தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கள்ளி

கள்ளி
225
தலையோர் நுங்கின் தீம் சேறு மிசைய,
இடையோர் பழத்தின் பைங் கனி மாந்த,
கடையோர் விடு வாய்ப் பிசிரொடு சுடு கிழங்கு நுகர,
நில மலர் வையத்து வல முறை வளைஇ,
5
வேந்து பீடு அழித்த ஏந்து வேல் தானையொடு,
'ஆற்றல்' என்பதன் தோற்றம் கேள், இனி:
கள்ளி போகிய களரிஅம் பறந்தலை,
முள்ளுடை வியன் காட்டதுவே 'நன்றும்
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன்கொல்?' என,
10
இன் இசைப் பறையொடு வென்றி நுவல,
தூக்கணங் குரீஇத் தூங்கு கூடு ஏய்ப்ப
ஒரு சிறைக் கொளீஇய திரி வாய் வலம்புரி,
ஞாலங் காவலர் கடைத்தலை,
காலைத் தோன்றினும் நோகோ யானே.
திணையும் துறையும் அவை.
சோழன் நலங்கிள்ளியை ஆலத்தூர் கிழார் பாடியது.

237
'நீடு வாழ்க?' என்று, யான் நெடுங் கடை குறுகி,
பாடி நின்ற பசி நாட்கண்ணே,
'கோடைக் காலத்துக் கொழு நிழல் ஆகி,
பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல்
5
வித்திய பனுவல் விளைந்தன்று நன்று' என
நச்சி இருந்த நசை பழுதாக,
அட்ட குழிசி அழல் பயந்தாஅங்கு,
'அளியர்தாமே ஆர்க' என்னா
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய,
10
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர்
வாழைப் பூவின் வளை முறி சிதற,
முது வாய் ஒக்கல் பரிசிலர் இரங்க,
கள்ளி போகிய களரிஅம் பறந்தலை,
வெள் வேல் விடலை சென்று மாய்ந்தனனே:
15
ஆங்கு அது நோய் இன்றாக; ஓங்கு வரைப்
புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின்,
எலி பார்த்து ஒற்றாதாகும்; மலி திரைக்
கடல் மண்டு புனலின் இழுமெனச் சென்று,
நனியுடைப் பரிசில் தருகம்,
20
எழுமதி, நெஞ்சே! துணிபு முந்துறுத்தே.
திணையும் துறையும் அவை.
வெளிமானுழைச் சென்றார்க்கு, அவன் துஞ்ச, இள வெளிமான் சிறிது கொடுப்ப, கொள்ளாது, பெருஞ்சித்திரனார் பாடியது.

240
ஆடு நடைப் புரவியும், களிறும், தேரும்,
வாடா யாணர் நாடும் ஊரும்,
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்
கோடு ஏந்து அல்குல், குறுந் தொடி மகளிரொடு,
5
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப,
மேலோர் உலகம் எய்தினன் எனாஅ,
பொத்த அறையுள் போழ் வாய்க் கூகை,
'சுட்டுக் குவி' எனச் செத்தோர்ப் பயிரும்
கள்ளி அம் பறந்தலை ஒரு சிறை அல்கி,
10
ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது;
புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது,
கல்லென் சுற்றமொடு கையழிந்து, புலவர்
வாடிய பசியராகி, பிறர்
நாடு படு செலவினர் ஆயினர், இனியே.
திணையும் துறையும் அவை.
ஆயைக் குட்டுவன் கீரனார் பாடியது.

245
யாங்குப் பெரிதுஆயினும், நோய் அளவு எனைத்தே,
உயிர் செகுக்கல்லா மதுகைத்து அன்மையின்?
கள்ளி போகிய களரி மருங்கின்
வெள்ளிடைப் பொத்திய விளை விறகு ஈமத்து,
5
ஒள் அழல் பள்ளிப் பாயல் சேர்த்தி,
ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை;
இன்னும் வாழ்வல்; என் இதன் பண்பே!
திணையும் துறையும் அவை.
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை தன் பெருங்கோப்பெண்டு துஞ்சிய காலைச் சொல்லிய பாட்டு.

260
வளரத் தொடினும், வௌவுபு திரிந்து,
விளரி உறுதரும் தீம் தொடை நினையா,
தளரும் நெஞ்சம் தலைஇ, மனையோள்
உளரும் கூந்தல் நோக்கி, களர
5
கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி,
பசி படு மருங்குலை, கசிபு, கைதொழாஅ,
'காணலென்கொல்?' என வினவினை வரூஉம்
பாண! கேண்மதி, யாணரது நிலையே:
புரவுத் தொடுத்து உண்குவைஆயினும், இரவு எழுந்து
10
எவ்வம் கொள்குவைஆயினும், இரண்டும்,
கையுள் போலும்; கடிது அண்மையவே
முன் ஊர்ப் பூசலின் தோன்றி, தன் ஊர்
நெடு நிரை தழீஇய மீளியாளர்
விடு கணை நீத்தம் துடி புணை ஆக,
15
வென்றி தந்து, கொன்று கோள் விடுத்து,
வையகம் புலம்ப வளைஇய பாம்பின்
வை எயிற்று உய்ந்த மதியின், மறவர்
கையகத்து உய்ந்த கன்றுடைப் பல் ஆன்
நிரையொடு வந்த உரையன் ஆகி,
20
உரி களை அரவம் மான, தானே
அரிது செல் உலகில் சென்றனன்; உடம்பே,
கானச் சிற்றியாற்று அருங் கரைக் கால் உற்று,
கம்பமொடு துளங்கிய இலக்கம் போல,
அம்பொடு துளங்கி ஆண்டு ஒழிந்தன்றே;
25
உயர் இசை வெறுப்பத் தோன்றிய பெயரே,
மடம்சால் மஞ்ஞை அணி மயிர் சூட்டி,
இடம் பிறர் கொள்ளாச் சிறு வழி,
படம் செய் பந்தர்க் கல் மிசையதுவே.
திணை அது; துறை கையறு நிலை; பாண்பாட்டும் ஆம்.
......................வடமோதங் கிழார் பாடியது.

