தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பதிப்புரை




பதிப்புரை

உலகில் வாழ் மக்கட்கெல்லாம் உடலும் உளமும் உணர்வும்போல்
திகழ்வன அறம் பொருள் இன்பம் என்னும் மும்முதற் பொருள்கள்.
இவற்றையே பண்பட்ட நாகரிகம் வாய்ந்த புலவர் பெருமக்கள் தம்
பொய்யா நாவால் பாட்டாகவும், நூலாகவும் உலகுக்கு அளித்து
உதவியுள்ளார்கள்.

‘ஞாலம் அளந்த மேன்மைத்’ தமிழ் மொழியகத்து வரலாற்றுக்
காலத்துக்குப் பல்லாயிர ஆண்டுகளின் முன்னமே ‘ஆன்றவிந் தடங்கிய
கொள்கைச்’ சால்பு வாய்ந்த வாய்மையே பாடும் தூய்மைப் புலவர்களால்,
எண்ணிறந்த பாடல்கள் யாக்கப்பெற்றுள்ளன. பாடிய புலவர்களும்
அளவில்லாதவர்களேயாவர்.

எம்மொழிக்கண்ணும் காணப் பெறாததாய், ஈடும் எடுப்புமின்றித்
தமிழ்மொழிக்கண் நின்று நிலவுவது, பொருளதிகாரமென்னும் தெருளுறு சிறப்பு
வாய்ந்த அருள் நூலாகும். இது, மாண்புறு மக்கள் ஒழுகலாற்றினை வகுத்துக்
காட்டுவது. ஒல்காப்பெரும் புகழ்த் தொல்காப்பியராம் செந்தமிழ்ச்சான்றோரால்
செய்யப்பெற்றது. இவர் காலம் ஏறத்தாழ ஐயாயிரத்தறுநூறு யாண்டுகட்கு முன்
என்ப. இதன்கண் அகத்திணை, புறத்திணை என இருபெரும் பிரிவுகள்
காணப்படும். அகத்திணைக்கண் உணர்வுநிலையாம் இன்ப ஒழுகலாறு விரித்து
விளக்கப்பட்டுள்ளது. புறத்திணைக்கண் உடல் உளங்களின் நிலையாம் அறம்
பொருள்கள் பல்வேறு துறைகளாக வகுத்து விளக்கப்பெறுகின்றன.

தொல்காப்பியனார்க்கு முன்னும் பின்னும் வாழ்ந்த செந்நாப்புலமைச்
செல்வர்களால் யாக்கப்பெற்றுக் கடல்கோள்களாலும், பேணாப்
பெருங்குறையாலும் கிட்டாதொழிந்தன போக, எஞ்சியவற்றைப் பாட்டெனவும்
தொகையெனவும் கூட்டித் தொகுத்தனர். அவை, பத்துப்பாட்டெனவும்
எட்டுத்தொகை யெனவும் பெயர் பெற்று வழங்கி வருகின்றன. எட்டுத் தொகை
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை,
அகநானூறு, புறநானூறு எனப் பெயர் பெறும். இத்தொகுப்பின்கண் ஆறு
அகமும் இரண்டு புறமும் காணப்படுகின்றன. அகத்தை மும்மூன்றாக அமைத்து
ஒவ்வொன்றன் ஈற்றிலும் ஒவ்வொரு புறம் அமைத்துள்ளார்கள். இவ்வமைப்பு,
அகம், கைக்கிளை ஐந்திணை பெருந்திணை எனவும், புறம், சிறப்பும் பொதுவும்
எனவும் பிரிந்தொருங்கியலும் அருமையைப் புலப்படுத்தும்.

புறநானூற்றின்கண், அறமும் பொருளு முதலாக வாழ்க்கைக்கு
இன்றியமையாத ‘மறம், மானம், மாண்ட வழிச்செலவு, தேற்றம்’ முதலிய
நற்பண்புகளும், கடமையும், உற்றுழி யுதவியூக்கும்  நற்றிறமும், உயிரொடு
கெழுமிய செயிர்தீர் நட்பும், செங்கோன்மையும், கடவுட்பற்றும்,



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 03:31:01(இந்திய நேரம்)