Skip to main content
தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY
தேடல் படிவம்
தேடல்
த.இ.க. பற்றி
தொடர்புக்கு
மொழிகள்
தமிழ்
English
தமிழ் இணையக் கல்விக்கழகம் - Tamil Virtual Academy
தமிழ் இணையக் கல்விக்கழகம்
- Tamil Virtual Academy
Navigation
கல்வித் திட்டங்கள்
தொடர்பு மையங்கள்
ஒப்பந்தப் படிவம்
கட்டண விவரங்கள்
மாணவர் பதிவு
தேர்வு முறை
மின் கற்றலுக்கான இணையத்தளம்
தமிழ்ப் பரப்புரைக்கழகம்
கல்வி விவரங்கள்
மழலைக்கல்வி
சான்றிதழ்
மேற்சான்றிதழ்
பட்டயம்
மேற்பட்டயம்
பட்டம்
ஆசிரியர் பட்டயப் பயிற்சி
பாடங்கள்
மழலைக்கல்வி
சான்றிதழ்
மேற்சான்றிதழ்
பட்டயம்
மேற் பட்டயம்
பட்டம்
பிற
புதிய பாடத்திட்டம் 2022
ஆசிரியர் பட்டயப் பயிற்சி
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
மற்ற குறிப்புகள்
இணைய வகுப்பறை
குறிப்புப் புத்தகங்கள்
கையடக்க கருவிகளில் த.இ.க
தமிழ்க்கருவிகள்
பிற இணையத்தளங்கள்
அயல் நாடுகளில் தமிழ்ப் பள்ளிகள்
பயணியர் தமிழ்
பயில் செயலி
நூலகம்
நூல்கள்
நிகண்டுகள்
அகராதிகள்
கலைச்சொற்கள்
கலைக்களஞ்சியங்கள்
சுவடிக்காட்சியகம்
பண்பாட்டுக் காட்சியகம்
திருத்தலங்கள்
திருவிழாக்கள்
வரலாற்றுச்சின்னங்கள்
கலைகள்
விளையாட்டுகள்
திருக்கோயில்கள் சாலை வரைபடம்
தமிழிணையம் - மின்னூலகம்
கணித்தமிழ்
கணித்தமிழ்ப் பேரவை
வலைப்பூக்கள்
கருத்துரைக்க
தமிழ்க்கருவிகள்
காட்சியகம்
கான் கல்விக்கழகக் காணொலிகள்
தமிழ் மென்பொருள்கள்
தமிழ் ஒருங்குறி
மென்பொருள் சான்றளிப்பு
கணினித் தமிழ் வளர்ச்சியும் சவால்களும்
தமிழ்ப்பெருங்களஞ்சியம்
மென்பொருள் பதிவிறக்கங்கள்
ஆய்வு மற்றும் உருவாக்கம்
இலக்கணக் குறிப்பு விரிதரவு
இலக்கிய விரிதரவகம்
தொடரியல்-பொருண்மை விரிதரவகம்
சொல்-பொருள் இலக்கியம்
தமிழ் சொற்றொடர்-அமைப்பு-விதிமுறை
இயற்கை மொழியாய்வுக் கருவிகள்
தமிழ்க் கணினிக் கருவிகள்
வாய்மொழித் தரவு
தமிழ் மென்பொருள் மேம்பாட்டு நிதி
தமிழ் எழுத்துருக்கள்
தகவலாற்றுப்படை
தமிழகத் தகவல் தளம்
விளக்க விரிவுரைகள்
மாதந்திர தொடர் சொற்பொழிவு அழைப்பிதழ்கள்
தமிழிணையம் - தமிழர் தகவலாற்றுப்படை
மாதந்திர தொடர் சொற்பொழிவு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - குறும்படங்கள்
முகப்பு
>
நூலகம்
>
நூல்கள்
>
பொதுவியல்
பொதுவியல்
Primary tabs
பார்
(active tab)
What links here
முகப்பு
பொதுவியல்
18
முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்துபட்ட வியல் ஞாலம்
தாளின் தந்து, தம் புகழ் நிறீஇ,
ஒரு தாம் ஆகிய உரவோர் உம்பல்!
5
ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய
பெருமைத்தாக, நின் ஆயுள்தானே!
நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப்
பூக் கதூஉம் இன வாளை,
நுண் ஆரல், பரு வரால்,
10
குரூஉக் கெடிற்ற, குண்டு அகழி;
வான் உட்கும் வடி நீள் மதில்;
மல்லல் மூதூர் வய வேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,
ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி,
15
ஒரு நீ ஆகல் வேண்டினும், சிறந்த
நல் இசை நிறுத்தல் வேண்டினும், மற்று அதன்
தகுதி கேள், இனி, மிகுதியாள!
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே;
20
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே;
வித்தி வான் நோக்கும் புன் புலம் கண் அகன்
25
வைப்பிற்று ஆயினும், நண்ணி ஆளும்
இறைவன் தாட்கு உதவாதே; அதனால்,
அடு போர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன் நெளி மருங்கில் நீர் நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண் தட்டோரே;
30
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே.
திணை பொதுவியல்; துறை முதுமொழிக் காஞ்சி.
பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடியது.
உரை
24
நெல் அரியும் இருந் தொழுவர்
செஞ் ஞாயிற்று வெயில் முனையின்,
தெண் கடல் திரை மிசைப் பாயுந்து;
திண் திமில் வன் பரதவர்
5
வெப்பு உடைய மட்டு உண்டு,
தண் குரவைச் சீர் தூங்குந்து;
தூவல் கலித்த தேம் பாய் புன்னை
மெல் இணர்க் கண்ணி மிலைந்த மைந்தர்
எல் வளை மகளிர்த் தலைக் கை தரூஉந்து;
10
வண்டு பட மலர்ந்த தண் நறுங் கானல்
முண்டகக் கோதை ஒண் தொடி மகளிர்
இரும் பனையின் குரும்பை நீரும்,
பூங் கரும்பின் தீம் சாறும்,
ஓங்கு மணல் குவவுத் தாழைத்
15
தீம் நீரொடு உடன் விராஅய்,
முந் நீர் உண்டு முந்நீர்ப் பாயும்;
தாங்கா உறையுள் நல் ஊர் கெழீஇய
ஓம்பா ஈகை மா வேள் எவ்வி
புனல் அம் புதவின் மிழலையொடு கழனிக்
20
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும்,
பொன் அணி யானைத் தொல் முதிர் வேளிர்,
குப்பை நெல்லின், முத்தூறு தந்த
கொற்ற நீள் குடை, கொடித் தேர்ச் செழிய!
நின்று நிலைஇயர் நின் நாள்மீன்; நில்லாது
25
படாஅச் செலீஇயர், நின் பகைவர் மீனே
நின்னொடு, தொன்று மூத்த உயிரினும், உயிரொடு
நின்று மூத்த யாக்கை அன்ன, நின்
ஆடு குடி மூத்த விழுத் திணைச் சிறந்த
வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த,
30
இரவல் மாக்கள் ஈகை நுவல,
ஒண் தொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய
தண் கமழ் தேறல் மடுப்ப, மகிழ் சிறந்து,
ஆங்கு இனிது ஒழுகுமதி, பெரும! 'ஆங்கு அது
வல்லுநர் வாழ்ந்தோர்' என்ப தொல் இசை,
35
மலர் தலை உலகத்துத் தோன்றி,
பலர், செலச் செல்லாது, நின்று விளிந்தோரே.
திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
அவனை மாங்குடி கிழார் பாடியது.
உரை
27
சேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ்,
நூற்று இதழ் அலரின் நிரை கண்டன்ன,
வேற்றுமை இல்லா விழுத் திணைப் பிறந்து,
வீற்றிருந்தோரை எண்ணும்காலை,
5
உரையும் பாட்டும் உடையோர் சிலரே;
மரை இலை போல மாய்ந்திசினோர் பலரே;
'புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி
எய்துப என்ப, தம் செய் வினை முடித்து' எனக்
10
கேட்பல்; எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி!
தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும்,
மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும்,
அறியாதோரையும் அறியக் காட்டி,
திங்கள் புத்தேள் திரிதரும் உலகத்து,
15
வல்லார் ஆயினும், வல்லுநர்ஆயினும்,
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி,
அருள, வல்லை ஆகுமதி; அருள் இலர்
கொடாஅமை வல்லர் ஆகுக;
கெடாஅத துப்பின் நின் பகை எதிர்ந்தோரே.
திணை பொதுவியல்; துறை முதுமொழிக்காஞ்சி.
சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.
உரை
28
'சிறப்பு இல் சிதடும், உறுப்பு இல் பிண்டமும்,
கூனும், குறளும், ஊமும், செவிடும்,
மாவும், மருளும், உளப்பட வாழ்நர்க்கு
எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம்
5
பேதைமை அல்லது ஊதியம் இல்' என,
முன்னும், அறிந்தோர் கூறினர்; இன்னும்,
அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது
வட்ட வரிய செம் பொறிச் சேவல்
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்
10
கானத்தோர், நின் தெவ்வர்; நீயே,
புறஞ்சிறை மாக்கட்கு அறம் குறித்து, அகத்தோர்
புய்த்து எறி கரும்பின் விடு கழை தாமரைப்
பூம் போது சிதைய வீழ்ந்தென, கூத்தர்
ஆடு களம் கடுக்கும் அக நாட்டையே;
15
அதனால், அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும், பெரும! நின் செல்வம்;
ஆற்றாமை நிற் போற்றாமையே.
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.
உரை
29
அழல் புரிந்த அடர் தாமரை
ஐது அடர்ந்த நூல் பெய்து,
புனை வினைப் பொலிந்த பொலன் நறுந் தெரியல்
பாறு மயிர் இருந் தலை பொலியச் சூடி,
5
பாண் முற்றுக, நின் நாள் மகிழ் இருக்கை!
பாண் முற்று ஒழிந்த பின்றை, மகளிர்
தோள் முற்றுக, நின் சாந்து புலர் அகலம்! ஆங்க
முனிவு இல் முற்றத்து, இனிது முரசு இயம்ப,
கொடியோர்த் தெறுதலும், செவ்வியோர்க்கு அளித்தலும்,
10
ஒடியா முறையின் மடிவு இலை ஆகி,
'நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லை' என்போர்க்கு இனன் ஆகிலியர்!
நெல் விளை கழனிப் படு புள் ஓப்புநர்
ஒழி மடல் விறகின் கழி மீன் சுட்டு,
15
வெங் கள் தொலைச்சியும், அமையார், தெங்கின்
இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நல் நாடு
பெற்றனர் உவக்கும் நின் படை கொள் மாக்கள்
பற்றா மாக்களின் பரிவு முந்துறுத்து,
கூவை துற்ற நாற் கால் பந்தர்ச்
20
சிறு மனை வாழ்க்கையின் ஒரீஇ, வருநர்க்கு
உதவி ஆற்றும் நண்பின் பண்புடை
ஊழிற்றாக, நின் செய்கை! விழவில்
கோடியர் நீர்மை போல முறைமுறை
ஆடுநர் கழியும் இவ் உலகத்து, கூடிய
25
நகைப்புறன் ஆக, நின் சுற்றம்!
இசைப்புறன் ஆக, நீ ஓம்பிய பொருளே!
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.
உரை
65
மண் முழா மறப்ப, பண் யாழ் மறப்ப,
இருங் கண் குழிசி கவிழ்ந்து இழுது மறப்ப,
சுரும்பு ஆர் தேறல் சுற்றம் மறப்ப,
உழவர் ஓதை மறப்ப, விழவும்
5
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப,
உவவுத் தலைவந்த பெரு நாள் அமையத்து,
இரு சுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர்
புன்கண் மாலை மலை மறைந்தாங்கு,
தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
10
புறப் புண் நாணி, மறத் தகை மன்னன்
வாள் வடக்கிருந்தனன்; ஈங்கு,
நாள் போல் கழியல, ஞாயிற்றுப் பகலே.
சேரமான் பெருஞ் சேரலாதன் சோழன் கரிகாற் பெருவளத்தானோடு பொருது, புறப் புண் நாணி, வடக்கிருந்தானைக் கழாத்தலையார் பாடியது.
உரை
74
குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
'ஆள் அன்று' என்று வாளின் தப்பார்;
தொடர்ப் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம்,
5
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணிய,
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ, இவ் உலகத்தானே?
திணை பொதுவியல்; துறை முதுமொழிக் காஞ்சி.
சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப் புறத்துப் பொருது, பற்றுக் கோட்பட்டு, குடவாயில் கோட்டத்துச் சிறையில் கிடந்து, 'தண்ணீர் தா' என்று பெறாது, பெயர்த்துப் பெற்று, கைக் கொண்டிருந்து
உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு.
உரை
75
'மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தென,
பால் தர வந்த பழ விறல் தாயம்
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு' எனக்
குடி புரவு இரக்கும் கூர் இல் ஆண்மைச்
5
சிறியோன் பெறின், அது சிறந்தன்று மன்னே;
மண்டு அமர் பரிக்கும் மதன் உடை நோன் தாள்
விழுமியோன் பெறுகுவனாயின், தாழ் நீர்
அறு கயமருங்கின் சிறு கோல் வெண் கிடை
என்றூழ் வாடு வறல் போல, நன்றும்
10
நொய்தால் அம்ம தானே மை அற்று,
விசும்புற ஓங்கிய வெண் குடை,
முரசு கெழு வேந்தர் அரசு கெழு திருவே.
திணை அது; துறை பொருண்மொழிக் காஞ்சி.
சோழன் நலங்கிள்ளி பாட்டு.
உரை
112
அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவின்,
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவின்,
வென்று எறி முரசின் வேந்தர் எம்
5
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!
திணை பொதுவியல்; துறை கையறுநிலை.
பாரி மகளிர் பாடியது.
உரை
113
மட்டு வாய் திறப்பவும், மை விடை வீழ்ப்பவும்,
அட்டு ஆன்று ஆனாக் கொழுந் துவை ஊன் சோறும்
பெட்டாங்கு ஈயும் பெரு வளம் பழுனி,
நட்டனை மன்னோ, முன்னே; இனியே,
5
பாரி மாய்ந்தென, கலங்கிக் கையற்று,
நீர் வார் கண்ணேம் தொழுது நிற் பழிச்சிச்
சேறும் வாழியோ பெரும் பெயர்ப் பறம்பே!
கோல் திரள் முன் கைக் குறுந் தொடி மகளிர்
நாறு இருங் கூந்தல் கிழவரைப் படர்ந்தே.
திணையும் துறையும் அவை.
அவன் மகளிரைப் பார்ப்பார்ப் படுக்கக் கொண்டுபோவான் பறம்பு விடுத்த கபிலர் பாடியது.
