தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மீன் நொடுத்து நெல் குவைஇ

மீன் நொடுத்து நெல் குவைஇ
343
'மீன் நொடுத்து நெல் குவைஇ,
மிசை அம்பியின் மனை மறுக்குந்து,
மனைக் குவைஇய கறி மூடையால்,
கலிச் சும்மைய கரை கலக்குறுந்து;
5
கலம் தந்த பொற் பரிசம்
கழித் தோணியான், கரை சேர்க்குந்து;
மலைத் தாரமும் கடல் தாரமும்
தலைப் பெய்து, வருநர்க்கு ஈயும்
புனல்அம் கள்ளின் பொலந் தார்க் குட்டுவன்
10
முழங்கு கடல் முழவின் முசிறி அன்ன,
நலம்சால் விழுப் பொருள் பணிந்து வந்து கொடுப்பினும்,
புரையர் அல்லோர் வரையலள், இவள்' எனத்
தந்தையும் கொடாஅன் ஆயின் வந்தோர்,
வாய்ப்பட இறுத்த ஏணி ஆயிடை
15
வருந்தின்று கொல்லோ தானே பருந்து உயிர்த்து
இடை மதில் சேக்கும் புரிசை,
படை மயங்கு ஆர் இடை, நெடு நல் ஊரே?
திணையும் துறையும் அவை.
பரணர் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:58:10(இந்திய நேரம்)