தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கொடுவரி வழங்கும்

கொடுவரி வழங்கும்
135
கொடுவரி வழங்கும் கோடு உயர் நெடு வரை,
அரு விடர்ச் சிறு நெறி ஏறலின், வருந்தி,
தடவரல் கொண்ட தகை மெல் ஒதுக்கின்,
வளைக் கை விறலி என் பின்னள் ஆக,
5
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின்
வரி நவில் பனுவல் புலம் பெயர்ந்து இசைப்ப,
படுமலை நின்ற பயம் கெழு சீறியாழ்
ஒல்கல் உள்ளமொடு ஒரு புடைத் தழீஇ,
புகழ்சால் சிறப்பின் நின் நல் இசை உள்ளி,
10
வந்தனென் எந்தை! யானே: என்றும்,
மன்று படு பரிசிலர்க் காணின், கன்றொடு
கறை அடி யானை இரியல் போக்கும்
மலை கெழு நாடன்! மா வேள் ஆஅய்!
களிறும் அன்றே; மாவும் அன்றே;
15
ஒளிறு படைப் புரவிய தேரும் அன்றே;
பாணர், பாடுநர், பரிசிலர், ஆங்கு அவர்,
தமது எனத் தொடுக்குவராயின், 'எமது' எனப்
பற்றல் தேற்றாப் பயங் கெழு தாயமொடு,
அன்ன ஆக, நின் ஊழி; நின்னைக்
20
காண்டல் வேண்டிய அளவை வேண்டார்
உறு முரண் கடந்த ஆற்றல்
பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே!
திணை அது; துறை பரிசில் துறை.
அவனை அவர் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:23:00(இந்திய நேரம்)