தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஒன்னார் யானை ஓடைப்

ஒன்னார் யானை ஓடைப்
126
ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு,
பாணர் சென்னி பொலியத் தைஇ,
வாடாத் தாமரை சூட்டிய விழுச் சீர்
ஓடாப் பூட்கை உரவோன் மருக!
5
வல்லேம் அல்லேம் ஆயினும், வல்லே
நின்வயின் கிளக்குவமாயின், கங்குல்
துயில் மடிந்தன்ன தூங்கு இருள் இறும்பின்,
பறை இசை அருவி, முள்ளூர்ப் பொருந!
தெறல் அரு மரபின் நின் கிளையொடும் பொலிய,
10
நிலமிசைப் பரந்த மக்கட்கு எல்லாம்
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்,
இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி,
பரந்து இசை நிற்கப் பாடினன்; அதற்கொண்டு
சினம் மிகு தானை வானவன் குட கடல்,
15
பொலம் தரு நாவாய் ஓட்டிய அவ் வழி,
பிற கலம் செல்கலாது அனையேம் அத்தை,
இன்மை துரப்ப, இசை தர வந்து, நின்
வண்மையின் தொடுத்தனம், யாமே முள் எயிற்று
அரவு எறி உருமின் முரசு எழுந்து இயம்ப,
20
அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய,
அருஞ் சமம் ததையத் தாக்கி, நன்றும்
நண்ணாத் தெவ்வர்த் தாங்கும்
பெண்ணை அம் படப்பை நாடு கிழவோயே!
திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை.
மலையமான் திருமுடிக் காரியை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:08:13(இந்திய நேரம்)