உரை
114
ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும்; சிறு வரை
சென்று நின்றோர்க்கும் தோன்றும், மன்ற
களிறு மென்று இட்ட கவளம் போல,
நறவுப் பிழிந்து இட்ட கோதுடைச் சிதறல்
5
வார் அசும்பு ஒழுகும் முன்றில்,
தேர் வீசு இருக்கை, நெடியோன் குன்றே.
திணையும் துறையும் அவை.
அவன் மகளிரைக் கொண்டுபோம் கபிலர் பறம்பு நோக்கி நின்று சொல்லியது.
உரை
115
ஒரு சார் அருவி ஆர்ப்ப, ஒரு சார்
பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்,
வாக்க உக்க தேக் கள் தேறல்
கல் அலைத்து ஒழுகும்மன்னே! பல் வேல்,
5
அண்ணல் யானை, வேந்தர்க்கு
இன்னான் ஆகிய இனியோன் குன்றே.
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.
உரை
116
தீம் நீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த குவளைக்
கூம்பு அவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல்,
ஏந்து எழில் மழைக் கண், இன் நகை, மகளிர்
புல் மூசு கவலைய முள் மிடை வேலி,
5
பஞ்சி முன்றில், சிற்றில் ஆங்கண்,
பீரை நாறிய சுரை இவர் மருங்கின்,
ஈத்து இலைக் குப்பை ஏறி, உமணர்
உப்பு ஒய் ஒழுகை எண்ணுப மாதோ;
நோகோ யானே; தேய்கமா, காலை!
10
பயில் பூஞ் சோலை மயில் எழுந்து ஆலவும்,
பயில் இருஞ் சிலம்பில் கலை பாய்ந்து உகளவும்,
கலையும் கொள்ளாவாக, பலவும்
காலம் அன்றியும் மரம் பயம் பகரும்
யாணர் அறாஅ வியல் மலை அற்றே
15
அண்ணல் நெடு வரை ஏறி, தந்தை
பெரிய நறவின், கூர் வேல் பாரியது
அருமை அறியார், போர் எதிர்ந்து வந்த
வலம் படு தானை வேந்தர்
பொலம் படைக் கலி மா எண்ணுவோரே.
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.
உரை
117
மைம்மீன் புகையினும், தூமம் தோன்றினும்,
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்,
வயலகம் நிறைய, புதல் பூ மலர,
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க் கண்
5
ஆமா நெடு நிரை நன் புல் ஆர,
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கி,
பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத்ததுவே
பிள்ளை வெருகின் முள் எயிறு புரையப்
பாசிலை முல்லை முகைக்கும்
10
ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே.
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.
உரை
118
அறையும் பொறையும் மணந்த தலைய,
எண் நாள் திங்கள் அனைய கொடுங் கரைத்
தெள் நீர்ச் சிறு குளம் கீள்வது மாதோ
கூர் வேல் குவைஇய மொய்ம்பின்
5
தேர் வண் பாரி தண் பறம்பு நாடே!
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.
உரை
119
கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலை,
களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்ப,
செம் புற்று ஈயலின் இன் அளைப் புளித்து;
மென் தினை யாணர்த்து; நந்தும் கொல்லோ
5
நிழல் இல் நீள் இடைத் தனி மரம் போல,
பணை கெழு வேந்தரை இறந்தும்
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.
உரை
120
வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ் சுவல்
கார்ப் பெயல் கலித்த பெரும் பாட்டு ஈரத்து,
பூழி மயங்கப் பல உழுது, வித்தி,
பல்லி ஆடிய பல் கிளைச் செவ்விக்
5
களை கால் கழாலின், தோடு ஒலிபு நந்தி,
மென் மயில் புனிற்றுப் பெடை கடுப்ப நீடி,
கருந் தாள் போகி, ஒருங்கு பீள் விரிந்து,
கீழும் மேலும் எஞ்சாமைப் பல காய்த்து,
வாலிதின் விளைந்த புது வரகு அரிய,
10
தினை கொய்ய, கவ்வை கறுப்ப, அவரைக்
கொழுங் கொடி விளர்க் காய் கோட் பதம் ஆக,
நிலம் புதைப் பழுனிய மட்டின் தேறல்
புல் வேய்க் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து,
நறு நெய்க் கடலை விசைப்ப, சோறு அட்டு,
15
பெருந்தோள் தாலம் பூசல் மேவர,
வருந்தா யாணர்த்து; நந்தும்கொல்லோ
இரும் பல் கூந்தல் மடந்தையர் தந்தை
ஆடு கழை நரலும் சேட் சிமை, புலவர்
பாடி ஆனாப் பண்பின் பகைவர்
20
ஓடு கழல் கம்பலை கண்ட
செரு வெஞ் சேஎய் பெரு விறல் நாடே!
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.
உரை
121
ஒரு திசை ஒருவனை உள்ளி, நால் திசைப்
பலரும் வருவர், பரிசில் மாக்கள்;
வரிசை அறிதலோ அரிதே; பெரிதும்
ஈதல் எளிதே; மா வண் தோன்றல்!
5
அது நற்கு அறிந்தனைஆயின்,
பொது நோக்கு ஒழிமதி, புலவர் மாட்டே!
திணை அது; துறை பொருண் மொழிக் காஞ்சி.
மலையமான் திருமுடிக்காரியைக் கபிலர் பாடியது.
உரை
182
உண்டால் அம்ம, இவ் உலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவதுஆயினும், 'இனிது' எனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,
5
புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழி எனின்,
உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகி,
தமக்கு என முயலா நோன் தாள்,
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே.
திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி பாட்டு.
உரை
183
உற்றுழி உதவியும், உறு பொருள் கொடுத்தும்,
பிற்றை நிலை முனியாது, கற்றல் நன்றே;
பிறப்பு ஓரன்ன உடன்வயிற்றுள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;
5
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்,
'மூத்தோன் வருக' என்னாது, அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
10
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே.
திணையும் துறையும் அவை.
பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் பாட்டு.
உரை
185
கால் பார் கோத்து, ஞாலத்து இயக்கும்
காவற் சாகாடு கைப்போன் மாணின்,
ஊறு இன்றாகி ஆறு இனிது படுமே;
உய்த்தல் தேற்றானாயின், வைகலும்,
5
பகைக் கூழ் அள்ளற் பட்டு,
மிகப் பல் தீ நோய் தலைத்தலைத் தருமே.
திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
தொண்டைமான் இளந்திரையன் பாட்டு.
உரை
186
நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்:
அதனால், யான் உயிர் என்பது அறிகை
வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே.
திணையும் துறையும் அவை.
மோசிகீரனார் பாடியது.
உரை
187
நாடா கொன்றோ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;
எவ் வழி நல்லவர் ஆடவர்,
அவ் வழி நல்லை; வாழிய நிலனே!
திணையும் துறையும் அவை.
ஒளவையார் பாடியது.
உரை
188
படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப் பெருஞ் செல்வர் ஆயினும், இடைப் படக்
குறுகுறு நடந்து, சிறு கை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்,
5
நெய்யுடை அடிசில் மெய் பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக் குறை இல்லை தாம் வாழு நாளே.
திணையும் துறையும் அவை.
பாண்டியன் அறிவுடை நம்பி பாட்டு.
உரை
189
தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண் குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்,
நடு நாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடு மாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
5
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓர் ஒக்குமே;
செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.
திணையும் துறையும் அவை.
