தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தென்னை (தெங்கு, தாழை)

தென்னை (தெங்கு, தாழை)
17
தென் குமரி, வட பெருங்கல்,
குண குட கடலா எல்லை,
குன்று, மலை, காடு, நாடு,
ஒன்று பட்டு வழிமொழிய,
5
கொடிது கடிந்து, கோல் திருத்தி,
படுவது உண்டு, பகல் ஆற்றி,
இனிது உருண்ட சுடர் நேமி
முழுது ஆண்டோர் வழி காவல!
குலை இறைஞ்சிய கோள் தாழை
10
அகல் வயல், மலை வேலி,
நிலவு மணல் வியன் கானல்,
தெண் கழிமிசைத் தீப் பூவின்,
தண் தொண்டியோர் அடு பொருந!
மாப் பயம்பின் பொறை போற்றாது,
15
நீடு குழி அகப்பட்ட
பீடு உடைய எறுழ் முன்பின்,
கோடு முற்றிய கொல் களிறு
நிலை கலங்கக் குழி கொன்று,
கிளை புகலத் தலைக்கூடியாங்கு
20
நீ பட்ட அரு முன்பின்
பெருந் தளர்ச்சி, பலர் உவப்ப,
பிறிது சென்று, மலர் தாயத்துப்
பலர் நாப்பண் மீக்கூறலின்,
'உண்டாகிய உயர் மண்ணும்,
25
சென்று பட்ட விழுக் கலனும்,
பெறல் கூடும், இவன் நெஞ்சு உறப் பெறின்' எனவும்,
'ஏந்து கொடி இறைப்புரிசை,
வீங்கு சிறை, வியல்அருப்பம்,
இழந்து வைகுதும், இனி நாம் இவன்
30
உடன்று நோக்கினன், பெரிது' எனவும்,
வேற்று அரசு பணி தொடங்கு நின்
ஆற்றலொடு புகழ் ஏத்தி,
காண்கு வந்திசின், பெரும! ஈண்டிய
மழை என மருளும் பல் தோல், மலை எனத்
35
தேன் இறை கொள்ளும் இரும் பல் யானை,
உடலுநர் உட்க வீங்கி, கடல் என
வான் நீர்க்கு ஊக்கும் தானை, ஆனாது
கடு ஒடுங்கு எயிற்ற அரவுத் தலை பனிப்ப,
இடி என முழங்கும் முரசின்,
40
வரையா ஈகைக் குடவர் கோவே!
திணை வாகை; துறை அரச வாகை; இயன்மொழியும் ஆம்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் பிணியிருந்த யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை வலிதின் போய்க் கட்டில் எய்தினானைக் குறுங்கோழியூர் கிழார் பாடியது.

29
அழல் புரிந்த அடர் தாமரை
ஐது அடர்ந்த நூல் பெய்து,
புனை வினைப் பொலிந்த பொலன் நறுந் தெரியல்
பாறு மயிர் இருந் தலை பொலியச் சூடி,
5
பாண் முற்றுக, நின் நாள் மகிழ் இருக்கை!
பாண் முற்று ஒழிந்த பின்றை, மகளிர்
தோள் முற்றுக, நின் சாந்து புலர் அகலம்! ஆங்க
முனிவு இல் முற்றத்து, இனிது முரசு இயம்ப,
கொடியோர்த் தெறுதலும், செவ்வியோர்க்கு அளித்தலும்,
10
ஒடியா முறையின் மடிவு இலை ஆகி,
'நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லை' என்போர்க்கு இனன் ஆகிலியர்!
நெல் விளை கழனிப் படு புள் ஓப்புநர்
ஒழி மடல் விறகின் கழி மீன் சுட்டு,
15
வெங் கள் தொலைச்சியும், அமையார், தெங்கின்
இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நல் நாடு
பெற்றனர் உவக்கும் நின் படை கொள் மாக்கள்
பற்றா மாக்களின் பரிவு முந்துறுத்து,
கூவை துற்ற நாற் கால் பந்தர்ச்
20
சிறு மனை வாழ்க்கையின் ஒரீஇ, வருநர்க்கு
உதவி ஆற்றும் நண்பின் பண்புடை
ஊழிற்றாக, நின் செய்கை! விழவில்
கோடியர் நீர்மை போல முறைமுறை
ஆடுநர் கழியும் இவ் உலகத்து, கூடிய
25
நகைப்புறன் ஆக, நின் சுற்றம்!
இசைப்புறன் ஆக, நீ ஓம்பிய பொருளே!
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

61
கொண்டைக் கூழைத் தண் தழைக் கடைசியர்
சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்,
மலங்கு மிளிர், செறுவின் தளம்பு தடிந்து இட்ட
பழன வாளைப் பரூஉக் கண் துணியல்
5
புது நெல் வெண் சோற்றுக் கண்ணுறை ஆக,
விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி,
நீடு கதிர்க் கழனிச் சூடு தடுமாறும்
வன் கை வினைஞர் புன் தலைச் சிறாஅர்
தெங்கு படு வியன் பழம் முனையின், தந்தையர்
10
குறைக்கண் நெடும் போர் ஏறி, விசைத்து எழுந்து
செழுங் கோள் பெண்ணைப் பழம் தொட முயலும்,
வைகல் யாணர், நல் நாட்டுப் பொருநன்,
எஃகு விளங்கு தடக் கை இயல் தேர்ச் சென்னி,
சிலைத் தார் அகலம் மலைக்குநர் உளர்எனின்,
15
தாம் அறிகுவர் தமக்கு உறுதி; யாம் அவன்
எழு உறழ் திணி தோள் வழு இன்று மலைந்தோர்
வாழக் கண்டன்றும் இலமே; தாழாது,
திருந்து அடி பொருந்த வல்லோர்
வருந்தக் காண்டல், அதனினும் இலமே.
திணை வாகை; துறை அரச வாகை.
சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட் சென்னியைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 02:07:14(இந்திய நேரம்)