322
உழுது ஊர் காளை ஊழ் கோடு அன்ன
கவை முள் கள்ளிப் பொரி அரைப் பொருந்தி,
புது வரகு அரிகால் கருப்பை பார்க்கும்
புன் தலைச் சிறாஅர் வில் எடுத்து ஆர்ப்பின்,
5
பெருங் கண் குறு முயல் கருங் கலன் உடைய
மன்றில் பாயும் வன் புலத்ததுவே
கரும்பின் எந்திரம் சிலைப்பின், அயலது.
இருஞ் சுவல் வாளை பிறழும் ஆங்கண்,
தண் பணை ஆளும் வேந்தர்க்குக்
10
கண் படை ஈயா வேலோன் ஊரே.
திணையும் துறையும் அவை.
ஆவூர் கிழார் பாடியது.

356
களரி பரந்து, கள்ளி போகி,
பகலும் கூஉம் கூகையொடு, பிறழ்பல்,
ஈம விளக்கின், பேஎய் மகளிரொடு
அஞ்சு வந்தன்று, இம் மஞ்சு படு முதுகாடு;
5
நெஞ்சு அமர் காதலர் அழுத கண்ணீர்
என்பு படு சுடலை வெண் நீறு அவிப்ப,
எல்லார் புறனும் தான் கண்டு, உலகத்து
மன்பதைக்கு எல்லாம் தானாய்,
தன் புறம் காண்போர்க் காண்பு அறியாதே.
திணையும் துறையும் அவை.
தாயங் கண்ணனார் பாடியது.

360
பெரிது ஆராச் சிறு சினத்தர்,
சில சொல்லான் பல கேள்வியர்,
நுண் உணர்வினான் பெருங் கொடையர்,
கலுழ் நனையான் தண் தேறலர்,
5
கனி குய்யான் கொழுந் துவையர்,
தாழ் உவந்து தழூஉ மொழியர்,
பயன் உறுப்பப் பலர்க்கு ஆற்றி,
ஏமம் ஆக இந் நிலம் ஆண்டோர்
சிலரே; பெரும! கேள், இனி: நாளும்,
10
பலரே, தகையஃது அறியாதோரே;
அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது;
இன்னும் அற்று, அதன் பண்பே; அதனால்,
நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை; பரிசில்
நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்புமதி; அச்சு வரப்
15
பாறு இறை கொண்ட பறந்தலை, மா கத
கள்ளி போகிய களரி மருங்கின்,
வெள்ளில் நிறுத்த பின்றை, கள்ளொடு
புல்லகத்து இட்ட சில் அவிழ் வல்சி,
புலையன் ஏவ, புல் மேல் அமர்ந்து உண்டு,
20
அழல் வாய்ப் புக்க பின்னும்,
பலர் வாய்த்து இராஅர், பருத்து உண்டோரே.
திணையும் துறையும் அவை.
தந்துமாறனைச் சங்கவருணர் என்னும் நாகரியர் பாடியது.

363
இருங் கடல் உடுத்த இப் பெருங் கண் மா நிலம்
உடையிலை நடுவணது இடை பிறர்க்கு இன்றி,
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடு திரை மணலினும் பலரே; சுடு பிணக்
5
காடு பதி ஆகப் போகி, தம்தம்
நாடு பிறர் கொளச் சென்று மாய்ந்தனரே;
அதனால், நீயும் கேண்மதி அத்தை! வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை;
மடங்கல் உண்மை மாயமோ அன்றே;
10
கள்ளி வேய்ந்த முள்ளிஅம் புறங்காட்டு,
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்,
உப்பு இலாஅ அவிப் புழுக்கல்
கைக்கொண்டு, பிறக்கு நோக்காது,
இழி பிறப்பினோன் ஈயப் பெற்று,
15
நிலம் கலனாக, இலங்கு பலி மிசையும்
இன்னா வைகல் வாராமுன்னே,
செய் நீ முன்னிய வினையே,
முந்நீர் வரைப்பகம் முழுது உடன் துறந்தே.
திணையும் துறையும் அவை.
...................... ஐயாதிச் சிறுவெண்டேரையார் பாடியது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 02:16:13(இந்திய நேரம்)