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
உரை
190
விளை பதச் சீறிடம் நோக்கி, வளை கதிர்
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும்
எலி முயன்றனையர் ஆகி, உள்ள தம்
வளன் வலியுறுக்கும் உளம் இலாளரொடு
5
இயைந்த கேண்மை இல்லாகியரோ!
கடுங் கண் கேழல் இடம் பட வீழ்ந்தென,
அன்று அவண் உண்ணாதாகி, வழி நாள்,
பெரு மலை விடரகம் புலம்ப, வேட்டு எழுந்து,
இருங் களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும்
10
புலி பசித்தன்ன மெலிவு இல் உள்ளத்து
உரனுடையாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உள ஆகியரோ!
திணையும் துறையும் அவை.
சோழன் நல்லுருத்திரன் பாட்டு.
உரை
191
'யாண்டு பல ஆக, நரை இல ஆகுதல்
யாங்கு ஆகியர்?' என வினவுதிர் ஆயின்,
மாண்ட என் மனைவியொடு, மக்களும் நிரம்பினர்;
யான் கண்டனையர் என் இளையரும்; வேந்தனும்
5
அல்லவை செய்யான், காக்கும்; அதன்தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர், யான் வாழும் ஊரே.
திணையும் துறையும் அவை.
கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தானுழைச் சென்ற பிசிராந்தையாரை,'கேட்கும் காலம் பலவாலோ? நரை நுமக்கு இல்லையாலோ?' என்ற சான்றோர்க்கு அவர் சொற்றது.
உரை
192
யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர் தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
5
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னாது என்றலும் இலமே; 'மின்னொடு
வானம் தண் துளி தலை இ, ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர் உயிர்
10
முறை வழிப்படூஉம்' என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
திணையும் துறையும் அவை.
கணியன் பூங்குன்றன் பாட்டு.
உரை
193
அதள் எறிந்தன்ன நெடு வெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல,
ஓடி உய்தலும் கூடும்மன்;
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே.
திணையும் துறையும் அவை.
ஓரேருழவர் பாட்டு.
உரை
194
ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப,
புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,
5
படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!
இன்னாது அம்ம, இவ் உலகம்;
இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே.
திணை அது; துறை பெருங் காஞ்சி.
பக்குடுக்கை நன்கணியார் பாடியது.
உரை
195
பல் சான்றீரே! பல் சான்றீரே!
கயல் முள் அன்ன நரை முதிர் திரை கவுள்,
பயன் இல் மூப்பின், பல் சான்றீரே!
கணிச்சிக் கூர்ம் படைக் கடுந் திறல் ஒருவன்
5
பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ;
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்,
நல் ஆற்றுப் படூஉம் நெறியும்மார் அதுவே.
திணை அது; துறை பொருண் மொழிக் காஞ்சி.
நரிவெரூஉத்தலையார் பாடியது.
உரை
214
'செய்குவம்கொல்லோ, நல்வினை?' எனவே
ஐயம் அறாஅர், கசடு ஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவு இல்லோரே;
யானை வேட்டுவன் யானையும் பெறுமே;
5
குறும்பூழ் வேட்டுவன் வறுங் கையும் வருமே:
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு,
செய்வினை மருங்கின் எய்தல் உண்டு எனின்,
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்;
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல் எனின்,
10
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்;
மாறிப் பிறவார் ஆயினும், இமயத்துக்
கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டு,
தீது இல் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே.
திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
அவன் வடக்கிருந்தான் சொற்றது.
உரை
217
நினைக்கும் காலை மருட்கை உடைத்தே,
எனைப் பெருஞ் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல்;
அதனினும் மருட்கை உடைத்தே, பிறன் நாட்டுத்
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி,
5
இசை மரபு ஆக, நட்புக் கந்து ஆக,
இனையது ஓர் காலை ஈங்கு வருதல்;
'வருவன்' என்ற கோனது பெருமையும்,
அது பழுது இன்றி வந்தவன் அறிவும்,
வியத்தொறும் வியத்தொறும் வியப்பு இறந்தன்றே;
10
அதனால், தன் கோல் இயங்காத் தேயத்து உறையும்
சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்று இசை
அன்னோனை இழந்த இவ் உலகம்
என் ஆவதுகொல்? அளியது தானே!
திணை பொதுவியல்; துறை கையறுநிலை.
அவன் வடக்கிருந்தானுழைச் சென்ற பிசிராந்தையாரைக் கண்டு பொத்தியார் பாடியது.
உரை
218
பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய
மா மலை பயந்த காமரு மணியும்,
இடைபடச் சேய ஆயினும், தொடை புணர்ந்து,
அரு விலை நன் கலம் அமைக்கும்காலை,
5
ஒரு வழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப;
சாலார் சாலார் பாலர் ஆகுபவே.
திணையும் துறையும் அவை.
பிசிராந்தையார் வடக்கிருந்தாரைக் கண்ட கண்ணகனார் பாடியது.
உரை
219
உள் ஆற்றுக் கவலைப் புள்ளி நீழல்,
முழூஉ வள்ளூரம் உணக்கும் மள்ள!
புலவுதி மாதோ நீயே
பலரால் அத்தை, நின் குறி இருந்தோரே.
திணையும் துறையும் அவை.
அவன் வடக்கிருந்தானைக் கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார் பாடியது.
உரை
220
பெருஞ் சோறு பயந்து, பல் யாண்டு புரந்த
பெருங் களிறு இழந்த பைதல் பாகன்
அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை,
வெளில் பாழாகக் கண்டு கலுழ்ந்தாங்கு,
5
கலங்கினென் அல்லனோ, யானே பொலந் தார்த்
தேர் வண் கிள்ளி போகிய
பேர் இசை மூதூர் மன்றம் கண்டே?
திணையும் துறையும் அவை.
அவன் வடக்கிருந்தானுழைச் சென்று மீண்டு வந்து உறையூர் கண்ட பொத்தியார் அழுது பாடியது.
உரை
221
பாடுநர்க்கு ஈத்த பல் புகழன்னே;
ஆடுநர்க்கு ஈத்த பேர் அன்பினனே;
அறவோர் புகழ்ந்த ஆய் கோலன்னே;
திறவோர் புகழ்ந்த திண் அன்பினனே;
5
மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து;
துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்;
அனையன் என்னாது, அத் தக்கோனை,
நினையாக் கூற்றம் இன் உயிர் உய்த்தன்று;
பைதல் ஒக்கல் தழீஇ, அதனை
10
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்!
'நனந் தலை உலகம் அரந்தை தூங்க,
கெடு இல் நல் இசை சூடி,
நடுகல் ஆயினன் புரவலன்' எனவே.
திணையும் துறையும் அவை.
அவன் நடுகல் கண்டு அவர் பாடியது.
உரை
222
'அழல் அவிர் வயங்கு இழைப் பொலிந்த மேனி,
நிழலினும் போகா, நின் வெய்யோள் பயந்த
புகழ்சால் புதல்வன் பிறந்த பின் வா' என,
என் இவண் ஒழித்த அன்பிலாள!
5
எண்ணாது இருக்குவை அல்லை;
என் இடம் யாது? மற்று இசை வெய்யோயே!
திணையும் துறையும் அவை.
அவனை, தன் மகன் பிறந்த பின் பெயர்த்துச் சென்று, பொத்தியார், 'எனக்கு இடம் தா' என்று சொற்றது.
