தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மண் முழா மறப்ப

மண் முழா மறப்ப
65
மண் முழா மறப்ப, பண் யாழ் மறப்ப,
இருங் கண் குழிசி கவிழ்ந்து இழுது மறப்ப,
சுரும்பு ஆர் தேறல் சுற்றம் மறப்ப,
உழவர் ஓதை மறப்ப, விழவும்
5
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப,
உவவுத் தலைவந்த பெரு நாள் அமையத்து,
இரு சுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர்
புன்கண் மாலை மலை மறைந்தாங்கு,
தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
10
புறப் புண் நாணி, மறத் தகை மன்னன்
வாள் வடக்கிருந்தனன்; ஈங்கு,
நாள் போல் கழியல, ஞாயிற்றுப் பகலே.
திணை பொதுவியல்; துறை கையறு நிலை.
சேரமான் பெருஞ் சேரலாதன் சோழன் கரிகாற் பெருவளத்தானோடு பொருது, புறப் புண் நாணி, வடக்கிருந்தானைக் கழாத்தலையார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:53:59(இந்திய நேரம்)