தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முகப்பு



vi

புறநானூறு
 

மேலுள்ள பகுதிகளை ஒப்புநோக்கியபோது, சில பாட்டுகளில் அச்சுப்
பிரதியில் விடுபட்டிருந்த சில அடிகளும் சிலவற்றில் சில திருத்தங்களும்
காணப்பெற்றன. அவற்றை மட்டில் அச்சுப் பிரதியில் ஆங்காங்கே
குறித்துக்கொண்டோம். அவ்வாறு ஒப்புநோக்கும் பணி 1927 ஆம் ஆண்டு
சூன் மாதம் 27 ஆம் நாள் முடிவுற்றது. ஆயினும் இப்பிரதி திரு. டாக்டர்
ஐயரவர்கட்குக் கிடைக்காது போனது பற்றி என் மனதில் ஐயமொன்று
ஊசலாடிக் கொண்டிருந்தது நிற்க.

பின்பொருகால், எனக்கு இளமையில் தமிழறிவுறுத்திய ஆசிரியரும்
திண்டிவனம் A.A.M. ஹைஸ்கூலில் தமிழாசிரியராய் இருந்தவருமான சீகாழி
திரு.கோவிந்தசாமி ரெட்டியாரவர்கள் வைத்திருந்த ஐங்குறு நூற்றுக்
கையெழுத்துப் படியையும், அச்சாகி வெளிப்பட்டிருந்த ஐங்குறு நூற்றையும்
ஒப்புநோக்கும் வாய்ப்புப்பெற்றேன். அப்போது அச்சுப் பிரதியில்
காணப்படாத சில வேறுபாடுகள் கிடைத்தன. அதனால்,
டாக்டர் திரு. ஐயரவர்களுடைய முயற்சிக்கும் அகப்படாத நிலையில்
ஏடுகள்பல தமிழ்நாட்டில் உள்ளன என்று ஐயம் தெளிந்தேன். இத்
தெளிவால் பழைய ஏடுகளைத் தேடுவதில் வேட்கையொன்று என்
உள்ளத்தே கிளர்ந்தெழுவதாயிற்று. இதன் பயனாகவே, சைவசித்தாந்த
நூல்களுள் சிறப்புடைய வொன்றாகக் கருதப்படும் ஞானாமிர்தத்துக் குரிய
ஏடுகள் திருக்கோவலூர்த் தாலூக்கா சிறுமதுரை (ஏனாதிவாடி)
யினின்றும், திருநெல்வேலிக் கண்மையிலுள்ள இராசவல்லிபுரத்துச்
செப்பறையினின்றும் பிறவிடங்களினின்றும் கிடைத்தன.

இந்நிலையில் யான் வெளியிட்ட ஐங்குறுநூறு சார்பாக
டாக்டர் திரு. ஐயரவர்கட்கும் எனக்கும் நடைபெற்ற கடிதப்போக்குவரவால்
ஏடு தேடி ஒப்புநோக்கி இன்புறும் முயற்சியில் எனக்குண்டான வேட்கை
திண்ணிதாய் மேன்மேலும் முயலுமாறு செய்தது. என் முயற்சியின் திண்மை
கண்ட நல்லறிஞர் சிலருடைய துணையால் பதிற்றுப்பத்து, நற்றிணை
ஆகிய இவற்றின் ஏடுகள் கிடைக்கப்பெற்றுப் புதிய பாட வேறுபாடுகளும்
திருத்தங்களும் கண்டு இன்புற்றேன்.

இந்நாளில் இம்முயற்சிகட்குப் பொருளுதவி செய்யும் செல்வர்கள்
அரியராய் இருப்பது கண்டு யான் மனம் தளர்ந்திருந்தபோது தென்னிந்திய
சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழக அமைச்சராய் இருந்த திரு. வ. திருவரங்கம்
பிள்ளையவர்கள், இவ்வாராய்ச்சிகளை முடித்துக் கொண்டு உரையில்லாத
பகுதிகட்கு உரையும் எழுதினால் இவற்றைக் கழகத்தின் வாயிலாகவே
வெளியிடலாமெனக் கட்டுரைத்தார்கள். சின்னாட்குப்பின் அவர்கள், இம்
மண்ணுலக வாழ்வை நீத்தேகியது எனக்குப் பெருவாட்டத்தை
யுண்டுபண்ணிற்று; ஆயினும், அவர்களுடைய உரிய தம்பியும் என் இனிய
நண்பருமாகிய திரு. வ. சுப்பையா பிள்ளையவர்கள் என்னை
ஊக்கினார்கள். யானும் என் பணியைச் செய்து வந்தேன்.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 03:35:17(இந்திய நேரம்)