உரை
223
பலர்க்கு நிழல் ஆகி, உலகம் மீக்கூறி,
தலைப்போகன்மையின் சிறு வழி மடங்கி,
நிலை பெறு நடுகல் ஆகியக் கண்ணும்,
இடம் கொடுத்து அளிப்ப, மன்ற உடம்போடு
5
இன் உயிர் விரும்பும் கிழமைத்
தொல் நட்புடையார் தம் உழைச் செலினே.
திணையும் துறையும் அவை.
கல்லாகியும் இடம் கொடுத்த கோப்பெருஞ்சோழனை வடக்கிருந்த பொத்தியார் பாடியது.
உரை
224
அருப்பம் பேணாது அமர் கடந்ததூஉம்;
துணை புணர் ஆயமொடு தசும்பு உடன் தொலைச்சி,
இரு பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்;
அறம் அறக் கண்ட நெறி மாண் அவையத்து,
5
முறை நற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த
தூ இயல் கொள்கைத் துகள் அறு மகளிரொடு,
பருதி உருவின் பல் படைப் புரிசை,
எருவை நுகர்ச்சி, யூப நெடுந் தூண்,
வேத வேள்வித் தொழில் முடித்ததூஉம்;
10
அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்:
இறந்தோன் தானே; அளித்து இவ் உலகம்!
அருவி மாறி, அஞ்சு வரக் கருகி,
பெரு வறங் கூர்ந்த வேனில் காலை,
பசித்த ஆயத்துப் பயன் நிரை தருமார்,
15
பூ வாள் கோவலர் பூவுடன் உதிரக்
கொய்து கட்டு அழித்த வேங்கையின்,
மெல் இயல் மகளிரும் இழை களைந்தனரே.
திணையும் துறையும் அவை.
சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது.
உரை
225
தலையோர் நுங்கின் தீம் சேறு மிசைய,
இடையோர் பழத்தின் பைங் கனி மாந்த,
கடையோர் விடு வாய்ப் பிசிரொடு சுடு கிழங்கு நுகர,
நில மலர் வையத்து வல முறை வளைஇ,
5
வேந்து பீடு அழித்த ஏந்து வேல் தானையொடு,
'ஆற்றல்' என்பதன் தோற்றம் கேள், இனி:
கள்ளி போகிய களரிஅம் பறந்தலை,
முள்ளுடை வியன் காட்டதுவே 'நன்றும்
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன்கொல்?' என,
10
இன் இசைப் பறையொடு வென்றி நுவல,
தூக்கணங் குரீஇத் தூங்கு கூடு ஏய்ப்ப
ஒரு சிறைக் கொளீஇய திரி வாய் வலம்புரி,
ஞாலங் காவலர் கடைத்தலை,
காலைத் தோன்றினும் நோகோ யானே.
திணையும் துறையும் அவை.
சோழன் நலங்கிள்ளியை ஆலத்தூர் கிழார் பாடியது.
உரை
226
செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும்,
உற்றன்று ஆயினும், உய்வு இன்று மாதோ;
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி,
இரந்தன்றாகல் வேண்டும் பொலந் தார்
5
மண்டு அமர் கடக்கும் தானைத்
திண் தேர் வளவற் கொண்ட கூற்றே.
திணையும் துறையும் அவை.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
உரை
227
நனி பேதையே, நயன் இல் கூற்றம்!
விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனை;
இன்னும் காண்குவை, நன் வாய் ஆகுதல்;
ஒளிறு வாள் மறவரும், களிறும், மாவும்,
5
குருதி அம் குரூஉப் புனல் பொரு களத்து ஒழிய,
நாளும் ஆனான் கடந்து அட்டு, என்றும் நின்
வாடு பசி அருத்திய வசை தீர் ஆற்றல்
நின் ஓர் அன்ன பொன் இயல் பெரும் பூண்
வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி
10
இனையோற் கொண்டனைஆயின்,
இனி யார், மற்று நின் பசி தீர்ப்போரே?
திணையும் துறையும் அவை.
அவனை ஆடுதுறை மாசாத்தனார் பாடியது.
உரை
228
கலம் செய் கோவே! கலம் செய் கோவே!
இருள் திணிந்தன்ன குரூஉத் திரள் பரூஉப் புகை
அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை,
நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே!
5
அளியை நீயே; யாங்கு ஆகுவைகொல்?
நிலவரை சூட்டிய நீள் நெடுந் தானைப்
புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை,
விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்தன்ன
சேண் விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன்
10
கொடி நுடங்கு யானை நெடுமா வளவன்
தேவர் உலகம் எய்தினன்ஆதலின்,
அன்னோற் கவிக்கும் கண் அகன் தாழி
வனைதல் வேட்டனைஆயின், எனையதூஉம்
இரு நிலம் திகிரியா, பெரு மலை
15
மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே?
திணை அது; துறை ஆனந்தப்பையுள்.
அவனை ஐயூர் முடவனார் பாடியது.
உரை
229
ஆடு இயல் அழல் குட்டத்து
ஆர் இருள் அரை இரவில்,
முடப் பனையத்து வேர் முதலாக்
கடைக் குளத்துக் கயம் காய,
5
பங்குனி உயர் அழுவத்து,
தலை நாள்மீன் நிலை திரிய,
நிலை நாள்மீன் அதன் எதிர் ஏர்தர,
தொல் நாள்மீன் துறை படிய,
பாசிச் செல்லாது, ஊசித் துன்னாது,
10
அளக்கர்த் திணை விளக்காகக்
கனை எரி பரப்ப, கால் எதிர்பு பொங்கி,
ஒரு மீன் வீழ்ந்தன்றால், விசும்பினானே;
அது கண்டு, யாமும் பிறரும் பல் வேறு இரவலர்,
'பறை இசை அருவி நல் நாட்டுப் பொருநன்
15
நோய் இலனாயின் நன்றுமன் தில்' என
அழிந்த நெஞ்சம் மடிஉளம் பரப்ப,
அஞ்சினம்; எழு நாள் வந்தன்று, இன்றே;
மைந்துடை யானை கை வைத்து உறங்கவும்,
திண் பிணி முரசம் கண் கிழிந்து உருளவும்,
20
காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும்,
கால் இயல் கலி மாக் கதி இல வைகவும்,
மேலோர் உலகம் எய்தினன்; ஆகலின்,
ஒண் தொடி மகளிர்க்கு உறு துணை ஆகி,
தன் துணை ஆயம் மறந்தனன்கொல்லோ
25
பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல், நசைவர்க்கு
அளந்து கொடை அறியா ஈகை,
மணி வரை அன்ன மாஅயோனே?
திணையும் துறையும் அவை.
கோச் சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இன்ன நாளில் துஞ்சும் என அஞ்சி, அவன் துஞ்சிய இடத்து, கூடலூர் கிழார் பாடியது.
உரை
230
கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும்,
வெங் கால் வம்பலர் வேண்டு புலத்து உறையவும்,
களம் மலி குப்பை காப்பு இல வைகவும்,
விலங்கு பகை கடிந்த கலங்காச் செங்கோல்,
5
வையகம் புகழ்ந்த வயங்கு வினை ஒள் வாள்,
பொய்யா எழினி பொருது களம் சேர
ஈன்றோள் நீத்த குழவி போல,
தன் அமர் சுற்றம் தலைத்தலை இனைய,
கடும் பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ்சமொடு
10
நோய் உழந்து வைகிய உலகினும், மிக நனி
நீ இழந்தனையே, அறன் இல் கூற்றம்!
