தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

களிறு நீறு ஆடிய விடு நிலம்

களிறு நீறு ஆடிய விடு நிலம்
325
களிறு நீறு ஆடிய விடு நில மருங்கின்,
வம்பப் பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்தென,
குழி கொள் சில் நீர் குராஅல் உண்டலின்,
சேறு கிளைத்திட்ட கலுழ் கண் ஊறல்
5
முறையின் உண்ணும் நிறையா வாழ்க்கை,
முளவு மாத் தொலைச்சிய முழுச்சொல் ஆடவர்
உடும்பு இழுது அறுத்த ஒடுங் காழ்ப் படலைச்
சீறில் முன்றில் கூறுசெய்திடுமார்,
கொள்ளி வைத்த கொழு நிண நாற்றம்
10
மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து,
அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல்,
கயந் தலைச் சிறாஅர் கணை விளையாடும்
அரு மிளை இருக்கையதுவே வென் வேல்
வேந்து தலைவரினும் தாங்கும்,
15
தாங்கா ஈகை, நெடுந்தகை ஊரே.
திணையும் துறையும் அவை.
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:17:07(இந்திய நேரம்)