியச் சூடி,
பாடு இன் தெண் கிணை கறங்க, காண்தக,
நாடு கெழு திருவின், பசும் பூண், செழியன்
10
பீடும் செம்மலும் அறியார் கூடி,
'பொருதும்' என்று தன்தலை வந்த
புனை கழல் எழுவர் நல் வலம் அடங்க,
ஒரு தான் ஆகிப் பொருது, களத்து அடலே.
திணை வாகை; துறை அரச வாகை.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை இடைக் குன்றூர் கிழார் பாடியது.

77
கிண்கிணி களைந்த கால் ஒண் கழல் தொட்டு,
குடுமி களைந்த நுதல் வேம்பின் ஒண் தளிர்
நெடுங் கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து,
குறுந் தொடி கழித்த கைச் சாபம் பற்றி,
5
நெடுந் தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன்
யார்கொல்? வாழ்க, அவன் கண்ணி! தார் பூண்டு,
தாலி களைந்தன்றும் இலனே; பால் விட்டு
அயினியும் இன்று அயின்றனனே; வயின்வயின்
உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை
10
வியந்தன்றும், இழிந்தன்றும், இலனே; அவரை
அழுந்தப் பற்றி, அகல் விசும்பு ஆர்ப்பு எழ,
கவிழ்ந்து நிலம் சேர அட்டதை
மகிழ்ந்தன்றும், மலிந்தன்றும், அதனினும் இலனே.
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

78
வணங்கு தொடைப் பொலிந்த வலி கெழு நோன் தாள்,
அணங்கு அருங் கடுந் திறல் என்னை முணங்கு நிமிர்ந்து,
அளைச் செறி உழுவை இரைக்கு வந்தன்ன
மலைப்பு அரும் அகலம் மதியார், சிலைத்து எழுந்து,
5
'விழுமியம், பெரியம், யாமே; நம்மின்
பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது' என,
எள்ளி வந்த வம்ப மள்ளர்
புல்லென் கண்ணர்; புறத்தில் பெயர,
ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான், ஆண்டு அவர்
10
மாண் இழை மகளிர் நாணினர் கழிய,
தந்தை தம் ஊர் ஆங்கண்,
தெண் கிணை கறங்கச் சென்று, ஆண்டு அட்டனனே.
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

79
மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி,
மன்ற வேம்பின் ஒண் குழை மலைந்து,
தெண் கிணை முன்னர்க் களிற்றின் இயலி,
வெம் போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த
5
வம்ப மள்ளரோ பலரே;
எஞ்சுவர் கொல்லோ, பகல் தவச் சிறிதே?
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 23:18:34(இந்திய நேரம்)