வாழ்தலின் வரூஉம் வயல் வளன் அறியான்,
வீழ் குடி உழவன் வித்து உண்டாஅங்கு
ஒருவன் ஆர் உயிர் உண்ணாய் ஆயின்,
15
நேரார் பல் உயிர் பருகி,
ஆர்குவை மன்னோ, அவன் அமர் அடு களத்தே.
திணை அது; துறை கையறு நிலை.
அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியை அரிசில் கிழார் பாடியது.
உரை
231
எறி புனக் குறவன் குறையல் அன்ன
கரி புற விறகின் ஈம ஒள் அழல்,
குறுகினும் குறுகுக; குறுகாது சென்று,
விசும்புற நீளினும் நீள்க பசுங் கதிர்த்
5
திங்கள் அன்ன வெண்குடை
ஒண் ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவே.
திணையும் துறையும் அவை.
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
உரை
232
இல்லாகியரோ, காலை மாலை!
அல்லாகியர், யான் வாழும் நாளே!
நடுகல் பீலி சூட்டி, நார் அரி
சிறு கலத்து உகுப்பவும் கொள்வன்கொல்லோ
5
கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய
நாடு உடன் கொடுப்பவும் கொள்ளாதோனே?
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.
உரை
233
பொய்யாகியரோ! பொய்யாகியரோ!
பா அடி யானை பரிசிலர்க்கு அருகாச்
சீர் கெழு நோன் தாள் அகுதைகண் தோன்றிய
பொன் புனை திகிரியின் பொய்யாகியரோ!
5
'இரும் பாண் ஒக்கல் தலைவன், பெரும் பூண்,
போர் அடு தானை, எவ்வி மார்பின்
எஃகுறு விழுப்புண் பல' என
வைகுறு விடியல், இயம்பிய குரலே.
திணயும் துறையும் அவை.
வேள் எவ்வியை வெள்ளெருக்கிலையார் பாடியது.
உரை
234
நோகோ யானே? தேய்கமா காலை!
பிடி அடி அன்ன சிறு வழி மெழுகி,
தன் அமர் காதலி புல் மேல் வைத்த
இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன்கொல்
5
உலகு புகத் திறந்த வாயில்
பலரோடு உண்டல் மரீஇயோனே?
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.
உரை
235
சிறிய கள் பெறினே, எமக்கு ஈயும்; மன்னே!
பெரிய கள் பெறினே,
யாம் பாட, தான் மகிழ்ந்து உண்ணும்; மன்னே!
சிறு சோற்றானும் நனி பல கலத்தன்; மன்னே!
5
பெருஞ் சோற்றானும் நனி பல கலத்தன்; மன்னே!
என்பொடு தடி படு வழி எல்லாம் எமக்கு ஈயும்; மன்னே!
அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும்; மன்னே!
நரந்தம் நாறும் தன் கையால்,
புலவு நாறும் என் தலை தைவரும்; மன்னே!
10
அருந் தலை இரும் பாணர் அகல் மண்டைத் துளை உரீஇ,
இரப்போர் கையுளும் போகி,
புரப்போர் புன்கண் பாவை சோர,
அம் சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்று வீழ்ந்தன்று, அவன்
15
அரு நிறத்து இயங்கிய வேலே!
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ?
இனி, பாடுநரும் இல்லை; பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை;
பனித் துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர்
சூடாது வைகியாங்கு, பிறர்க்கு ஒன்று
20
ஈயாது வீயும் உயிர் தவப் பலவே!
திணையும் துறையும் அவை.
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
உரை
236
கலை உணக் கிழிந்த, முழவு மருள், பெரும் பழம்
சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும்
மலை கெழு நாட! மா வண் பாரி!
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய், நீ; எற்
5
புலந்தனை ஆகுவை புரந்த ஆண்டே
பெருந் தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது,
ஒருங்கு வரல் விடாது, 'ஒழிக' எனக் கூறி,
இனையைஆதலின் நினக்கு மற்று யான்
மேயினேன் அன்மையானே; ஆயினும்,
10
இம்மை போலக் காட்டி, உம்மை
இடை இல் காட்சி நின்னோடு
உடன் உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே!
திணை அது; துறை கையறுநிலை.
வேள் பாரி துஞ்சியவழி, அவன் மகளிரைப் பார்ப்பார்ப் படுத்து, வடக்கிருந்த கபிலர் பாடியது.
உரை
237
'நீடு வாழ்க?' என்று, யான் நெடுங் கடை குறுகி,
பாடி நின்ற பசி நாட்கண்ணே,
'கோடைக் காலத்துக் கொழு நிழல் ஆகி,
பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல்
5
வித்திய பனுவல் விளைந்தன்று நன்று' என
நச்சி இருந்த நசை பழுதாக,
அட்ட குழிசி அழல் பயந்தாஅங்கு,
'அளியர்தாமே ஆர்க' என்னா
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய,
10
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர்
வாழைப் பூவின் வளை முறி சிதற,
முது வாய் ஒக்கல் பரிசிலர் இரங்க,
கள்ளி போகிய களரிஅம் பறந்தலை,
வெள் வேல் விடலை சென்று மாய்ந்தனனே:
15
ஆங்கு அது நோய் இன்றாக; ஓங்கு வரைப்
புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின்,
எலி பார்த்து ஒற்றாதாகும்; மலி திரைக்
கடல் மண்டு புனலின் இழுமெனச் சென்று,
நனியுடைப் பரிசில் தருகம்,
20
எழுமதி, நெஞ்சே! துணிபு முந்துறுத்தே.
திணையும் துறையும் அவை.
வெளிமானுழைச் சென்றார்க்கு, அவன் துஞ்ச, இள வெளிமான் சிறிது கொடுப்ப, கொள்ளாது, பெருஞ்சித்திரனார் பாடியது.
உரை
238
கவி செந் தாழிக் குவி புறத்து இருந்த
செவி செஞ் சேவலும் பொகுவலும் வெருவா,
வாய் வன் காக்கையும் கூகையும் கூடி,
பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும்
5
காடு முன்னினனே, கள் காமுறுநன்;
தொடி கழி மகளிரின் தொல் கவின் வாடி,
பாடுநர் கடும்பும் பையென்றனவே;
தோடு கொள் முரசும் கிழிந்தன, கண்ணே;
ஆள் இல், வரை போல், யானையும் மருப்பு இழந்தனவே;
10
வெந் திறல் கூற்றம் பெரும் பேதுறுப்ப,
எந்தை ஆகுல அதற் படல் அறியேன்;
அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற
என் ஆகுவர்கொல், என் துன்னியோரே?
மாரி இரவின், மரம் கவிழ் பொழுதின்,
15
ஆர் அஞர் உற்ற நெஞ்சமொடு, ஒராங்குக்
கண் இல் ஊமன் கடல் பட்டாங்கு,
வரை அளந்து அறியாத் திரை அரு நீத்தத்து,
அவல மறு சுழி மறுகலின்,
தவலே நன்றுமன்; தகுதியும் அதுவே.
திணையும் துறையும் அவை.
வெளிமான் துஞ்சிய பின் அவர் பாடியது.
