தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பருத்தி

பருத்தி
125
பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன,
நெருப்புச் சினம் தணிந்த நிணம் தயங்கு கொழுங் குறை,
பரூஉக் கள் மண்டையொடு, ஊழ் மாறு பெயர
உண்கும், எந்தை! நிற் காண்கு வந்திசினே,
5
நள்ளாதார் மிடல் சாய்த்த
வல்லாள! நின் மகிழ் இருக்கையே.
உழுத நோன் பகடு அழி தின்றாங்கு
நல் அமிழ்து ஆக, நீ நயந்து உண்ணும் நறவே;
குன்றத்து அன்ன களிறு பெயர,
10
கடந்து அட்டு வென்றோனும், நிற் கூறும்மே;
'வெலீஇயோன் இவன்' என,
'கழல் அணிப் பொலிந்த சேவடி நிலம் கவர்பு
விரைந்து வந்து, சமம் தாங்கிய,
வல் வேல் மலையன் அல்லன் ஆயின்,
15
நல் அமர் கடத்தல் எளிதுமன், நமக்கு' எனத்
தோற்றோன்தானும், நிற் கூறும்மே,
'தொலைஇயோன் இவன்' என,
ஒரு நீ ஆயினை பெரும! பெரு மழைக்கு
இருக்கை சான்ற உயர் மலைத்
20
திருத் தகு சேஎய்! நிற் பெற்றிசினோர்க்கே.
திணை வாகை; துறை அரச வாகை.
சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் பொருதவழி, சோழற்குத் துப்பாகிய தேர்வண்மலையனை வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் பாடியது.

299
பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
உழுத்து அதர் உண்ட ஓய் நடைப் புரவி,
கடல் மண்டு தோணியின், படை முகம் போழ
நெய்மிதி அருந்திய, கொய் சுவல் எருத்தின்,
5
தண்ணடை மன்னர், தாருடைப் புரவி,
அணங்குடை முருகன் கோட்டத்துக்
கலம் தொடா மகளிரின், இகந்து நின்றவ்வே.
திணை நொச்சி; துறை குதிரை மறம்.
பொன்முடியார் பாடியது.

324
வெருக்கு விடை அன்ன வெகுள் நோக்குக் கயந் தலை,
புள் ஊன் தின்ற புலவு நாறு கய வாய்,
வெள் வாய் வேட்டுவர் வீழ் துணை மகாஅர்
சிறியிலை உடையின் சுரையுடை வால் முள்
5
ஊக நுண் கோல் செறித்த அம்பின்,
வலாஅர் வல்வில் குலாவரக் கோலி,
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்
புன் புலம் தழீஇய அம் குடிச் சீறூர்,
குமிழ் உண் வெள்ளை பகு வாய் பெயர்த்த
10
வெண் காழ் தாய வண் கால் பந்தர்,
இடையன் பொத்திய சிறு தீ விளக்கத்து,
பாணரொடு இருந்த நாணுடை நெடுந்தகை
வலம் படு தானை வேந்தர்க்கு
உலந்துழி உலக்கும் நெஞ்சு அறி துணையே.
திணையும் துறையும் அவை.
ஆலத்தூர் கிழார் பாடியது.

326
ஊர் முது வேலிப் பார் நடை வெருகின்
இருள் பகை வெரீஇய நாகு இளம் பேடை
உயிர் நடுக்குற்றுப் புலா விட்டு அரற்ற,
சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த
5
பருத்திப் பெண்டின் சிறு தீ விளக்கத்து,
கவிர்ப் பூ நெற்றிச் சேவலின் தணியும்
அரு மிளை இருக்கையதுவே மனைவியும்,
வேட்டச் சிறாஅர் சேண் புலம் படராது,
படப்பைக் கொண்ட குறுந் தாள் உடும்பின்
10
விழுக்கு நிணம் பெய்த தயிர்க் கண் விதவை,
யாணர் நல்லவை பாணரொடு, ஒராங்கு
வரு விருந்து அயரும் விருப்பினள்; கிழவனும்,
அருஞ் சமம் ததையத் தாக்கி, பெருஞ் சமத்து
அண்ணல் யானை அணிந்த
15
பொன் செய் ஓடைப் பெரும் பரிசிலனே.
திணை வாகை; துறை மூதில் முல்லை.
தங்கால் பொற்கொல்லனார் பாடியது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 02:17:38(இந்திய நேரம்)