தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மலையமான் திருமுடிக்காரி

மலையமான் திருமுடிக்காரி
121
ஒரு திசை ஒருவனை உள்ளி, நால் திசைப்
பலரும் வருவர், பரிசில் மாக்கள்;
வரிசை அறிதலோ அரிதே; பெரிதும்
ஈதல் எளிதே; மா வண் தோன்றல்!
5
அது நற்கு அறிந்தனைஆயின்,
பொது நோக்கு ஒழிமதி, புலவர் மாட்டே!
திணை அது; துறை பொருண் மொழிக் காஞ்சி.
மலையமான் திருமுடிக்காரியைக் கபிலர் பாடியது.

122
கடல் கொளப்படாஅது, உடலுநர் ஊக்கார்,
கழல் புனை திருந்து அடிக் காரி! நின் நாடே;
அழல் புறந்தரூஉம் அந்தணரதுவே;
வீயாத் திருவின் விறல் கெழு தானை
5
மூவருள் ஒருவன், 'துப்பு ஆகியர்' என,
ஏத்தினர் தரூஉம் கூழே, நும் குடி
வாழ்த்தினர் வரூஉம் இரவலரதுவே;
வடமீன் புரையும் கற்பின், மட மொழி,
அரிவை தோள் அளவு அல்லதை,
10
நினது என இலை நீ பெருமிதத்தையே.
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

123
நாள் கள் உண்டு, நாள் மகிழ் மகிழின்,
யார்க்கும் எளிதே, தேர் ஈதல்லே;
தொலையா நல் இசை விளங்கு மலையன்
மகிழாது ஈத்த இழை அணி நெடுந் தேர்
5
பயன் கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி உறையினும் பலவே.
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

124
நாள் அன்று போகி, புள் இடை தட்ப,
பதன் அன்று புக்கு, திறன் அன்று மொழியினும்,
வறிது பெயர்குநர்அல்லர் நெறி கொளப்
பாடு ஆன்று, இரங்கும் அருவிப்
5
பீடு கெழு மலையன் பாடியோரே.
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

126
ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு,
பாணர் சென்னி பொலியத் தைஇ,
வாடாத் தாமரை சூட்டிய விழுச் சீர்
ஓடாப் பூட்கை உரவோன் மருக!
5
வல்லேம் அல்லேம் ஆயினும், வல்லே
நின்வயின் கிளக்குவமாயின், கங்குல்
துயில் மடிந்தன்ன தூங்கு இருள் இறும்பின்,
பறை இசை அருவி, முள்ளூர்ப் பொருந!
தெறல் அரு மரபின் நின் கிளையொடும் பொலிய,
10
நிலமிசைப் பரந்த மக்கட்கு எல்லாம்
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்,
இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி,
பரந்து இசை நிற்கப் பாடினன்; அதற்கொண்டு
சினம் மிகு தானை வானவன் குட கடல்,
15
பொலம் தரு நாவாய் ஓட்டிய அவ் வழி,
பிற கலம் செல்கலாது அனையேம் அத்தை,
இன்மை துரப்ப, இசை தர வந்து, நின்
வண்மையின் தொடுத்தனம், யாமே முள் எயிற்று
அரவு எறி உருமின் முரசு எழுந்து இயம்ப,
20
அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய,
அருஞ் சமம் ததையத் தாக்கி, நன்றும்
நண்ணாத் தெவ்வர்த் தாங்கும்
பெண்ணை அம் படப்பை நாடு கிழவோயே!
திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை.
மலையமான் திருமுடிக் காரியை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 23:24:45(இந்திய நேரம்)