உரை
239
தொடியுடைய தோள் மணந்தனன்;
கடி காவில் பூச் சூடினன்;
தண் கமழும் சாந்து நீவினன்;
செற்றோரை வழி தபுத்தனன்;
5
நட்டோரை உயர்பு கூறினன்;
'வலியர்' என, வழிமொழியலன்;
'மெலியர்' என, மீக்கூறலன்;
பிறரைத் தான் இரப்பு அறியலன்;
இரந்தோர்க்கு மறுப்பு அறியலன்;
10
வேந்துடை அவையத்து ஓங்கு புகழ் தோற்றினன்;
வருபடை எதிர் தாங்கினன்;
பெயர்படை புறங்கண்டனன்;
கடும் பரிய மாக் கடவினன்;
நெடுந் தெருவில் தேர் வழங்கினன்;
15
ஓங்கு இயல களிறு ஊர்ந்தனன்;
தீம் செறி தசும்பு தொலைச்சினன்;
பாண் உவப்ப பசி தீர்த்தனன்;
மயக்குடைய மொழி விடுத்தனன்; ஆங்குச்
செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்
20
இடுக ஒன்றோ! சுடுக ஒன்றோ!
படு வழிப் படுக, இப் புகழ் வெய்யோன் தலையே!
திணையும் துறையும் அவை.
நம்பி நெடுஞ்செழியனைப் பேரெயின் முறுவலார் பாடியது.
உரை
240
ஆடு நடைப் புரவியும், களிறும், தேரும்,
வாடா யாணர் நாடும் ஊரும்,
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்
கோடு ஏந்து அல்குல், குறுந் தொடி மகளிரொடு,
5
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப,
மேலோர் உலகம் எய்தினன் எனாஅ,
பொத்த அறையுள் போழ் வாய்க் கூகை,
'சுட்டுக் குவி' எனச் செத்தோர்ப் பயிரும்
கள்ளி அம் பறந்தலை ஒரு சிறை அல்கி,
10
ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது;
புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது,
கல்லென் சுற்றமொடு கையழிந்து, புலவர்
வாடிய பசியராகி, பிறர்
நாடு படு செலவினர் ஆயினர், இனியே.
திணையும் துறையும் அவை.
ஆயைக் குட்டுவன் கீரனார் பாடியது.
உரை
241
'திண் தேர் இரவலர்க்கு, ஈத்த, தண் தார்,
அண்டிரன் வரூஉம்' என்ன, ஒண் தொடி
வச்சிரத் தடக் கை நெடியோன் கோயிலுள்,
போர்ப்புறு முரசம் கறங்க,
5
ஆர்ப்பு எழுந்தன்றால், விசும்பினானே.
திணையும் துறையும் அவை.
அவனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.
உரை
242
இளையோர் சூடார்; வளையோர் கொய்யார்;
நல் யாழ் மருப்பின் மெல்ல வாங்கி,
பாணன் சூடான்; பாடினி அணியாள்;
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
5
வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?
திணையும் துறையும் அவை.
ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனைக் குடவாயிற் கீரத்தனார் பாடியது.
உரை
243
இனி நினைந்து இரக்கம் ஆகின்று: திணி மணல்
செய்வுறு பாவைக்குக் கொய் பூத் தைஇ,
தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து,
தழுவுவழித் தழீஇ, தூங்குவழித் தூங்கி,
5
மறை எனல் அறியா மாயம் இல் ஆயமொடு
உயர் சினை மருதத் துறை உறத் தாழ்ந்து,
நீர் நணிப் படி கோடு ஏறி, சீர் மிக,
கரையவர் மருள, திரைஅகம் பிதிர,
நெடு நீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,
10
குளித்து மணல் கொண்ட கல்லா இளமை
அளிதோதானே! யாண்டு உண்டு கொல்லோ
தொடித் தலை விழுத் தண்டு ஊன்றி, நடுக்குற்று,
இரும் இடை மிடைந்த சில சொல்
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே?
திணையும் துறைஉம் அவை.
தொடித் தலை விழுத்தண்டினார் பாடியது.
உரை
245
யாங்குப் பெரிதுஆயினும், நோய் அளவு எனைத்தே,
உயிர் செகுக்கல்லா மதுகைத்து அன்மையின்?
கள்ளி போகிய களரி மருங்கின்
வெள்ளிடைப் பொத்திய விளை விறகு ஈமத்து,
5
ஒள் அழல் பள்ளிப் பாயல் சேர்த்தி,
ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை;
இன்னும் வாழ்வல்; என் இதன் பண்பே!
திணையும் துறையும் அவை.
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை தன் பெருங்கோப்பெண்டு துஞ்சிய காலைச் சொல்லிய பாட்டு.
உரை
246
பல் சான்றீரே! பல் சான்றீரே!
'செல்க' எனச் சொல்லாது, 'ஒழிக' என விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே!
அணில் வரிக் கொடுங் காய் வாள் போழ்ந்திட்ட
5
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது,
அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம்,
வெள் எள் சாந்தொடு, புளிப் பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆக,
பரல் பெய் பள்ளிப் பாய் இன்று வதியும்
10
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங் காட்டுப் பண்ணிய கருங் கோட்டு ஈமம்
நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம்
பெருந் தோள் கணவன் மாய்ந்தென, அரும்பு அற
வள் இதழ் அவிழ்ந்த தாமரை
15
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!
திணை அது; துறை ஆனந்தப்பையுள்.
பூத பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தீப் பாய்வாள் சொல்லியது.
உரை
247
யானை தந்த முளி மர விறகின்
கானவர் பொத்திய ஞெலி தீ விளக்கத்து,
மட மான் பெரு நிரை வைகு துயில் எடுப்பி,
மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில்,
5
நீர் வார் கூந்தல் இரும் புறம் தாழ,
பேர் அஞர்க் கண்ணள், பெருங் காடு நோக்கி,
தெருமரும் அம்ம தானே தன் கொழுநன்
முழவு கண் துயிலாக் கடியுடை வியல் நகர்ச்
சிறு நனி தமியள் ஆயினும்,
10
இன் உயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்தே!
திணையும் துறையும் அவை.
அவள் தீப் பாய்வாளைக் கண்டு மதுரைப் பேராலவாயார் சொல்லியது.
உரை
248
அளியதாமே, சிறு வெள் ஆம்பல்!
இளையமாகத் தழை ஆயினவே;
இனியே, பெரு வளக் கொழுநன் மாய்ந்தென, பொழுது மறுத்து,
இன்னா வைகல் உண்ணும்
5
அல்லிப் படூஉம் புல் ஆயினவே.
திணை அது; துறை தாபத நிலை.
.......................... ஒக்கூர் மாசாத்தனார் பாடியது.
உரை
249
கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப,
கணைக் கோட்டு வாளை மீநீர்ப் பிறழ,
எரிப் பூம் பழனம் நெரித்து உடன் வலைஞர்
அரிக் குரல் தடாரியின் யாமை மிளிர,
5
பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு,
உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும்,
அகல் நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப்
பகல் இடம் கண்ணிப் பலரொடும் கூடி,
ஒருவழிப்பட்டன்று; மன்னே! இன்றே,
10
அடங்கிய கற்பின், ஆய் நுதல் மடந்தை,
உயர் நிலை உலகம் அவன் புக,.... வரி
நீறு ஆடு சுளகின் சீறிடம் நீக்கி,
அழுதல் ஆனாக் கண்ணள்,
மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே.
திணையும் துறையும் அவை.
....................தும்பி சேர் கீரனார் பாடியது.
உரை
250
குய் குரல் மலிந்த கொழுந் துவை அடிசில்
இரவலர்த் தடுத்த வாயில், புரவலர்
கண்ணீர்த் தடுத்த தண் நறும் பந்தர்,
கூந்தல் கொய்து, குறுந் தொடி நீக்கி,
5
அல்லி உணவின் மனைவியொடு, இனியே
புல்லென்றனையால் வளம் கெழு திரு நகர்!
