தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முகப்பு



iv

புறநானூறு
 

பற்றும் பகைமையொடு பொருது நகைமையை நாடெலாம் பெருக்கும் நலமும்,
புகழ் பெருக்கும் புலமும் பிறவும் செறிந்து காணப்படும்.

இவையே உழவு, வாணிகம், அரசியல், பொருளாக்கம், ஒற்றுமை,
குழுஉயர்வு, கலைப்பண்பு முதலிய வளர்ந்தோங்குவதற்கு உறுதுணையாவன.
இந்நூலின்கண் நூற்றுக்கணக்கினரான சங்கச்சான்றோர்களால் பாடப் பெற்ற
நானூறு பாட்டுக்கள் அமைந்துள்ளன. பண்டைய உரையாசிரியர் ஒருவர்
இருநூற்று அறுபத்தொன்பது பாடல்களுக்குச் செவ்விய உரையொன்று
இயற்றியுள்ளனர். ஒவ்வொரு பாட்டிலும் பாடினோர், பாடப்பட்டோர், திணை,
துறை முதலியவைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. எஞ்சிய பாட்டுகளுக்கு
இதுகாறும்யாரும் உரை யெழுதி வெளிப்படுத்தவில்லை. அத்தொண்டினைச்
செய்ய, நம் கழகம் முன் வந்தது. அதனைச் செய்து முடிக்கச் ‘சித்தாந்த
கலாநிதி’ ஆசிரியர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் வாய்ப்பாக
முன் நின்றனர்.

இவர்கள் உரையில் பண்டையுரையாசிரியர் உரையை அடியொற்றி
எளிதில் புரிந்து கொள்ளுமாறு கண்ணழித்தும், ஏனையவற்றிற்குப் புத்தம்
புதிய செவ்விய உரை கண்டும், உரை விளக்கமும், ஆராய்ச்சிக் குறிப்பும்,
வரலாற்று உண்மையும், இவ்வுண்மையை வலியுறுத்த ஆங்காங்கே
கல்வெட்டாராய்ச்சிக் குறிப்புகளும், தக்க அகப்புறச் சான்றுகளுடன் நன்கு
விளக்கியுள்ளமை காணலாம். உரையின் திட்ப நுட்பச் சிறப்போர்ந்து
அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவரும் தமிழ்ப்
பேராசிரியருமாகிய டாக்டர் அ. சிதம்பரநாதச் செட்டியார் அவர்கள்
அணிந்துரை நல்கியுள்ளார்கள்.

இந்நூலைத் தனித்தனி இருநூறு பாட்டுகள் கொண்ட
இருபெருநூலாகக் கையடக்க வாய்ப்பமைய அச்சிட்டுள்ளோம். முதற் பகுதி
1947 இல் வெளிவந்துள்ளது. அதைப்போலவே இதனையும் தமிழுலகம் போற்றி
யாதிரிக்குமென நம்புகின்றோம். இந்நூல்உண்மையான தமிழக வரலாறாகும்.
மேல் தமிழக வரலாற்றை விரித்தெழுது வோர்க்கும், தமிழ்ப் பற்றும்
நாட்டுப்பற்றும் கொண்டு அன்பும் அருளும் ஆண்மையும், ஒற்றுமையும் நட்பும்
வாய்ந்து விழுமிய ஒழுக்கம் ஒழுகி வாழவிழையும் யாவர்க்கும் உறுதுணையாக
நிற்பது இந்நூலே யாகும். இதன்கண், ஏட்டுப்படிகள் பல கொண்டு
ஒப்புநோக்கித் திருந்திய பாடங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. இதனை
மாணவர்கள், ஆசிரியர்கள், பெருமக்கள் போற்றிக் கற்றுத் தமிழையும்,
நாட்டையும் பண்டைய நிலைபோல் உலகுக்கு வழிகாட்டியாகச் செய்வார்களாக.

இச் சிறந்த அரிய பெரிய வுரையை ஆக்கித்தந்த ‘சித்தாந்த கலாநிதி’
ஆசிரியர், ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை யவர்களுக்குக் கழகத்தார் நன்றி
உரியதாகின்றது.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 03:31:11(இந்திய நேரம்)