தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நினைக்கும் காலை மருட்கை உடைத்தே

நினைக்கும் காலை மருட்கை உடைத்தே
217
நினைக்கும் காலை மருட்கை உடைத்தே,
எனைப் பெருஞ் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல்;
அதனினும் மருட்கை உடைத்தே, பிறன் நாட்டுத்
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி,
5
இசை மரபு ஆக, நட்புக் கந்து ஆக,
இனையது ஓர் காலை ஈங்கு வருதல்;
'வருவன்' என்ற கோனது பெருமையும்,
அது பழுது இன்றி வந்தவன் அறிவும்,
வியத்தொறும் வியத்தொறும் வியப்பு இறந்தன்றே;
10
அதனால், தன் கோல் இயங்காத் தேயத்து உறையும்
சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்று இசை
அன்னோனை இழந்த இவ் உலகம்
என் ஆவதுகொல்? அளியது தானே!
திணை பொதுவியல்; துறை கையறுநிலை.
அவன் வடக்கிருந்தானுழைச் சென்ற பிசிராந்தையாரைக் கண்டு பொத்தியார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:41:09(இந்திய நேரம்)