தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தாமரை

தாமரை
27
சேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ்,
நூற்று இதழ் அலரின் நிரை கண்டன்ன,
வேற்றுமை இல்லா விழுத் திணைப் பிறந்து,
வீற்றிருந்தோரை எண்ணும்காலை,
5
உரையும் பாட்டும் உடையோர் சிலரே;
மரை இலை போல மாய்ந்திசினோர் பலரே;
'புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி
எய்துப என்ப, தம் செய் வினை முடித்து' எனக்
10
கேட்பல்; எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி!
தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும்,
மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும்,
அறியாதோரையும் அறியக் காட்டி,
திங்கள் புத்தேள் திரிதரும் உலகத்து,
15
வல்லார் ஆயினும், வல்லுநர்ஆயினும்,
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி,
அருள, வல்லை ஆகுமதி; அருள் இலர்
கொடாஅமை வல்லர் ஆகுக;
கெடாஅத துப்பின் நின் பகை எதிர்ந்தோரே.
திணை பொதுவியல்; துறை முதுமொழிக்காஞ்சி.
சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.

28
'சிறப்பு இல் சிதடும், உறுப்பு இல் பிண்டமும்,
கூனும், குறளும், ஊமும், செவிடும்,
மாவும், மருளும், உளப்பட வாழ்நர்க்கு
எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம்
5
பேதைமை அல்லது ஊதியம் இல்' என,
முன்னும், அறிந்தோர் கூறினர்; இன்னும்,
அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது
வட்ட வரிய செம் பொறிச் சேவல்
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்
10
கானத்தோர், நின் தெவ்வர்; நீயே,
புறஞ்சிறை மாக்கட்கு அறம் குறித்து, அகத்தோர்
புய்த்து எறி கரும்பின் விடு கழை தாமரைப்
பூம் போது சிதைய வீழ்ந்தென, கூத்தர்
ஆடு களம் கடுக்கும் அக நாட்டையே;
15
அதனால், அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும், பெரும! நின் செல்வம்;
ஆற்றாமை நிற் போற்றாமையே.
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

29
அழல் புரிந்த அடர் தாமரை
ஐது அடர்ந்த நூல் பெய்து,
புனை வினைப் பொலிந்த பொலன் நறுந் தெரியல்
பாறு மயிர் இருந் தலை பொலியச் சூடி,
5
பாண் முற்றுக, நின் நாள் மகிழ் இருக்கை!
பாண் முற்று ஒழிந்த பின்றை, மகளிர்
தோள் முற்றுக, நின் சாந்து புலர் அகலம்! ஆங்க
முனிவு இல் முற்றத்து, இனிது முரசு இயம்ப,
கொடியோர்த் தெறுதலும், செவ்வியோர்க்கு அளித்தலும்,
10
ஒடியா முறையின் மடிவு இலை ஆகி,
'நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லை' என்போர்க்கு இனன் ஆகிலியர்!
நெல் விளை கழனிப் படு புள் ஓப்புநர்
ஒழி மடல் விறகின் கழி மீன் சுட்டு,
15
வெங் கள் தொலைச்சியும், அமையார், தெங்கின்
இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நல் நாடு
பெற்றனர் உவக்கும் நின் படை கொள் மாக்கள்
பற்றா மாக்களின் பரிவு முந்துறுத்து,
கூவை துற்ற நாற் கால் பந்தர்ச்
20
சிறு மனை வாழ்க்கையின் ஒரீஇ, வருநர்க்கு
உதவி ஆற்றும் நண்பின் பண்புடை
ஊழிற்றாக, நின் செய்கை! விழவில்
கோடியர் நீர்மை போல முறைமுறை
ஆடுநர் கழியும் இவ் உலகத்து, கூடிய
25
நகைப்புறன் ஆக, நின் சுற்றம்!
இசைப்புறன் ஆக, நீ ஓம்பிய பொருளே!
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

246
பல் சான்றீரே! பல் சான்றீரே!
'செல்க' எனச் சொல்லாது, 'ஒழிக' என விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே!
அணில் வரிக் கொடுங் காய் வாள் போழ்ந்திட்ட
5
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது,
அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம்,
வெள் எள் சாந்தொடு, புளிப் பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆக,
பரல் பெய் பள்ளிப் பாய் இன்று வதியும்
10
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங் காட்டுப் பண்ணிய கருங் கோட்டு ஈமம்
நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம்
பெருந் தோள் கணவன் மாய்ந்தென, அரும்பு அற
வள் இதழ் அவிழ்ந்த தாமரை
15
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!
திணை அது; துறை ஆனந்தப்பையுள்.
பூத பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தீப் பாய்வாள் சொல்லியது.

397
வெள்ளியும் இரு விசும்பு ஏர்தரும்; புள்ளும்
உயர் சினைக் குடம்பைக் குரல் தோற்றினவே;
பொய்கையும் போது கண் விழித்தன; பைபயச்
சுடரும் சுருங்கின்று, ஒளியே; பாடு எழுந்து
5
இரங்குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப,
இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி,
எஃகு இருள் அகற்றும் ஏமப் பாசறை,
வைகறை அரவம் கேளியர்! 'பல கோள்
செய் தார் மார்ப! எழுமதி துயில்' என,
10
தெண் கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி,
நெடுங் கடைத் தோன்றியேனே; அது நயந்து,
'உள்ளி வந்த பரிசிலன் இவன்' என,
நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ் சூடு,
மணிக் கலன் நிறைந்த மணம் நாறு தேறல்,
15
பாம்பு உரித்தன்ன வான் பூங் கலிங்கமொடு,
மாரி அன்ன வண்மையின் சொரிந்து,
வேனில் அன்ன என் வெப்பு நீங்க,
அருங் கலம் நல்கியோனே; என்றும்,
செறுவில் பூத்த சேயிதழ்த் தாமரை,
20
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த
தீயொடு விளங்கும் நாடன், வாய் வாள்
வலம் படு தீவின் பொலம் பூண் வளவன்;
எறி திரைப் பெருங் கடல் இறுதிக்கண் செலினும்,
தெறு கதிர்க் கனலி தென் திசைத் தோன்றினும்,
25
'என்?' என்று அஞ்சலம், யாமே; வென் வேல்
அருஞ் சமம் கடக்கும் ஆற்றல் அவன்
திருந்து கழல் நோன் தாள் தண் நிழலேமே.
திணை அது; துறை பரிசில்விடை; கடைநிலை விடையும் ஆம்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் பாடியது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 02:27:20(இந்திய நேரம்)