வான் சோறு கொண்டு தீம் பால் வேண்டும்
முனித்தலைப் புதல்வர் தந்தை
தனித் தலைப் பெருங் காடு முன்னிய பின்னே.
திணையும் துறையும் அவை.
...................தாயங்கண்ணியார் பாடியது.
உரை
253
என் திறத்து அவலம் கொள்ளல், இனியே;
வல ஆர் கண்ணி இளையர் திளைப்ப,
'நகாஅல்' என வந்த மாறே, எழா நெல்
பைங் கழை பொதி களைந்தன்ன விளர்ப்பின்,
5
வளை இல், வறுங் கை ஓச்சி,
கிளையுள் ஒய்வலோ? கூறு நின் உரையே!
திணை பொதுவியல்; துறை முதுபாலை.
....................குளம்பாதாயனார் பாடியது.
உரை
254
இளையரும் முதியரும் வேறு புலம் படர,
எடுப்ப எழாஅய், மார்பம் மண் புல்ல,
இடைச் சுரத்து இறுத்த மள்ள! விளர்த்த
வளை இல் வறுங் கை ஓச்சி, கிளையுள்,
5
'இன்னன் ஆயினன், இளையோன்' என்று,
நின் உரை செல்லும் ஆயின், 'மற்று
முன் ஊர்ப் பழுனிய கோளி ஆலத்து,
புள் ஆர் யாணர்த்தற்றே, என் மகன்
வளனும் செம்மலும் எமக்கு' என, நாளும்
10
ஆனாது புகழும் அன்னை
யாங்கு ஆகுவள்கொல்? அளியள் தானே!
திணையும் துறையும் அவை.
...................கயமனார் பாடியது.
உரை
255
'ஐயோ!' எனின், யான் புலி அஞ்சுவலே;
அணைத்தனன் கொளினே, அகல் மார்பு எடுக்கவல்லேன்;
என் போல் பெரு விதிர்ப்புறுக, நின்னை
இன்னாது உற்ற அறன் இல் கூற்றே!
5
நிரை வளை முன் கை பற்றி
வரை நிழல் சேர்கம் நடத்திசின் சிறிதே!
திணையும் துறையும் அவை.
....................வன்பரணர் பாடியது.
உரை
256
கலம் செய் கோவே! கலம் செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறு வெண் பல்லி போல, தன்னொடு
சுரம் பல வந்த எமக்கும் அருளி,
5
வியல் மலர் அகன் பொழில் ஈமத் தாழி
அகலிதாக வனைமோ
நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே!
திணையும் துறையும் அவை.
..............................................................
உரை
280
என்னை மார்பில் புண்ணும் வெய்ய;
நடு நாள் வந்து தும்பியும் துவைக்கும்;
நெடு நகர் வரைப்பின் விளக்கும் நில்லா;
துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்;
5
அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்;
நெல் நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்
செம் முது பெண்டின் சொல்லும் நிரம்பா;
துடிய! பாண! பாடு வல் விறலி!
என் ஆகுவிர்கொல்? அளியிர்; நுமக்கும்
10
இவண் உறை வாழ்க்கையோ, அரிதே! யானும்
மண்ணுறு மழித் தலைத் தெண் நீர் வார,
தொன்று தாம் உடுத்த அம் பகைத் தெரியல்
சிறு வெள் ஆம்பல் அல்லி உண்ணும்
கழி கல மகளிர் போல,
15
வழி நினைந்திருத்தல், அதனினும் அரிதே!
திணை பொதுவியல்; துறை ஆனந்தப்பையுள்.
மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
உரை
362
ஞாயிற்று அன்ன ஆய் மணி மிடைந்த
மதி உறழ் ஆரம் மார்பில் புரள,
பலி பெறு முரசம் பாசறைச் சிலைப்ப,
பொழிலகம் பரந்த பெ.................
5
.......................கும விசய வெண் கொடி
அணங்கு உருத்தன்ன கணம் கொள் தானை,
கூற்றத்து அன்ன மாற்று அரு முன்பின்,
ஆக் குரல் காண்பின் அந்தணாளர்
நான்மறைக் குறி .......................... யின்
10
அறம் குறித்தன்று; பொருள் ஆகுதலின்
மருள் தீர்ந்து, மயக்கு ஒரீஇ,
கை பெய்த நீர் கடற் பரப்ப,
ஆம் இருந்த அடை நல்கி,
சோறு கொடுத்து, மிகப் பெரிதும்
15
வீறு சான......................... நன்றும்
சிறு வெள் என்பின் நெடு வெண் களரின்,
வாய் வன் காக்கை கூகையொடு கூடிப்
பகலும் கூவும் அகலுள் ஆங்கண்,
காடு கண் மறைத்த கல்லென் சுற்றமொடு,
20
இல் என்று இல்வயின் பெயர, மெல்ல
இடம் சிறிது ஒதுங்கல் அஞ்சி,
உடம்பொடும் சென்மார், உயர்ந்தோர் நாட்டே.
திணை பொதுவியல்; துறை பெருங்காஞ்சி.
அவனைச் சிறுவெண்டேரையார் பாடியது.
உரை
363
இருங் கடல் உடுத்த இப் பெருங் கண் மா நிலம்
உடையிலை நடுவணது இடை பிறர்க்கு இன்றி,
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடு திரை மணலினும் பலரே; சுடு பிணக்
5
காடு பதி ஆகப் போகி, தம்தம்
நாடு பிறர் கொளச் சென்று மாய்ந்தனரே;
அதனால், நீயும் கேண்மதி அத்தை! வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை;
மடங்கல் உண்மை மாயமோ அன்றே;
10
கள்ளி வேய்ந்த முள்ளிஅம் புறங்காட்டு,
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்,
உப்பு இலாஅ அவிப் புழுக்கல்
கைக்கொண்டு, பிறக்கு நோக்காது,
இழி பிறப்பினோன் ஈயப் பெற்று,
15
நிலம் கலனாக, இலங்கு பலி மிசையும்
இன்னா வைகல் வாராமுன்னே,
செய் நீ முன்னிய வினையே,
முந்நீர் வரைப்பகம் முழுது உடன் துறந்தே.
திணையும் துறையும் அவை.
...................... ஐயாதிச் சிறுவெண்டேரையார் பாடியது.
உரை
364
வாடா மாலை பாடினி அணிய,
பாணன் சென்னிக் கேணி பூவா
எரி மருள் தாமரைப் பெரு மலர் தயங்க,
மை விடை இரும் போத்துச் செந் தீச் சேர்த்தி,
5
காயம் கனிந்த கண் அகன் கொழுங் குறை
நறவு உண் செவ் வாய் நாத் திறம் பெயர்ப்ப,
உண்டும், தின்றும், இரப்போர்க்கு ஈய்ந்தும்,
மகிழ்கம் வம்மோ, மறப் போரோயே!
அரியஆகலும் உரிய, பெரும!
10
நிலம் பக வீழ்ந்த அலங்கல் பல் வேர்
முது மரப் பொத்தின் கதுமென இயம்பும்
கூகைக் கோழி ஆனாத்
தாழிய பெருங் காடு எய்திய ஞான்றே.
திணையும் துறையும் அவை.
அவனைக் கூகைக் கோழியார் பாடியது.
உரை
Tags :
பொதுவியல்
பார்வை 1516
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 23:53:12(இந்திய நேரம்)
Legacy Page