தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிசிராந்தையார்

பிசிராந்தையார்
67
அன்னச் சேவல்! அன்னச் சேவல்!
ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல்
நாடு தலை அளிக்கும் ஒள் முகம் போல,
கோடு கூடு மதியம் முகிழ் நிலா விளங்கும்
5
மையல் மாலை, யாம் கையறுபு இனைய,
குமரிஅம் பெருந் துறை அயிரை மாந்தி,
வடமலைப் பெயர்குவைஆயின், இடையது
சோழ நல் நாட்டுப் படினே, கோழி
உயர் நிலை மாடத்து, குறும்பறை அசைஇ,
10
வாயில் விடாது கோயில் புக்கு, எம்
பெருங் கோக் கிள்ளி கேட்க, 'இரும் பிசிர்
ஆந்தை அடியுறை' எனினே, மாண்ட நின்
இன்புறு பேடை அணிய, தன்
அன்புறு நன் கலம் நல்குவன் நினக்கே.
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
கோப்பெருஞ் சோழனைப் பிசிராந்தையார் பாடியது.

215
கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்
தாது எரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண் பூ வெண் தயிர்க் கொளீஇ,
ஆய்மகள் அட்ட அம் புளி மிதவை
5
அவரை கொய்யுநர் ஆர மாந்தும்
தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும்
பிசிரோன் என்ப, என் உயிர் ஓம்புநனே;
செல்வக் காலை நிற்பினும்,
அல்லற் காலை நில்லலன்மன்னே.
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
கோப்பெருஞ்சோழன், 'பிசிராந்தையார் வாரார்' என்ற சான்றோர்க்கு, 'அவர் வருவார்' என்று சொல்லியது.

216
'கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும்
காண்டல் இல்லாது யாண்டு பல கழிய,
வழு இன்று பழகிய கிழமையர் ஆயினும்,
அரிதே, தோன்றல்! அதற்பட ஒழுகல்' என்று,
5
ஐயம் கொள்ளன்மின், ஆர் அறிவாளீர்!
இகழ்விலன்; இனியன்; யாத்த நண்பினன்;
புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலனே;
தன் பெயர் கிளக்கும்காலை, 'என் பெயர்
பேதைச் சோழன்' என்னும், சிறந்த
10
காதற் கிழமையும் உடையன்; அதன்தலை,
இன்னது ஓர் காலை நில்லலன்;
இன்னே வருகுவன்; ஒழிக்க, அவற்கு இடமே!
திணையும் துறையும் அவை.
அவன் வடக்கிருந்தான், 'பிசிராந்தையார்க்கு இடன் ஒழிக்க!' என்றது.

217
நினைக்கும் காலை மருட்கை உடைத்தே,
எனைப் பெருஞ் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல்;
அதனினும் மருட்கை உடைத்தே, பிறன் நாட்டுத்
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி,
5
இசை மரபு ஆக, நட்புக் கந்து ஆக,
இனையது ஓர் காலை ஈங்கு வருதல்;
'வருவன்' என்ற கோனது பெருமையும்,
அது பழுது இன்றி வந்தவன் அறிவும்,
வியத்தொறும் வியத்தொறும் வியப்பு இறந்தன்றே;
10
அதனால், தன் கோல் இயங்காத் தேயத்து உறையும்
சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்று இசை
அன்னோனை இழந்த இவ் உலகம்
என் ஆவதுகொல்? அளியது தானே!
திணை பொதுவியல்; துறை கையறுநிலை.
அவன் வடக்கிருந்தானுழைச் சென்ற பிசிராந்தையாரைக் கண்டு பொத்தியார் பாடியது.

218
பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய
மா மலை பயந்த காமரு மணியும்,
இடைபடச் சேய ஆயினும், தொடை புணர்ந்து,
அரு விலை நன் கலம் அமைக்கும்காலை,
5
ஒரு வழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப;
சாலார் சாலார் பாலர் ஆகுபவே.
திணையும் துறையும் அவை.
பிசிராந்தையார் வடக்கிருந்தாரைக் கண்ட கண்ணகனார் பாடியது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 23:22:11(இந்திய நேரம்)